தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர் மனோ கணேசன், அமைச்சரவை அமைச்சர் பழனி திகாம்பரம், ராஜாங்க அமைச்சர்கள் எஸ். ராதாகிருஷ்ணன், எம். வேலாயுதம் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விரிவாக கலந்துரையாடினர்.

341

 

“தமிழர் ஒற்றுமை” (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும். இவ்வாறு நேற்று மாலை கொழும்பில் சந்தித்த தென்னிலங்கை மலையக தமிழ் அரசியல் தலைவர்களிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக நான் இப்போதுதான் அறிந்து வருகிறேன்.

mano meet modi f85787754 modi_srisenameeting_004 (1)

மலையகத்தில் வாழும் பின்தங்கிய இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் இப்போது திரட்டி வருகிறோம். எனது இந்த இலங்கை பயணத்தின் போது எமக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக நாம் ஆய்வு செய்வோம். இதன்போது இலங்கை மலைநாட்டில் தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு 20,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு இந்திய அரசின் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை தொடர்பாக மிகவும் சாதகமாக பரிசீலிப்போம். நாம் இன்னும் நெருங்க வேண்டும்.

அதற்காக உங்கள் தூதுக்குழுவை நான் புதுடில்லிக்கு வருமாறு அழைக்கின்றேன். என்றார். தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர் மனோ கணேசன், அமைச்சரவை அமைச்சர் பழனி திகாம்பரம், ராஜாங்க அமைச்சர்கள் எஸ். ராதாகிருஷ்ணன், எம். வேலாயுதம் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விரிவாக கலந்துரையாடினர். கொழும்பு தாஜ் விருந்தகத்தில் நடைபெற்ற இந்த பேச்சு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது, பாரத பிரதமருடனான எங்கள் பேச்சு மிகவும் பயனுள்ளதாக நடைபெற்றது. வடக்கு, கிழக்குக்கு வெளியே குறிப்பாக மலையகத்தில் வாழும் இந்தய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் தொடர்பிலும், அவர்களது பின்தங்கிய நிலைமைகள் தொடர்பிலும், கடந்த கால சிறிமா-சாஸ்திரி, இந்திரா-சிறிமா ஒப்பந்தங்கள் தொடர்பிலும், தனது வேலைப்பளுக்கள் காரணமாக பிரதமர் மோடி விரிவாக தெரிந்து இருக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம். எனவே வரலாற்றுரீதியாக நமது மக்கள் தொடர்பாக நாம் பிரதமருக்கு விரிவாக எடுத்து கூறினோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் எமது தமிழ் சகோதரர்கள் போரினால் சொல்லொனா துன்பங்களை சந்தித்தவர்கள்.

அவர்கள் தொடர்பாக நீங்கள் காட்டும் அக்கறையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். 13ம் திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்றும், 13ம் திருத்தம் அதற்கு மேலும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்றும் நீங்கள் இலங்கை மண்ணில் இருந்தபடி கூறியதை நாம் வரவேற்கின்றோம். நாங்கள் இந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக அங்கம் வகிக்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசு, இனவாதத்துக்கு எதிரான அரசாங்கமாக இன்று இருகின்றது. சமீபகால இலங்கை வரலாற்றை ஒப்ப்பிட்டு பார்க்கும்போது இது முக்கியமானது ஆகும். ஆகவேதான் நாம் இந்த அரசை உள்ளே இருந்து பாதுகாக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியே இருந்து பாதுகாக்கின்றது என நாம் நம்புகின்றோம். இன்று இலங்கையின் தமிழர் சனத்தொகை 32 இலட்சம் ஆகும்.

இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 16 இலட்சமும், தென்னிலங்கையின் மத்திய, மேல், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இன்னொரு 16 இலட்சமுமாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்கின்றோம். 1977, 1983 ஆண்டுகளில் நடைபெற்ற இனக்கலவரங்களை அடுத்து மலையகத்தை பூர்வீகமாக கொண்ட கணிசமான இந்திய வம்சாவளி மக்கள் வடமாகாணத்திற்கு சென்று குடியேறி வாழ்கிறார்கள். அதேபோல் வடகிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களும் தென்னிலங்கையில் நீண்ட காலமாக வாழ்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். இலங்கையில் தமிழர்களின் சனத்தொகையை குறைக்கும் நோக்கில், கடந்த கால இலங்கை அரசாங்கங்கள், தோட்ட தொழிலாளர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் திட்டங்களை முன்னெடுத்தன. கடந்த கால இந்திய அரசாங்கங்களும், இந்த மக்களின் தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல், இந்த திட்டங்களுக்கு உடன்பட்டன. இதனால் இன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், அரசியல்ரீதியாக பலவீனம் அடைந்தார்கள். நாடு கடத்திய சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்படாமல் இருந்திருக்குமானால், இன்றைய இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக சுமார் 35 எம்.பிக்கள் இருந்திருப்பார்கள். இதன்மூலம் தமிழர்களின் ஒட்டு மொத்த அரசியல் பலம் கூடுதலாக இருந்திருக்கும். இதனால் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வரலாற்றுரீதியாக மிகவும் வஞ்சிக்கப்பட்ட மக்களாக வாழ்கிறார்கள். எனவே இந்திய அரசாங்கம் இந்த மக்கள் தொடர்பாக தார்மீக கடமையை கொண்டுள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.

இந்த 16 இலட்சத்தில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் ஆவர். இவர்களே இந்த நாட்டில் மிகவும் பின்தங்கிய மக்கள் பிரிவினர் ஆவர். உலகளாவிய மனித அபிவிருத்தி கணக்கெடுப்பில் இலங்கை நாடு முன்னேற்றக்கரமான தரவுகளை கொண்டுள்ள நிலையில், இலங்கைக்குள்ளே தோட்ட தொழிலாளர்கள் வீட்டு வசதி, காணியுரிமை, கல்வி, சிசு மரணம், சுகாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். ஆகவே இலங்கை தீவுக்குள்ளே பெருந்தோட்ட வலயம் இன்னொரு பின்தங்கிய தீவாக இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

இவற்றில் முதன்மை பிரச்சினைகளாக நாங்கள் வீட்டு, காணி, கல்வி உரிமைகளை கருதுகிறோம். இப்போது எங்களுக்கு காணி வழங்க இந்த அரசு உடன்பட்டுள்ளது. இந்த காணிகளில் வீடுகளை கட்ட வேண்டியுள்ளது. ஏற்கனவே இந்திய அரசு 4,000 வீடுகளை கட்டித்தர இணங்கியுள்ளதையிட்டு நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால், இது போதாது. இந்நிலையில் மேலும் 20,000 வீடுகளை பெற்றுத்தர இந்திய உதவியை நாடி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். அதையே நமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உங்களுடனான நேற்றைய பேச்சுவார்த்தையின் போது நேரிடையாக உங்களிடம் முன் வைத்தார். இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும்படி உங்களை நாம் வேண்டுகிறோம்.- என்று மோடியிடம் கூறினோம் என்று தெரிவித்தார்.

SHARE