தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுவிட்டதாக கனடாவில் ஊடகங்களுக்கு சுமந்திரன் தெரிவித்த கருத்தில் தவறில்லை.

283

26THSUMINTHARAN_1024923e

கனடாவில் உள்ள ஈகுருவி என்கின்ற இணையத்தளத்திற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வியின்பொழுது, ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றது. இவ்விடயம் பற்றி உங்களின் கருத்து என்ன? என்று வினவ அதற்கு பதிலளித்த சுமந்திரன் அவர்கள், நான்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றது. நான்கு கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டமைப்பாக பதிவு செய்திருக்கின்றோம்.

070610_sinha_pic_002 TNA1

சட்டத்தில் இரு பகுதிகள் இருக்கின்றது. ஒன்று தனியாக அரசியல் கட்சியாக பதிவு செய்வது. மற்றையது பதிவு செய்யப்பட்ட கட்சிகள் கூட்டாகச் செயற்பட்டால் அதனை கூட்டமைப்பாக பதிவு செய்வது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்ப, இதற்கு பதில் வழங்கிய சுமந்திரன், கூட்டமைப்பு எனும் பெயரில் நான்கு கட்சிகளும் பதிவு செய்யப்பட்டு இணைந்து இயங்குகின்றது. பதிவு செய்யுங்கள் என அவர்கள் அதைக் கேட்கவில்லை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றால், நான்கு பதிவு செய்யப்பட்ட அரசியல்கட்சிகள் இருக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை 05வது கட்சியாக பதிவு செய்யுங்கள் எனக்கேட்கின்றார்கள்.

மேலும் சுமந்திரன் இந்த நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்த கூட்டமைப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணையகம் கூறுகின்றது என்னவென்றால், இந்த நான்கு கட்சிகளையும் விட்டுவிட்டு 05வது கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யுங்கள் என்றுதான்.

இந்தக் கட்சியை பதிவுசெய்வதற்கு சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தடையாக இருக்கின்றார்கள் என்று ஊடகவியலாளர் வினவ, அதுதான் நான் கூறுகின்றேன். நாங்கள் நான்கு கட்சிகளும் இணைந்த ஒரு கூட்டமைப்பு. நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக பதிவுசெய்திருக்கின்றோம். ஏன் இன்னுமொரு புதிய கட்சியினைத் தொடங்கவேண்டும். சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் போன்றோர் கட்சி பதிவு செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் தான் காரணம் என்று கூறுகின்றார்களே என்று கேள்வியெழுப்ப, சில சில கட்சிகள் தொடர்ந்து தங்களது பெயரில் இயங்குவதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஏன் எனில் தங்களுக்கென்று ஒரு பின்னணி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் தொடர்வதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை.

தமிழரசுக்கட்சியில் இணைவதற்கும் விரும்பம் இல்லை. புதிய அரசியற் கட்சியினை பதிவுசெய்தால் அதில் அங்கத்தவர்களாக இருக்கலாம் என்று நினைக்கின்றார்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பலம் பொருந்தியதாகவே தற்பொழுதும் இருக்கின்றது என கேள்வி எழ, பதில் வழங்கிய சுமந்திரன், அது ஒரு கூட்டமைப்பு. கட்சி அல்ல. பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. பதிவு செய்யப்படவில்லை எனக்கூறுவது தவ றானதொரு விடயம். அதுவும் சரியான முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டால் தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்று வினவப்பட்டபொழுது, அதில் அங்கத்துவம் வகிக்கும் ஏதாவதொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும். அதற்கென தனியான சின்னத்தில் போட்டியிடமுடியாது.தமிழரசுக்கட்சியினது நிலைப்பாடும் அது ஒரு கூட்டமைப்பாக தொடர்ந்தும் இயங்கவேண்டும் என்பதுதான்.

suresh_premachanran_1
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுவிட்டதென்று கூட்டமைப்பிலுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவித்த விடயம் தொடர்பாக, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் இவ்விடயம் தொடர்பாக வினவியபொழுது, இது ஒரு பொய்யான விடயம். ஒரு கட்சி பதிவுசெய்யப்படுவதாகவிருந்தால் அதனது யாப்பு மிக அவசியம். நாம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயற்படுவதாயின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை. இது எவ்வாறெனில் எங்களது தமிழ்க்கட்சிகள் அனைத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரில் செயற்படுகின்றோம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு ஒரு கடிதம் மாத்திரம் வழங்கப்பட்டது. அதில் மாவை சேனாதிராஜா அவர்கள் கையெழுத்திட்டிருக்கின்றார். அது கட்சியினது பதிவு அல்ல.

நாங்கள் கூட்டாக செயற்படுகின்றோம் என்ற கடிதம் மாத்திரம்தான் அது. அதற்கு சட்ட வரையறை எதுவும் பெரிதாக இல்லை. இந்தப்பெயரை வேறுயாருக்கும் கொடுக்கவேண்டாம் என்பதற்காகவே அந்தக் கடிதம். வேறு எதுவும் இல்லை. அதற்காக இந்தப்பெயரை வேறு எவருக்கும் வழங்கமாட்டார்கள் என்றும் அல்ல. இது ஒரு கேலியான சுமந்திரனின் கருத்தாகும். அந்த ஊடகவியலாளர் மாநாட்டில், அவ்வாறெனில் உங்களின் கட்சியினது சின்னம் என்னவென வினவிய பொழுது, இருக்கும் ஒரு சின்னத்தினை பயன்படுத்தலாம் என கூறியிருந்தார். இவ்வியடம் புலம்பெயர் வாழ் மற்றும் ஈழத்தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக சுமந்திரன் கூறிய மாபெரும் பொய்யாகும்.

பொய் கூறுவது இயல்பு என்பதற்காக சட்டத்தரணிகளானவர்கள் இவ் வாறு கூறக்கூடாது. ஒரு கட்சியை பதிவுசெய்வதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்? என நினைக்கிறீர்கள் எனக்கேட்டபோது, வேறு யாருமல்ல. இதற்கு காரணம் தமிழரசுக்கட்சிதான். மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். கூட்டமைப்பு இன்னமும் பதிவுசெய்யப்படவில்லை. தேர்தல்கள் ஆணையாளர் எம்மை அழைத்து புதுக்குடியிருப்பு தேர்தல் நடைபெற்று முடிந்தபின்னர் கட்சியினை பதிவுசெய்யலாம் என்று தெரிவித்திருந்தார். துரதிஷ்டவசமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நான்கு கட்சியினையும் அழைத்து பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவை சேனாதிராஜாவிடம் தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தார். புதுக்குடியிருப்பு தேர்தல் முடிந்த பின் கட்சியினை பதிவுசெய்யவேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது. ஆனால் இதுவரை இன்னமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்படவில்லை. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் செயலாக எதனையும் தெரிவிக்கக்கூடாது என்று தனது கருத்தினை முன்வைத்தார் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்.

sithathan

இதேவேளை புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இவ்விடயம் தொடர்பாக கருத்துத்தெரிவிக்கையில், சுமந்திரனின் கருத்தின்படி, கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை. நான்கு கட்சிகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அவர் கூறுவதாகவிருந்தால் கட்சி பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அதற்கான சின்னம் என்னவென்றும் தலைவர், செயலாளர், பொருளாளர் என்கின்ற கேள்வியும் அங்கு எழுப்பப்படுகின்றது. இதற்கு அவர் சரியான பதிலைக்கூறுவாராகவிருந்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று பொருள்படும்.

ஒரு கனேடியன் இணையத்தளத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கருத்துத்தெரிவித்ததைக்கொண்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது என்கின்ற சொற்பதத்தினை விமர்சித்துப்பார்க்கும் தேவை எமக்கு இல்லை. இவ்விடயத்தினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கூறியிருந்தால் ஒரு முக்கிய விடயமாகக்கொண்டு பார்க்கின்ற தேவை கட்சிகளுக்கு இருக்கின்றது. அவர் எந்த நோக்கத்திற்காக இதனைத்தெரிவித்துள்ளார் என்பதை நாம் முதலில் பார்க்கவேண்டும்.

வெளிநாடுகளில் இருக்கும் ஊடகவியலாளர்கள் மதியற்றவர்கள் அல்ல. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா? எனவும் அதற்கான சின்னம் என்ன? என்றும் கேள்வியெழுப்பினர். இதற்கான சுமந்திரன் அவர்களின் பதில் காத்திரமானதா? என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்வார்கள். இதனை பெரிதாகக்கூறிக்கொள்வதை விட நான்கு கட்சிகளையும் சுமந்திரன் அவர்கள் குறைத்து பேசுவதைப்போன்று அவரது பேச்சு அமைந்திருந்தது. இதில் உண்மையில்லை. கட்சியின் தலைவர் என்ற வகையில் ஒன்றைக் கூறிக்கொள்கின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையில்கொண்டு அவர்களது விடிவுக்காக போராட்டங்களை நடாத்திய அந்த வரிசையில் எமது கட்சியும் பணியாற்றியதொன்றாகும்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்தால்தான் எங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற கருத்து தவறானது. எமது கட்சியினை விட்டு இன்னொரு கட்சிக்கு நாம் தாவ வேண்டியதன் அவசியமும் கிடையாது. தேர்தல்கள் வருகின்றபொழுது நாம் தமிழ் இனத்தின் விடிவுக்காக ஒரு கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி, அதனடிப்படையில் செயற்படுகின்றோம். எங்கள் கட்சிக்கென்று தனியான முகவரி இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Selvam-adaikalanathan

இவ்விடயம் தொடர்பாக ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபொழுது, எந்தவகையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பதனை பார்க்கவேண்டும். என்னைப்பொறுத்தவரையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பது பதிவுசெய்யப்படவில்லை. தேர்தல்கள் ஆணையாளரிடம் இந்த நான்கு கட்சிகளும் கூட்டாக போட்டியிடுகின்றன என்று ஒரு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்சிகள் காணப்படும் நிலையில் தற்பொழுது கூட்டமைப்பாக இருக்கக்கூடிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, சுமந்திரன் கூறியதைப்போன்று நான்கு கட்சிகளிலும் இருக்கக்கூடிய சின்னத்தில் ஏதோவொரு சின்னத்தில் கூட்டமைப்பாக போட்டியிட முடியும் என்பது எனது கருத்து. ஆனால் கூட்டமைப்பாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என சுமந்திரன் கூறும் கருத்து முற்றிலும் தவறு. அவ்வாறு கூறியிருந்தால் ஏன் இவ்வாறு கூறினீர்கள் என அவரிடம் வினவவேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவுசெய்யவேண்டும் என்று கட்சிகள் தான் முண்டியடித்துக்கொள்கின்றதே தவிர, தமிழரசுக்கட்சி இல்லை என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றாகும்.

SHARE