தமிழ் தேசிய அரசியலில் தொடர் நிகழ்வான “துரோகியாக்கப்படல்”

396

– டி.பி.எஸ்.ஜெயராஜ்

துரோகியாக்கப்படல் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப தோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப் பயன்படுத்தாமல் “துரோகியாக்கப்படல்” என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது, உண்மையான காட்டிக்கொடுப்பு அல்லது உண்மையான தேசத்துரோகம் புரிபவர்களுக்கும் மற்றும் நம்பிக்கை மோசம் புரிபவர்கள் அல்லது துரோகமிழைப்பவர்கள் என்று பெயரிடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பிரித்துக் காண்பிப்பதற்காகவே.

மணிக்கூட்டு வலமாக படத் தொகுப்பில் - வேலுப்பிளை பிரபாகரன், கோபாலசாமி மகேந்திரராஜா (மாத்தையா), அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், வி. நவரத்தினம், அல்பிரட் துரையப்பா, இராவணன் - விபீஷணன், வீரபாண்டிய கட்டபொம்மன், லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் நீலன் திருச்செல்வம்

யதார்த்தத்தில் துரோகிகள் என்று அவர்களது அரசியல் எதிரிகளால் அழைக்கப்படுபவர்கள் அவர்கள்மீது சாட்டப்படும் குற்றங்களின்படி குற்றவாளிகள் இல்லை, மற்றும் அத்தகைய ஒரு விளக்கத்துக்கு தகுதியானவர்களும் இல்லை. துரோகியாக்கப்படல் என்பது பயங்கரமான கோயபல்சியன் நடவடிக்கையாகும் அதன்படி அரசியல் எதிரிகள் துரோகிகள் என போலியாகச் சித்தரிக்கப் படுகிறார்கள் அல்லது படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள்.

சமகால தமிழ் அரசியல் பிரசங்கத்தில் குறிப்பிடும் ‘துரோகி’ என்கிற முத்திரை, பொதுவாக தமிழர் பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் மற்றும் எதிரியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளவர்கள் என குற்றம் சாட்டப்படும் தமிழர்களையே குறிக்கிறது. அத்தகைய நடவடிக்கைகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் அவசியமில்லை. அதற்குத் தேவையானதெல்லாம் நாஸி ஜேர்மனியின் ஹெர் கோயபல்ஸ் வாதிட்டதைப்போல, துரோகி என்கிற கூவலை பல நிலைகளிலிருந்தும் திரும்பத் திரும்ப இடைவிடாது கூவும் பிரமாண்டமான பிரச்சார முயற்சி மட்டுமே.

போல் ஜோசெப் கோயபல்ஸ்

அடோல்ப் ஹிட்லரின் பிரச்சார அமைச்சராக இருந்த போல் ஜே கோயபல்ஸ், “ நீங்கள் ஒரு பொய்யை பெரிய அளவில் சொல்லி அதையே திரும்ப திரும்ப கூறினால் இறுதியில் மக்கள் அதை நம்பிவிடுவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். துரோகி என்கிற குற்றச்சாட்டை திரும்பத் திரும்ப தொடர்ந்து சொல்லி வருவது, தமிழ் தேசியவாத அரசியலின் செயல்முறை பிரயோகமாகும். ஷேக்ஸ்பியர் சொல்லியருப்பதைப் போல, இந்த பிரச்சார யுத்தத்தில் கூட்டத்தில் ஒருவர் துரோகி எனக்கூவினால் ஏனையோரும் அவரைத் தொடர்ந்து அதையே கூவுவார்கள்.

தமிழ் தேசியவாத அரசியலில், தங்கள் அரசியல் எதிரிகள் என்று உணரப்பட்டவர்களை துரோகிகள் என்று அழைப்பதற்கு கோயபல்ஸின் நுட்பம் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. சாதாரணமாக வித்தியாசமான ஒரு அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதே அந்த விடயத்தில் அவர்களை துரோகிகள் என அழைப்பதற்கோ அல்லது எதிரிகளுடன் கூட்டு வைத்துள்ளார்கள் என்று சொல்வதற்கோ போதுமானது. இந்த இரண்டு விஷயமும் பிரச்சினைக்குரியதாக இருப்பதுடன் எதிரி என்பதை தெளிவாக வரையறுப்பதும் கடினமாக உள்ளது. மேலும் இந்த விடயத்தின் தன்மையும் அதேபோல எதிரியை அடையாளம் காண்பதும் அவ்வப்போது மாற்றங்களுக்கு உள்ளானது. இந்த மாற்றங்கள் இருந்த போதிலும் மாறாமல் இருந்தது துரோகியாக்கப்படல் மட்டுமே. துரோகியாக்கப்படல் நடவடிக்கையின் வெற்றி உண்மையான பொருள் மூலம் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் எது உண்மையாக இருக்கும் எனப் பிரச்சாரம் செய்யும் திறன் மூலமே அது தீர்மானிக்கப்பட்டது. அது மூர்க்கத்தனமான தமிழ் தேசிய அரசியலில் நிலவிய முழுமையான உண்மையோ அல்லது உயர்ந்த யோசனையோ அல்ல. இறுதியில் வெற்றியடைந்தது எதுவென்றால் ஒரு பக்கத்தினரை துரோகி என வர்ணம் பூசும் மறுபக்கத்தினரின் சக்தி வாய்ந்த பிரச்சாரமே.

தங்க மூளை என்பதற்கு ஒரு சுவராஸ்யமான உதாரணம், ஒரு காலத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தங்க மூளை என வர்ணிக்கப்பட்ட முன்னாள் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினத்தின் விதிதான். கட்சியின் ஸ்தாபக அங்கத்தவரான பாராளுமன்ற உறுப்பினர் நவரத்தினம் 1968 கட்சிப் பதவியை உதறித் தள்ளிவிட்டு தமிழர் சுயாட்சிக் கழகம் என்கிற கட்சியை உருவாக்கினார். இலங்கை தமிழரசுக் கட்சி தழுவி வந்த கொள்கையான கூட்டாட்சி முறைக்கு மாறாக அவர் மிகவும் தீவிரவாத கொள்கையான தமிழ் அரசாங்கம் அல்லது சுயாட்சி முறையை பின்பற்றினார். நவரத்தினத்தின் கட்சி 1970 தேர்தலில் தமிழருக்கு சுயாட்சி என்கிற கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டது,அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டாட்சி முறையான தீர்வையே தொடர்ந்து வாதிட்டு வந்தது. இலங்கை தமிழரசுக் கட்சி நவரத்தினத்தின் பிரிவினைவாத கொள்கை தமிழர்களுக்கு பாதகமானது எனக் கண்டித்து, தமிழர் சமூகத்தை பெரிய ஆபத்தில் சிக்கவைத்துள்ளதாக அவர்மீது குற்றம் சாட்டியது. 1970ல் புளியங்கூடலில் பிரபலமான ஒரு வாய்வழி தர்க்கம் இடம்பெற்றது, அதில் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் வி.நவரத்தினம் ஆகியோர் ஒரு பகிரங்க விவாதம் நடத்தினார்கள். பிரிவினைவாதம் தமிழர்களுக்கு தற்கொலைக்குச் சமமானது என அமிர்தலிங்கம் நாவன்மையுடன் வாதிட்டார். புதிய கட்சியை உருவாக்கியது தமிழர் ஐக்கியத்தை துண்டாடும் செயல் என அங்கு தெரிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் வி.நவரத்தினமும் அவரது சக வேட்பாளர்களும் தமிழர் விடயத்தில் துரோகிகள் எனத் தூற்றப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் தோல்வியுற்றதுடன் 1970 தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி மீண்டும் ஒருமுறை 13 ஆசனங்களுடன் தனிப் பெரும் தமிழ்க்கட்சியாக தேர்வானது.

தங்கமூளை மனிதர் எனப் புகழப்பட்ட நவரத்தினம் இப்போது அரசியலில் மறக்கடிக்கப்பட்டதுடன் துரோகி என்கிற களங்கத்துக்கும் ஆளானார். விஷயங்கள் மாற்றம் பெற்றன. இலங்கை தமிழரசுக் கட்சியும் மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் ஒன்றாக இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்) எனும் அமைப்பை 1976ல் உருவாக்கின. இப்போது ரி.யு.எல்.எப் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு தேவை என வாதிடத் தொடங்கியது. பிரிவினைவாதம் தற்கொலைக்கு ஒப்பானது எனக்கூறிய அதே தொகுப்பிலிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகள், இப்போது தமிழ் ஈழத்தை முன்மொழியும் தீவிர அமைப்புக்களாக மாறினர்.

அத்தகைய மாற்றமடைந்த சூழ்நிலையில் நவரத்தினம் சொன்னது சரியென நிரூபணமாகியுள்ளது என ஒருவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. பிரிவினைவாதத்தை பிரதான தமிழ் கட்சிகள் ஆதரித்த போதிலும், சுயாட்சியை பிரேரித்ததுக்காக துரோகி என அழைக்கப்பட்ட மனிதர் தொடர்ந்தும் மறக்கடிக்கப் பட்டவராகவே இருந்தார். 1977 தேர்தலில் ரி.யு.எல்.எப் வெற்றி வாகை சூடியபோதிலும், நவரத்தினம் திரும்பவும் தோல்வியடைந்தார். ஒரு தீர்க்கதரிசியாக கௌரவப் படுத்தப்பட வேண்டிய நவரத்தினம் இன்னமும் துரோகி என்ற பெயருடன் வாடிக் கொண்டிருந்தார். அதுதான் தமிழ் தேசிய அரசியலில் இருந்த பிரச்சார பலம். ஒரு தீர்க்கதரிசி துரோகியாக சித்தரிக்கப்பட்டு நிரந்தரமாகவே கண்டனத்துக்கு இலக்கானார். சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடற் புராணத்தில் உள்ள ஒரு கதை, தனது பக்தரான திருவாசகம் பாடிய மாணிக்கவாசகருக்காக சிவன் எப்படி உதவினார் என்பதை விபரிக்கிறது. அரசனின் கட்டளையிலிருந்து மாணிக்கவாசகரைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் நரிகளைப் பரியாக்கியும், பரிகளை நரிகளாகவும் மாற்றி அவருக்கு உதவியதை இந்தக் கதை விபரிக்கிறது. தமிழ் தேசியவாதிகளின் பிரச்சாரமும் இப்படித்தான் ஒரு வீரனை துரோகியாகவும் மற்றும் ஒரு துரோகியை வீரனாகவும் மாற்றும் வலிமை மிக்கது.

“நவரத்தினம், தங்கமூளை என வர்ணிக்கப்பட்ட ஒரு மனிதர் இப்போது அரசியலில் மறக்கடிக்கப் பட்டவர் அவரது கௌரவம் துரோகி என களங்கப்பட்டுள்ளது. விஷயங்கள் மாறிவிட்டன. இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இரண்டும் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை(ரி.யு.எல்.எப்) 1976ல் உருவாக்கின”.

இந்தத் துரோகிப்பட்டம் சூட்டப்படல் நடவடிக்கையினைத் தொடர்ந்த அபத்தமான தர்க்கத்தை கபட நாடகமாகத்தான் கருத முடியும், ஆனால் உண்மையில் அது படிப்படியாக ஒரு தீவிரமான வடிவத்தை ஏற்றது. மக்கள் துரோகிகளாக கருதப்பட்டு கொல்லப்பட்டது இனிமேலும் ஒரு கேலிக்கூத்தான நடவடிக்கையாக இருக்க முடியாது. அது சோகமான ஒன்றாக மாறியது. இந்த துரோகியாக்கப்படல் நடவடிக்கை பெருமளவிலான அரசியல்வாதிகளை, அரசாங்க அதிகாரிகளை, காவல்துறை மற்றும் பாதுகாப்பு நபர்களை,ஊடகவியலாளர் போன்றவர்களை போட்டியிடும் அரசியல்வாதிகளால் துரோகிகளாகக் கருதி கொல்லுமளவுக்கு வழியமைந்ததுதான் தமிழ் அரசியலில் உள்ள மிகப் பெரிய சோகம்.

மேலும் எண்ணற்ற நபர்கள் உடல் ரீதியாக கொல்லப்படா விட்டாலும், துரோகிகளாக பட்டம் சூட்டப்பட்டு குணாதிசய ரீதியில் கொல்லாமல் கொலை செய்யப்பட்டார்கள். அநேகமாக எல்லா தமிழ் அரசியல் குழுக்கள் மற்றும் அமைப்புகள் யாவும் இந்த துரோகிப்பட்டம் சூட்டப்படலில் ஈடுபட்டிருந்தார்கள், ஆனால் அதில் பெரும் பங்குக்கு உரித்துடையவர்கள் மக்களுக்கு துரோகிகள் எனப் பட்டம் சூட்டி அவர்களை பூண்டோடு அழித்த புலிகளே. தமிழ் சமூகத்தின் சிறப்பான மனிதர்களை துரோகிகளாக கருதி அவர்ககளை விரிவாக அழித்தொழித்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ).

சுரேஸ் என்கிற கந்தையா பிரேமச்சந்திரன் - யாழ்ப்பணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுடன் - மார்ச் 2015

புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் அரசியலின் உயர்மட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்ககை ஸ்ரீலங்கா மற்றும் இந்திய ஆயுதப்படையினரால் கொல்லப்பட்டவர்களை விட அளவுக்கு அதிகம். இந்த துரோகத்தனமான நிகழ்வின் மற்றொரு அம்சம் எதுவும் நிலையானதல்ல என்பதே. அனைத்துமே மாறக்கூடியவை . தமிழ் அரசியல்கட்சிகள் மற்றும் குழுக்கள் எல்.ரீ.ரீ.ஈ யினை எதிர்த்தபோது அல்லது புலிகளை விட்டு சுதந்திரமாகியபோது, அவர்களுக்கு துரோகிகள் என முத்திரையிடப்பட்டது. எனினும் எல்.ரீ.ரீ.ஈ அல்லாத சக்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை (ரி.என்.ஏ) உருவாக்கியதுடன் புலிகளுக்கு அடிபணிந்து நடப்பவர்களாக மாறியதுடன் இந்த துரோகி என்கிற களங்கம் அகன்று போனது. துரோகிகள் தேசப்பற்றாளர்களாக சுத்திகரிக்கப் பட்டார்கள். இதன்படி ஒரு காலத்தில் காட்டிக்கொடுப்பவர் என வர்ணிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரான சுரேஸ் என்கிற கந்தையா பிரேமச்சந்திரன் இப்போது ரி.என்.ஏயின் பேச்சாளராகி ஒரு தமிழ் தேசப்பற்றாளராக பேசி வருகிறார்.

மறுபக்கத்தில் மாத்தையா என்கிற கோபாலசாமி மகேந்திரராஜா மற்றும் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் வித்தியாசமான அனுபவங்களுக்கு உள்ளானார்கள். மாத்தையா எல்.ரீ.ரீ.ஈ யின் துணைத் தலைவராக இருந்த அதேவேளை கருணா எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்தார், அவர்கள் இருவருமே மற்றவர்களை துரோகிகள் என கண்டனம் தெரிவித்து கொலை செய்ய ஆணை வழங்க இயலுமானவர்களாக இருந்தார்கள். அவர்களின் கட்டளைப்படி துரோகிகள் என கருதப்பட்டு பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும் இந்த இரண்டு மூத்த புலித் தலைவர்களும் வௌ;வேறு கட்டங்களில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் குற்றவாளியாக்கப்பட்டார்கள், அவர்கள் துரோகிகளாக உருமாறினார்கள். அவர்களின் விசுவாசிகளும் துரோகிகள் எனக் கருதப்பட்டு கொல்லப்பட்டார்கள். மாத்தையாவும் கூட கொல்லப்பட்டார், ஆனால் கருணா சரியான தருணத்தில் வேறு கப்பலில் பாய்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.

யாராவது இன்னொருவரை துரோகி என பழிகூறி அவனையோ அல்லது அவளையோ கொல்வதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது என்கிற தார்மீகக் கேள்விக்கு அப்பால், அதில் பயங்கரமான ஒரு உண்மை உள்ளது, துரோகிகள் என கருதி கொல்லப்பட்டவர்களில் அநேகர் அந்த விளக்கத்துக்கு சற்றும் பொருத்தமற்றவர்கள் ஆவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களை எதிர்ப்பவர்களைவிட வித்தியாசமான அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தார்கள். பல சந்தர்ப்பங்களில் துரோகிகளாகக் காட்டப்பட்டவர்கள் அரசியல் வழிகளில் மற்றவர்கள் முன்னேறுவதற்கு இடையூறாக இருந்தவர்கள் ஆவர். அரசியல்வாதிகள் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக சந்திரனை பிடித்துத் தருவதாகக் கூட வாக்குறுதிகளை வழங்கினார்கள். பின்னர் அதை நிறைவேற்ற முடியாத தங்கள் இயலாமைக்கு சமாதானம் கூறுவதற்காக தங்கள் எதிரிகளை துரோகிகள் என்று பழி கூறினார்கள். ஏனென்றால் இந்த துரோகிகளால்தான் தங்களால் வாக்களிப்பட்ட இலக்கினை அடைய முடியவில்லை என அவர்கள் புலம்பினார்கள்.

துரோகியாக்கப்படலின் மற்றொரு அம்சம் தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்துவது. தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு ஒற்றை அமைப்பு அல்லது கட்சியை சுற்றியே வலம் வரவேண்டும் என விவாதிக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் அதன் அர்த்தம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்பதாகும். தமிழர்களின் வாக்கை துண்டாடும் ஏனைய கட்சிகள் மீது துரோகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த குறிப்பிட்ட கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே ஆதரவளித்து தெரிவாக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் ஏனைய கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்கள் துரோகிகள் என்கிற நியாயப்படுத்தலே இருந்தது.

ஜனநாயக அரசியல் ஆயுதம் தாங்கிய போர்க்குணத்துக்கு வழி ஏற்படுத்தியபோதும் தமிழர்களின் ஒற்றுமை பற்றிய வலியுறுத்தல் தொடர்ந்தது. கட்சி இயக்கத்துக்கு வழி ஏற்படுத்தியது. இங்கும் தமிழர்களின் ஒற்றுமையை விளக்குவதற்காக குறிப்பிட்ட இயக்கத்துக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஏனைய இயக்கங்கள் துரோகிகளாகக் காட்டப்பட்டன. இந்த அணுகுமுறை விரைவிலேயே மோதல்கள் ஏற்படவும் பின்னர் உடன்பிறப்புகளைக் கொலை செய்யும் யுத்தமுறைக்கும் வழியமைத்தது. தமிழ் ஈழம் என்கிற பலிபீடத்தின் முன் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்பவர்களாக கருதிய இளைஞர்கள்மீது துரோகிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அதே தமிழ் சமூகம் அதை மேன்மைப் படுத்தியது.

தனித்த ஆதாயம்

இங்கு குறிப்பிடுவதற்கு முக்கியமானது என்னவென்றால் தமிழ் தேசியவாதிகளின் அரசியல் அவர்களின் எந்த ஒரு நோக்கத்தையும் சுயேச்சையாக அடைவதில் வெற்றி பெறவில்லை என்பதுதான். ஒருபுறம் அது தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, ரி.யு.எல்எப் அல்லது ரி.என்.ஏ எதுவானாலும் சரி, மறுபுறத்தில் எல்.ரீ.ரீ.ஈ உட்பட்ட தமிழ் போராளிக் குழுக்களானாலும் சரி அவர்கள் அனைவருமே இதுவரை தோல்வியே அடைந்துள்ளார்கள். இதில் தனித்த ஆதாயமாக காணப்படுவது இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டுவந்த 13வது அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே. அரசியல் முன்னணி; இந்த தோல்வியை அடைந்த போதிலும், தமிழ் தேசியவாதிகளின் கட்சிகள் மற்றும் அமைப்புகள், தொடர்ந்தும் உச்ச நிலையிலேயே ஆட்சி செய்தன. தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் உள்ள தமிழ் ஆட்சியாளரின் இந்த ஏகபோக கட்டுப்பாட்டுக்கு அருகில் உள்ள முக்கிய கருவியாக பயன்படுவது துரோகத்தனமான நடவடிக்கைதான். தங்களால் வழங்க முடியாது தோற்றுப் போகும் எதற்கும் இந்த துரோகத்தனம் என்கிற சமாதானத்தை கூறி தப்பிவிடுவார்கள். யதார்த்தமற்ற மற்றும் அடையமுடியாத இலக்குகளுக்கு அரசியல் முட்டாள்தனம்தான் காரணம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை மாறாக எங்கள் மத்தியில் உள்ள துரோகிகள்மீது தவறுகள் சுமத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு சொல்லப்படுவது தவறுகள் எங்களுடையது அல்ல ஆனால் துரோகிகளுடையது என்று.

முன்பு சொல்லப்பட்டதைப் போல துரோகிப்பட்டம் சூட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது மக்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்பு. துரோகிகள் எனக்கூறி அவர்களது குணாதிசயங்கள் கொலை செயயப்பட்டன. ஆனால் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் தமிழ் ஆயுத போர்க்குணம் எழுச்சி பெற்றதின் பின் இதில் கடலளவு மாற்றங்கள் ஏற்பட்டன, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் போராளிகள் எனப் பலரும் துரோகிகள் என கொலை செய்யப்பட்டார்கள். அதிர்ஷ்டவசமாக துரோகிகள் என கொல்லப்படும் இந்த நடைமுறை ஒரு முடிவுக்கு வந்தது மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு தீவிலிருந்து அழிக்கப்பட்ட பின்னரே. எனினும் துரோகியாக்கப்படல் என்கிற நடவடிக்கை எஞ்சியே உள்ளது, ஆனால் எல்.ரீ.ரீ.ஈ இல்லாததால் அதன் வலிமை பெருமளவு குறைந்துள்ளது.

சமீப காலங்களில் இந்த துரோகத்தனத்தின் கோரக் காட்சிகள், சில ரி.என்.ஏ அரசியல்வாதிகளின் கொடும்பாவிகள் மற்றும் உருவப் படங்கள் எரிக்கப்படுவதைக் காணும்போது மீண்டும் எழுச்சி பெறுவதைப் போலத் தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையில் இதை சரி பார்க்காவிட்டால், இந்த நிகழ்வு கடந்த காலங்களைப் போல பெருத்த ஆபத்தை நோக்கி முன்னேற்றமடையலாம். நடந்து முடிந்த தன்மையில் இருந்து பெற்ற அறிவினைக் கொண்டு மீண்டும் வளர்ந்து வரும் ஆபத்தான நிலமையை அனுமானிப்பது சாத்தியமே. இந்தப் பின்னணியில் தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் உள்ள துரோகத்தனமான நிகழ்வுகத்ளை இந்த எழுத்தாளர் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வருகிறார். முன்னைய சந்தர்ப்பங்களில் இதைப்பற்றி நான் எழுதியிருந்தாலும் கூட, தமிழர்களைத் திரும்பவும் துன்புறுத்தும் இந்த ஆபத்தான நோயைப் பற்றி மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய விரும்புகிறேன்.

முன்பு குறிப்பிட்டதைப் போல துரோகிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கடந்தகாலங்களில் நூற்றுக் கணக்கானவர்களை அழித்த இந்த அரசியல் வன்முறை, தமிழர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் மற்றும் தமிழர் சமத்துவத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் அவசியமானது என இதைச் செய்தவர்களால் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ நியாயப் படுத்தப்பட்டது. இந்தப் போக்கின் அர்த்தம் வித்தியாசமான அரசியல் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் அல்லது கொண்டிருப்பதாகக் கருதப்படுபவர்கள் நடப்பில் ஆதிக்கம் செலுத்துபவர்களினால் துரோகிகள் எனக் கணிக்கப்படுகிறார்கள் என்பதே. எதிர்ப்பு இங்கு துரோகத்துடன் சமப்படுத்தப் படுகிறது.

இராவணன் மற்றும் விபீஷணன்

இதிகாசங்களையும் வரலாற்றையும் ஒரு சுருண்ட வடிவத்தில் பார்க்கும் ஒரு போக்கு உள்ளது. உண்மை அல்லது கற்பனையான காட்டிக் கொடுப்புகளுக்கான அடையாளங்களை இதிகாசங்களிலும் மற்றும் வரலாறுகளிலும் கதாநாயகர்களாக சித்தரிக்கப் பட்டவர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாக காட்டப்பட்டன. சீதையை கடத்திச் சென்ற இலங்கையின் அரக்க இராஜாவான இராவணன், மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரமான சீதையின் கணவனான இராமரினால் தோற்கடிக்கப்பட்டான். எனினும் திராவிட சித்தாந்தந்தங்கள் வலியுறுத்துவது அதற்கான காரணம் காட்டிக் கொடுப்பு என்று, ஏனெனில் இராவணன் சகோதரனான விபீஷணன் இராமரின் பக்கம் சென்றான்.

பிரபுத்துவ பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரனான வீரபாண்டிய கட்டபொம்மன் பிரித்தானியரின் அதி உயர் பீரங்கிகளின் சக்திக்கும் அஞ்சாது அடிபணிய மறுத்து இனத்திற்காக போராடி தோற்கடிக்கப்பட்டான். பிரபலமான பேச்சு வழக்கில் கூறப்படுவது, கட்டப்பொம்மன் தோற்கடிக்கப் பட்டது எதனாலென்றால் மற்றொரு பாளையக்காரனான எட்டயபுரத்து எட்டப்ப நாயக்கர் பிரித்தானியப் படைகளுடன் இணைந்து கொண்டதால்தான் என்று. துரோகிகளின் காட்டிக்கொடுப்பு தோல்விக்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதன்படி இராவணனுக்கு விபீஷணனனும் மற்றும் கட்டபொம்மனுக்கு எட்டப்பனும் துரோகிகளாக இருந்ததாக இதிகாசம் மற்றும் வரலாறு என்பன சொல்கின்றன.

கடந்த காலத்தை பற்றிய ஒரு சுருக்கமான மீள் ஓட்டம், தமிழ் தேசியவாதிகளின் அரசியல் கோளத்தில் உணரப்படும் துரோகத்தனத்தின் தொடர்ச்சியான நிகழ்வுகளை உரிய இடத்தில் வைப்பதற்கு உதவும். சம காலங்களில் ஸ்ரீலங்காவில்; ஜனநாயகத்தின் பரிணாமம் மற்றும் வளர்ச்சி என்பனவற்றில் துரோகி என்கிற பதம் வெகு தாராளமாகவும,; மாறாக தளர்வாகவும் உச்சரிக்கப்படுகிறது. சகல சமூகங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் பல சமயங்களில் தங்கள் போட்டியாளர்களை மக்களுக்கு அல்லது அவர்கள் சார்ந்த விடயங்களுக்கு துரோகமிழைத்த துரோகிகள் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனினும் இந்தப் போக்கு ஸ்ரீலங்கா தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப் படுவதாகவும் ஆழமாக பதிந்தும் உள்ளது. சர்வஜன வாக்குரிமை மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் என்பன காரணமாக சிங்கள பெரும்பான்மை எண்ணிக்கைக்கு சமமாக தமிழர் தன்னைத்தானே சிதறடித்துக் கொண்டது முதல், தமிழ் அரசியலின் இயல்பு மாற்றத்துக்கு ஆளாகியது.

தமிழ் அரசியலில் இழையோடும் இந்த அடிப்படை நூல் அரசியல் விடுதலை பிரகடனமாக மாறியது. அது சீரான பிரதிநிதித்துவம், பதிலளிக்கும் ஒத்துழைப்பு, கூட்டாட்சி, பிராந்திய சுயாட்சி, அல்லது பிரிவினைவாதம் ஆகிய எதுவாக இருந்தாலும் அதுதான் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தமிழர் விடுதலையின் அடிப்படை பிரசங்கம்.

“உண்மையில் அது படிப்படியாக ஒரு கடின வடிவத்தை உள்வாங்கியது. மக்கள் துரோகிகளாக கருதப்பட்டு கொல்லப்பட்டது இனிமேலும் ஒரு கேலிக்கூத்தான நடவடிக்கையாக இருக்க முடியாது. அது சோகமான ஒன்றாக மாறியது. இந்த துரோகியாக்கப்படல் நடவடிக்கை பெருமளவிலான அரசியல்வாதிகளை, அரசாங்க அதிகாரிகளை, காவல்துறை மற்றும் பாதுகாப்பு நபர்களை, ஊடகவியலாளர் போன்றவர்களை போட்டியிடும் அரசியல்வாதிகளால் துரோகிகளாகக் கருதி கொல்லுமளவுக்கு வழியமைந்ததுதான் தமிழ் அரசியலில் உள்ள மிகப் பெரிய சோகம்”.

ஜி.ஜி.பொன்னம்பலம்

ஒற்றுமை

வளர்ந்து வரும் சமூக மனப்போக்கு மற்றும் இன ஐக்கியத்தின் மீது வைக்கப்பட்ட உயர்ந்த மதிப்பு என்பன அரசியல் பிரச்சினைகளில் பெருமளவிலான மக்கள் ஒரு பொதுவான விஷயத்துக்கு வேண்டி ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கும் நிலை உருவானது. ஒற்றுமை என்பது ஒரு மேலாதிக்க கூச்சலாக மாறியது.

ஒரு குறிப்பிட்ட கட்சி இன அடிப்படையில் வாக்குகளை அணி திரட்டுவது மிகவும் வசதியான முறையாகப் பார்க்கப்பட்டது. அதேபோல எந்த தமிழரும் சிங்கள மேலாதிக்க கட்சியுடன் – அது தேசியக்கட்சியோ அல்லது இடதுசாரி கட்சியோ எதுவானாலும் – தொடர்பு கொள்வாராயின் அவர் மீது எதிர்மறை பண்புகளை கொண்டவர்களின் ஒத்துழைப்பாளர் என முத்திரையிடுவது எளிதாக இருந்தது.

இதன்படி தமிழர்களிடையே உள்ள எந்த வகையான மேலாதிக்க அரசியல் கருத்திலிருந்து ஒருவர் மாறுபடுவது அல்லது விலகிச் செல்வதுபோல பார்க்கப்பட்டால் அவர் சமுகத்தின் பிரச்சினையை காட்டிக் கொடுத்தவராக சித்தரிக்கப் படுவார். அவர்கள் களைகளாக வர்ணிக்கப்பட்டு களையெடுப்பு நடத்த வேண்டியதாக தீர்மானிக்கப்படும்.

முந்தைய காலங்களில் அரசியல் எதிரிகளை துரோகிகளாகச் சித்தரித்து களையெடுப்பு நடத்துவது முற்றிலும் தேர்தல் முறையினாலேயே. அவர்கள் வாக்குகளால் தோற்கடிக்கப் படவேண்டும் மற்றும் அதைவிட வேறு எதுவுமில்லை. இந்த வகை பிரச்சாரங்களால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு குழி தோண்டுவது மிகவும் சுலபம்.

“கடந்த நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப்பகுதியில் தமிழ் அரசியலின் மேலாதிக்க மனநிலை பிரிவினைவாதமாக மாறியது. இது தமிழ் ஈழத்தை அடைவதற்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற நிலைக்கு முன்னகர்த்தியது. வருடங்கள் கடந்தபோது காலத்துக்கு காலம் காட்சிகளும் மற்றும் நடிகர்களும் மாறினார்கள், ஆனால் துரோகிப்பட்டம் சூட்டப்படல் நாடகம் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது”.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஜி.ஜி பொன்னம்பலம் மற்றும் அவரது கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்பன பிரபலமாக அறியப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது என்கிற சமநிலை பிரதிநிதித்துவ திட்டத்தை கோரின. சோல்பரி ஆணையத்தினால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது மேலாதிக்க அரசியலமைப்பை வழங்கியது. தேர்தல்கள் நடத்தப்பட்ட வேளை சோல்பரி ஆணைக்குழுவுக்கு ஆதரவளித்த சேர் அருணாசலம் மகாதேவா மற்றும் ஐ.தே.க. வின் தமிழ் வேட்பாளர்களை துரோகிகள் என அழைத்த ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் தமிழ் காங்கிரஸ் என்பன அவர்களை விட சிறப்பான பெறுபேற்றை பெற்றன.

எஸ்.ஜே.வி. செல்வநாயகம்

சுதந்திரம் கிடைத்ததின் பின்னர் நடைமுறைகேற்றபடி பொன்னம்பலம் தனது நிலைப்பாட்டை பதிலளிக்கும் ஒத்துழைப்பாக மாற்றிக்கொண்டார். அவர் அரசாங்கத்துடன் இணைந்து கடற்றொழில் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சரானார். டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் பொன்னம்பலம் அமைச்சரானதும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மற்றும் இதர பெடரல் ஆதரவாளர்களால் பொன்னம்பலம் துரோகி என அழைக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தங்கள் போட்டியாளர்களை மழுங்கடிப்பதற்கு துரோகி என்கிற முத்திரையை வெகு தாராளமாக பயன்படுத்தியது. எனினும் செல்வநாயகமும் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் 1965ல் டட்லி சேனநாயக்காவின் தேசிய அரசாங்கத்தில் இணைந்திருந்த வேளையில் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று தமிழர் சுயாட்சிக் கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியை அவர் துரோகி என விமர்சித்தது, அந்த நேரத்தில் அதிக நம்பிக்கையை பெறவில்லை. ஏனெனில் அதற்கு செல்வா மீது மக்கள் கொண்டிருந்த உயர்ந்த மதிப்பே காரணமாக இருந்தது. ஆனால் தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்து தனது சொந்த கட்சியை ஆரம்பித்ததுக்காக நவரத்தினம் துரோகி என அழைக்கப்பட்டு அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்டார்.

“மசாலா வடை” வரி

முன்னர் தமிழ் தேசியவாதிகளின் கட்சிகளினால் சமசமாஜிகளையும் மற்றும் கம்யுனிஸ்ட்களையும் துரோகிகள் என அழைப்பது கடினமாக இருந்தது, ஏனென்றால் தேசிய மற்றும் மொழிப் பிரச்சினைகளில் இடது அணியினர் மிகவும் முன்னேற்றமான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள். பின்னர் இடது அணியினர் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீ;.ல.சு.க அணியினருடன் இணைந்து “டட்லிகே படே மசால வடே” (டட்லியின் வயிற்றில் மசாலா வடை) என்கிற வரிகளைப் பின்பற்றியபோது, அவர்களையும் துரோகிகள் என குறிப்பிடுவது சுலபமாகியது.

அரசியல் பகைவர்களை துரோகிகள் என அழைக்கும் அரக்கத்தனமான நடைமுறை 1970 – 77 காலப்பகுதியில் ஒரு தரமான திருப்பத்தை அடைந்தது. அக்கினிச் சுவாலையாய் கவிமழை பொழியும் தமிழ் கவிஞர் காசி ஆனந்தன் 1972ல் முழங்கியது, 1972ல் உருவாக்கப்பட்ட குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவளித்த துரோகிகளான ஆறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட இயற்கையான மரணம் எய்தக்கூடாது என்று.

அதில் மேலும் தெளிவாகியது பிரபலமான யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவை போன்ற தமிழ் அரசியல்வாதிகளை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பது கடினம், ஏனென்றால் அவர்களுக்கு பரவலான மக்கள் ஆதரவு உள்ளது. ரி.யு.எல்.எப். ஊடகமான சுதந்திரனால் துரையப்பா தொடர்ந்தும் துரோகி என விபரிக்கப்பட்டு வந்தார். தமிழர்களைப் பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர்தான் காரணம் என சித்தரிக்கப்பட்டு வந்தது, மற்றும் அவரது அழிவு தமிழர்களுக்கு ஒரு புதிய விடியலை தோற்றுவிக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.

எளிதில் உணர்ச்சி வசப்படும் இளைய தமிழர்களுக்கு இந்த செய்தி கிடைக்கப் பெற்றது. 1975 ஜூலையில் துரையப்பா சுடப்பட்டார். பின்னாளில் பிரபாகரன் அதை தனது முதல் இராணுவ நடவடிக்கை என குறிப்பிட்டார். அப்போதிருந்த ரி.யு.எல்.எப் தலைவர்களில் ஒருவர்கூட துரையப்பாவின் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

கடந்த நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப்பகுதியில் தமிழ் அரசியலின் மேலாதிக்க மனநிலை பிரிவினைவாதமாக மாறியது. இது தமிழ் ஈழத்தை அடைவதற்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற நிலைக்கு முன்னகர்த்தியது. வருடங்கள் கடந்தபோது காலத்துக்கு காலம் காட்சிகளும் மற்றும் நடிகர்களும் மாறினார்கள், ஆனால் இந்த துரோகியாக்கப்படல் நாடகம் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

20ம் நூற்றாண்டின் நாற்பதுகளில், ஐம்பதுக்கு ஐம்பதுக்கு ஆதரவு வழங்காத எந்த தமிழனும் ஒரு துரோகியே. சுதந்திரத்துக்குப் பின் சமஷ்டியை நிராகரிக்கும் தமிழர்கள் துரோகிகளானார்கள். பின்னாளில் ஒரு தனித் தமிழ் நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த தமிழனும் துரோகியாகக் கருதப்பட்டான். அதன் பின்னர் ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கும் எந்த தமிழனும் துரோகியாக கணிக்கப் பட்டான். அதற்குப் பின் எல்.ரீ.ரீ.ஈயை தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் துரோகிகளாக கருதப்பட்டன. எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப் பட்டதின் பின்னர் தமிழ் ஈழக் கோரிக்கை அதன் வீரியத்தை இழந்துவிட்டது. தாயகம், சுயநிர்ணயம் மற்றும் தேசியம் என்கிற கருத்துக்கள் தமிழ் தேசியவாதத்தின் புதிய தாரக மந்திரங்களாக உருவெடுத்துள்ளன. இந்த மூன்று கருத்துக்களையும் எதிர்க்கும் எவரும் துரோகியாவார்.

வடமாகாண சபையின் முகப்புத் தோற்றம்

“இனப்படுகொலை – இனப்படுகொலை”

ஸ்ரீலங்கா பற்றிய ஒரு தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு நிறைவேற்றியபோது, தமிழ் தீவிரவாதிகள் அது கடுமையாக இல்லை எனக்கூறி அதை எதிர்த்தார்கள். ஐநா விசாரணை வெறும் கண்துடைப்பு என குற்றம் சாட்டப்பட்டது. அதை ஆதரித்த தமிழர்கள் துரோகிகள் என அழைக்கப்பட்டார்கள். இப்போது அதே வெறிபிடித்த பிரிவினர் ஐநா விசாரணை அறிக்கை தாமதமாவதை எதிர்க்கிறார்கள். ஐநா அறிக்கை செப்ரம்பரில் வெளியாவதை ஆதரிக்கும் எந்த தமிழனும் ஒரு துரோகியாக கருதப்படுகிறான். சிவி.விக்னேஸ்வரனின் இனப்படுகொலை தீர்மானத்தின் பின்விளைவாக தமிழர்கள் அனைவரும் கூட்டாக “இனப்படுகொலை – இனப்படுகொலை” என கூவ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இனப்படுகொலை வார்த்தையை இசைக்கத் தவறும் எவரும் விரைவிலேயே துரோகி என பெயர் பெறுவர். துரோகிகள் உருவாக்கப் படுகிறார்கள் மற்றும் துரோகிகள் அழிக்கவும் படுகிறார்கள். ஆனால் துரோகிப்பட்டம் சூட்டப்படல் ரெனிசனின் அருவியைப்போல என்றும் தொடரும்.

தமிழ் சமூகத்தினிடையே பிரவாகம் போல தொடரும் அரசியற் படுகொலைகள் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பமாகி வருடக்கணக்காக மற்றும் தசாப்தங்களாக தொடர்ந்தன. நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற எத்தனையோ சிறந்த முன்னணி தமிழ் தலைவர்கள் துரோகிப் பட்டம் சூட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள். 1970 முதல் 77 வரையான திருமதி பண்டாரநாயக்காவின் காலத்தில் தமிழ் காவல்துறையினர் தகவல் வழங்குபவர்களாகச் சந்தேகிக்கப் பட்டார்கள். ஸ்ரீ.ல.சு.க வின் தமிழ் செயற்பாட்டாளர்கள் துரோகிகள் என்று கொல்லப் பட்டார்கள். ஜூலை 1977ல் ஜேஆர். ஜெயவர்தனா மற்றும் ஐதேக மீது இலக்கு மாற்றப்பட்டது. 1977க்குப் பின்னர் ஐதேகவுக்கு அனுசரணையான தமிழர்கள் துரோகிகள் என்று கொலை செய்யப்பட்டார்கள். இந்த கொலைக் களியாட்டம் பிரேமதாஸ, விஜேதுங்க, குமாரதுங்க மற்றும் ராஜபக்ஸ காலங்களான 2009 வரை தொடர்ந்தது.

துரோகி என குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுவது தமிழர் இடையே ஒரு புதிய வடிவத்தையும் மற்றும் உள்ளடக்கத்தையும் பெற்றது. தமிழ் அரசியல் போட்டியாளர்களை துரோகிகள் என அழைத்த ரி.யு.எல்.எப் காலப்போக்கில் தாங்களே துரோகத்தனமானவர்கள் என்கிற பட்டத்தையும் பெறவேண்டியதானது. புலிகள் ரி.யு.எல்.எப் இற்கு எதிராக மாறி முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரத்தை 1982ல் சுட்டுக் காயப்படுத்தினார்கள். அப்போதுதான் அமிர்தலிங்கம் “மிருகங்களான ஆட்டையும் மாட்டையும் கடித்து இப்போது மனிதர்களையும் கடிக்க ஆரம்பித்து விட்டார்கள்” என்று கடுமையாகத் தாக்கி ஒரு அறிக்கையினை வெளியிட்டார். தமிழர் விடுதலைப் போராட்டம் முன்னேற்றமடைந்ததும் போராளிகள் ரி.யு.எல்.எப் தலைவர்களை துரோகிகள் என அழைக்க ஆரம்பித்தார்கள். விரைவிலேயே பலர் கொல்லப்பட்டார்கள். பல அரசியல் போட்டியாளர்களை துரோகிகள் என வர்ணித்த அமிர்தலிங்கம் கூட அநியாயமாக துரோகி என்கிற பட்டத்துடன் கொல்லப்பட்டார்.

சகோதர யுத்தம்

துப்பாக்கிகளும்கூட பக்கவாட்டிலும் மற்றும் உட்பக்கமாகவும் திருப்பப்பட்டன. விரைவிலேயே தமிழ் குழுக்களிடையே சகோதர யுத்தம் மூண்டது. எல்.ரீ.ரீ.ஈ யினால் மொத்த இயக்கங்களையும் துரோகிகள் என குறிப்பிட்டு அவர்களை தமிழ் பிரதேசங்களில் இருந்து தடை செய்தார்கள். போட்டிக் குழுக்களின் திரளான படுகொலைகள் தொடர்ந்தன.

இந்திய இராணுவம் இங்கு வந்தபின் அதற்கும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையே போர் வெடித்தது. இந்திய வரிசையை பின்பற்றிய ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்எப், ரெலோ போன்ற குழுக்களால் பல புலிகள் கொல்லப்பட்டார்கள். இந்திய இராணுவம் சென்றதின் பின்னர் இந்திய தமிழ் தேசிய இராணுவத்தை சார்ந்த அங்கத்தவர்கள் அனைவரையும் புலிகள் மொத்தமாக படுகொலை செய்தார்கள். இரண்டு பக்கமும் ஒருவரை ஒருவர் தமிழர் பிரச்சினையின் துரோகிகள் என வர்ணித்துக் கொண்டார்கள்.

ஈபிடிபி, புளொட், ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்களை சேர்ந்த 60க்கு மேற்பட்ட அங்கத்தவர்களை 2002 யுத்த நிறுத்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்தது. அவர்கள் அனைவருக்கும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டது. பின்னர் இந்த பாத்திரங்கள் தலைகீழாக மாற்றம் பெற்றன மற்றும் தமிழ் ஒட்டுண்ணிக் குழுக்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து எல்.ரீ.ரீ.ஈயுடன் தொடர்பு உள்ளவர்கள் அரசாங்கத்தின் எதிரிகள் எனக்கூறி சந்தேகத்தின பெயரில் பல தமிழர்களை கொலை செய்தனர். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் அவர்கள் லங்கா மாதாவின் துரோகிகள் ஆவார்கள்.

நவம்பர் 1963ல் ஜனாதிபதி ஜோண் எப். கென்னடி டல்லாஸில் வைத்து படுகொலை செய்யப்பட்ட போது, கறுப்பின அமெரிக்கர்களின் தலைவர் மல்கொம் எக்ஸ், டிசம்பர் 1963ல் நடைபெற்ற “இஸ்லாமிய தேசம்” எனும் கூட்டத்தில் பேசினார். அவரிடம் கென்னடியின் கொலை பற்றிக் கேட்டபோது, மல்கொம் எக்ஸ் தனது பதிலில் அதை நியாயப்படுத்துவது போல தெரிவித்தார். “ஜனாதிபதி கென்னடி கோழிக் குஞ்சுகள் இவ்வளவு விரைவிலேயே படுக்கைக்காக கூட்டுக்குத் திரும்பி விடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்… என்னைப் போல ஒரு பழைய பண்ணைச் சிறுவனுக்கு கோழிக் குஞ்சுள் படுக்கைக்காக வீட்டுக்குத் திரும்புவது வருத்தத்தை தந்திருக்காது, அவை எனக்கு மகிழ்ச்சியையே தரும்”. இரண்டு மாதங்கள் கழித்து பெப்ரவரி 1964ல் மல்கொம் எக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் ஒப்பீட்டளவில் மிதவாத ரி.என்.ஏ தலைவர்களான ஆர்.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கூட துரோகிகள் என முத்திரையிடப் பட்டுள்ளார்கள். அவர்களுடைய உருவப் படங்கள் மற்றும் உருவப் பொம்மைகள் என்பனவும் எரிக்கப் பட்டுள்ளன. ரி.என்.ஏ யின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்தான் எல்.ரீ.ரீ.ஈ சக்திகளின் பிரியமான இலக்கு. பரவலாக அவரை துரோகி என குறை கூறியுள்ளார்கள். முன்பு குறிப்பிட்டதைப் போல புலிகள் உச்சம் பெற்றிருந்த கடந்தகாலத்தில் இடம்பெற்ற நடவடிக்கை, ஒருவரை துரோகி என்று அரக்கத்தனமாக குற்றம் சுமத்தி பின்னர் அவரை அழிப்பது ஆகும்.

டைட்டான் குரோனஸ்ஃ சனி

ஸ்ரீலங்காவின் ஆயுதப் போர்க்குணத்தை பொறுத்தவரை கோழிக்குஞ்சுகள் படுக்கைக்கு திரும்பும் கதைதான் நடந்தது. டைட்டான் குரோனஸ் அல்லது சனி என்பதைப் பற்றிய கிரேக்க புராணக் கதையில், தான் தன்னுடைய பிள்ளைகளில் ஒருவனால் கொல்லப் படுவோம் என அவன் அஞ்சினான். எனவே தனது ஒவ்வொரு பிள்ளையையும் அவர்கள் பிறக்கும்போதே அவன் விழுங்கி வந்தான். சனி தன்னுடைய சொந்த பிள்ளைகளையே விழுங்கியதைப் போலத்தான் தமிழ் விடுதலைப் போராட்டமும் தனது சொந்தப் பிள்ளைகளை விழுங்கி வந்தது. நாசம் செய்யும் வன்முறை உண்மையான அல்லது கற்பனையான துரோகியின் இருப்பை நியாயப்படுத்த முற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவரும் துரோகத்தனமானவர்கள் என்று கூறப்பட்டது. பின்னாளில் இதை நடத்தியவர்களில் சிலரே இந்த வன்முறைக்குப் பலியானார்கள். ஊசல் இப்போது மறுபுறமாக ஊசலாடுகிறது. மற்றவர்களை துரோகிகளாக்கியவர்களே பதிலுக்கு இப்போது துரோகிகளாகியுள்ளார்கள்.

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈயின் துணைத் தலைவரான மாத்தையா என்கிற கோபாலசாமி மகேந்திரராஜா பகிரங்கமாக அமிர்தலிங்கத்தை துரோகி எனக் கண்டித்தார். பின்னாளில் அவரே புலிகளின் தலைவரினால் கொல்லப்பட்டார். மாத்தையா இப்போது துரோகி என அழைக்கப் படுவதுடன் பிரபாகரனை வீழ்த்த சதி செய்தார் என்ற குற்றமும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. 150 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் துரோகிகளாக கருதி கொல்லப்பட்டார்கள். மாத்தையாவும் ஒரு பாதுகாப்பான சட்டபூர்வமற்ற ‘கங்காரு’ நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். மாத்தையா புலிகளின் தலைவராக இருந்தபோது அநேக புளொட், ஈபிஆர்எல்எப், மற்றும் ரெலோ உறுப்பினர்களை துரோகிகள் எனக்கூறி கொல்லும்படி உத்தரவிட்டுள்ளார்.

புளொட் அமைப்பும் நூற்றுக்கணக்கான அதன் அங்கத்தவர்களை துரோகிகள் என சந்தேகித்து கொலை செய்து மகிழ்ந்திருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள ஒரத்தநாட்டில் புளொட்டினால் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு அப்புறப் படுத்தப்பட்டார்கள். துரோகிகள் என சந்தேகிக்கப் படுபவர்களை கொலை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற சிரேட்ட அங்கத்தவர் ஒருவர் இந்தச் செய்கை காரணமாக ‘டம்மிங் கந்தசாமி’ என்கிற பெயரைப் பெற்றிருந்தார். பின்னர் அநேக புளொட் தலைவர்களும் மற்றும் அங்கத்தவர்களும் துரோகிகளாகக் கருதி எல்.ரீ.ரீ.ஈயினால் கொல்லப்பட்டார்கள். இறுதியாக புளொட் தலைவரான முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன், (இவரை மரியாதையாக ஐயா மற்றும் பெரியவர் என்றும் அவரது அங்கத்தவர்கள் அழைப்பார்கள்), தனது சொந்த மனிதர்களாலேயே கொல்லப்பட்டு பம்பலப்பிட்டி தொடரூந்து பாதை அருகே வீசப்பட்டிருந்தார். ஒரு துரோகிக்கு இதுதான் தண்டனை என அவரைக் கொன்றவர்கள் சொன்னார்கள்.

ரெலோ அமைப்பு பொபி மற்றும் தாஸ் அமைப்புகளாக பிளவடைந்தது. ரெலோ தலைவரான சிறீ சபாரட்னம் பொபி பிரிவிற்கு பாரபட்சம் காட்டினார். தாஸ் வடமராட்சி உடுப்பிட்டியை சோந்தவர், சிறி சபாரத்தினத்தால் தவறான பாதுகாப்பு அர்த்தத்தில் தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டார். அவரை யாழ்ப்பாண மருத்துவ மனைக்கு ஆயுதங்கள் இன்றி அழைத்து வந்தபோது அந்த வளாகத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். அதன்பின் பொபி பிரிவினர் தாஸ் பிரிவினரை துரோகிகள் எனக்கூறி அவர்கள்மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டார்கள். அதை எதிர்த்து வடமராட்சி வதிவிடதாரிகள் ஒரு ஆர்ப்பாட்ட ஊhவலம் நடத்தியபோது அவர்கள்மீது ரெலோ துப்பாக்கிச் சூடு நடத்தியது, அது வெளியிட்டிருந்த ஒரு பத்திரிகைச் செய்தியில் துரோகிகள் படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று கூறியிருந்தது. அது நடந்து சில மாதங்களுக்குள் எல்.ரீ.ரீ.ஈ, ரெலோ மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான ரெலோ அங்கத்தவர்களை கொன்றது. சிறீ சபாரட்னத்தை கைது செய்த எல்.ரீ.ரீ.ஈயின் யாழ்ப்பாண தளபதி கிட்டுவினால் 1986 மே 5ல் அவர் தனிப்பட்ட முறையில் கொல்லப்பட்டார்.

கிழக்கிலுள்ள துரோகிகள்

முன்னாள் கிழக்கு பிராந்திய புலி தளபதி வினாயகமூர்த்தி முரளீதரனின் கிளர்ச்சியினால் 2004 மார்ச்சில் பிரதான நீரோட்டத்தை சேர்ந்த எல்.ரீ.ரீ.ஈயினால், பெரும் எண்ணிக்கையிலான கிளர்ச்சி குழு அங்கத்தவர்கள் துரோகிகளாக கருதி கொல்லப்பட்டார்கள். விரைவிலேயே கருணா அரசாங்கத்துடன் இணைந்து பிரபாவின் விசுவாசிகளை கிழக்கின் துரோகிகள் எனக்கூறி அவர்கள்மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டார்.

கடந்த பல வருடங்களாக எல்.ரீ.ரீ.ஈ, இயக்கத்துக்கு வெளியேயும் மற்றும் உள்ளேயும் ஏராளமானவர்களை துரோகிகள் எனச் சந்தேகித்து கொன்றுள்ளது. தொடர்ச்சியான அடிப்படையில் புதுப்புது துரோகிகளை கண்டு பிடிப்பது எல்.ரீ.ரீ.ஈயின் நவ – பாசிச இயல்பு ஆகும். யாராவது வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தால் அல்லது அவர்களது பாதையை பின்பற்றாமலிருந்தால் சுலபமாக அவர்கள்மீது துரோகி என முத்திரை குத்தி விடுவார்கள். அநேகம்பேர் மீது தவறாக குற்றம் சுமத்தி அவர்களை கொலை செய்த எண்ணிலடங்கா சம்பவங்கள் உள்ளன.

பிரபாகரனுக்கு பிந்திய சூழ்நிலையில்கூட பல்வேறு வித்தியாசமான கருத்துக்கள் மூலமாக துரோகி எனப் பெயர்சூட்டும் எல்.ரீ.ரீ.ஈயின் அரக்கத்தனமான போக்கு உலகளாவிய தமிழ் புலம் பெயர்ந்தவர்களிடையேயும் தொடர்கிறது. கேபி என்கிற செல்வராசா பத்மநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்களை புலிகள் மற்றும் புலிகள் சார்பு சக்திகள் துரோகிகள் என அழைத்து அவர்களை எதிர்க்கின்றன. அதேபோலத்தான் கருணா, பிள்ளையான், தயா மாஸ்ரர் மற்றும் அரசாங்கத்துக்க ஒத்துழைப்பு வழங்கும் இதர எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் அழைக்கப் படுகிறார்கள்.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் முரளீதரன் ஆகியோர் துரோகிகள் என அழைக்கப்பட்தைப் போல, புதிய சிறிசேனவின் அமைப்பின் கீழுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரை துரோகிகள் என அழைப்பதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் மட்டுமே தேவைப்படுகிறது.

எம்.ஏ.சுமந்திரன்

எந்த ஒரு தமிழரும் சிநேகபூர்வமான அரசியலில் அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவான ஒத்துழைப்பை பிரேரித்தால் துரோகத்தனத்தின் டமோகிளென் வாள் அவரது தலைக்கு மேல் தூங்கும். “தற்போதைய சூழ்நிலையில் ஒப்பீட்டளவில் மிதவாத ரி.என்.ஏ தலைவர்களான ஆர்.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கூட துரோகிகள் என முத்திரையிடப் பட்டுள்ளார்கள். அவர்களுடைய உருவப் படங்கள் மற்றும் உருவப் பொம்மைகள் என்பனவும் எரிக்கப் பட்டுள்ளன. ரி.என்.ஏ யின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்தான் எல்.ரீ.ரீ.ஈ சக்திகளின் பிரியமான இலக்கு. பரவலாக அவரை துரோகி என குறை கூறியுள்ளார்கள். முன்பு குறிப்பிட்டதைப் போல புலிகள் உச்சம் பெற்றிருந்த கடந்தகாலத்தில் இடம்பெற்ற நடவடிக்கை, ஒருவரை துரோகி என்று அரக்கத்தனமாக குற்றம் சுமத்தி பின்னர் அவரை அழிப்பது ஆகும்”

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அக்டோபர் 13, 2014 இல் யாழ் தேவியில் - யாழ் புகையிரத நிலையத்தில் வந்திறங்கும் காட்சி

அதிர்ஷ்டவசமாக இது இனிமேலும் புலிகள் மற்றும் அவர்களது சகபயணிகளின் ஒரு தெரிவாக இருக்கப் போவதில்லை, ஏனெனில் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்காவில் இராணுவ ரீதியாக புலிகளை அழித்து ஒரு மிகப் பெரிய பரிசை தமிழர்களுக்கு வழங்கியுள்ளார். பிரபாகரனுக்கு பின்னான காலத்தில் இருக்கப்போகும் செயல்பாட்டு முறை படுகொலை அல்ல ஆனால் அவர்களது குணாம்சத்தை கொலை செய்வது. இந்த யோசனை என்னவென்றால் பாதிக்கப்பட்டவரை துரோகி என இலக்கு வைத்து அவரை கொல்லாமல் கொல்வது. உடல் ரீதியாக கொல்ல முடியாததால் இரத்த தாகம் கொண்ட பிசாசுகள் அவர்களது உருவப்படம் மற்றும் உருவப் பொம்மைகளைத் தகனம் செய்து தங்கள் இச்சையைத் தணித்துக் கொள்கின்றன. எனினும் இந்தப் போக்கினை கண்டு கொள்ளாமல்; அல்லது இப்பொழுது உள்ளபடியே விட்டுவிட்டால் அது ஒரு பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

ஆர்.சம்பந்தன்

துரோக வெறி

இந்த துரோகியாக்கப்படல் வெறியானது தமிழர்களை பாதித்திதன் விளைவாக கடந்த காலங்களில் எண்ணற்ற மக்கள் துரோகிகள் என பழி சுமத்தி கொன்றொழிக்கப் பட்டார்கள். அது தற்சமயம் தனது அசிங்கமான தலையை திரும்பவும் உயர்த்த ஆரம்பித்துள்ளது மற்றும் எதிர்காலத்தில் இது ஒரு தீவிர பிரச்சினையாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளது.

துரோகியாக்கப்படல் தொடர்பாக இடம்பெறும் தொடர் நிகழ்வுகள் தமிழர்களின் ஒரு துயரம், இதற்காக மற்றவர்களைப் பழி சொல்ல முடியாது. இதற்கு உடனடியாக ஒரு தீவிர சுய பரிசோதனை நடத்துவது அவசியம். தமிழ் மக்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும், அது கடந்த காலங்களில் சமூகத்தை சீரழித்தது எதிர்காலத்திலும் அப்படி நடப்பதற்கும் வாய்ப்பு உண்டு. (நன்றி: தேனீ)

SHARE