நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
தோல்வியடைந்த கூட்டு ஒப்பந்தத்தை கைவிட்டு புதிய முறை பற்றி சிந்திப்போம்
– அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார் திலகர் எம்பி
கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்தமுறையில் சம்பளத்தை அதிகரிக்க தொழிலாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். கம்பனிகள் தொடர்ச்சியாக நட்டம் என காரணம் காட்டுகின்றன. பெருந்தோட்டத்துறை அமைச்சரோ முறையற்ற முகாமையினாலேயே தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன என்கிறார். இப்படி எல்லா தரப்பினராலும் தோல்வி முகத்தையே காட்டி நிற்கும் கூட்டு ஒப்பந்த முறையை கைவிட்டு எமது நாட்டின் பிரதான கைத்தொழில் துறையான பெருந்தோட்டத்துறையை பாதுகாக்க புதிய முறை பற்றி சிந்திக்குமாறு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, மற்றும் அனைத்து அரசியல், அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி நாட்டின் கொள்கைவகுப்பாளர்களும் பொருளாதார நிபுனர்களுக்குமாக பொது அழைப்பை விடுக்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலவாக்கலை நகரில் இடம்பெற்ற தோட்ட தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளவுயர்வு கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்படி அழைப்பினை விடுத்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாம் இன்று தலவாக்கலையில் ஒன்று கூடி தொழிலாளர் தோழர்களுக்காக எமது உணர்வுகளை ஒன்று சேர்த்துள்ளோம். இந்த உணர்வுகள் எமக்கு மட்டுமல்ல நாட்டின் ஏனைய தரப்பினருக்கும் உரியது. அவர்களும் இதனை உணரவேண்டும் என்பதற்காக சிங்கள மொழியில் உரையாற்றுகின்றேன்.
ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சரவையும் ஏனைய கட்சிகளும் கூட பாராளுமன்றத்தில் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு எமக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு முதலில் நன்றி தெரிவிக்கின்றேன். அதேநேரம் கடந்த இருபத்தைந்து வருஷகாலமாக தோல்விப்பாதையில் சென்று கொண்டிருக்கும் இலங்கைப் பெருந்தோட்டக் கைத்தொழிலில் கடைபிடிக்கப்பட்டுவரும் கூட்டு ஒப்பந்த முறையை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்தும் நாம் கவலை அடைகின்றோம்.
இன்று நடைபெறுகின்றன இந்தப் போராட்டத்தின் பின்னால் உள்ள பிரச்சினை தனியே தொழிலாளர் மக்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமான பிரச்சினை மாத்திரமல்ல. இது இந்த நாட்டின் பொருளாதார பிரச்சினை, இந்த நாட்டின் பிரதான கைத்தொழில் துறையின் பிரச்சினை, ஏற்றுமதி வருமான குறைவு பிரச்சினை. பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையால் அவை மூடப்பட்டு வருகின்றன. இதனை இந்த நாட்டின் கொள்கை வகுப்பாளர்களும், பொருளாதார நிபுணர்களும் கூட கையில் எடுக்க வேண்டிய பிரச்சினை. ஆனால், தோட்ட தொழிலாளிகளின் சம்பள பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுவது வேதனை அளிக்கிறது.
எனவே இன்றைய போராட்டத்தின் மூலம் இந்த நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் ஒரு தகவலை சொல்லுகின்றோம். இதனை ஒரு தேசிய பிரச்சினையாகப் பாருங்கள் , எமது நாட்டின் தேசிய பொருளாதார பிரச்சினையாக கவனமெடுத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினைக்கு மாத்திரமல்லாது தோல்வியடைந்த கூட்டு ஒப்பந்த முறையை மாற்றி பெருந்தோட்டக் கைது தொழிலை பாதுகாக்கும் புதிய முறைமை ஒன்று தொடர்பில் ஒன்றுபட்டு சிந்தியுஙகள் என நாங்கள் ஒன்று சேர்ந்து விடுக்கும் பொது அழைப்பே இந்த தலவாக்கலை போராட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.