நடந்த பிழையைத் திருத்துங்கள் பிழைக்காக பிழை செய்யாதீர்கள்!

248

625-167-560-350-160-300-053-800-300-160-90

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்களின் மரணமே இன்று பேசுபடு பொருளாகியுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட அநியாயமான செயலால் அருமந்த இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்டு விட்டன.

இது மிகப்பெரிய பிழை. இத்தகைய பிழைகள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இதைவிடுத்து நடந்த ஒரு பிழையை மறைப்பதற்காக அல்லது அதனால் ஏற்படக்கூடிய பிற்தாக்கத்தைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் இன்னொரு பிழையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் சம்பந்தப்பட்ட அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.

பொலிஸார் சுட்டதில் இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் சாதாரணமானதன்று. இந்தச் சம்பவம் நடந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் சமூகம் எதிர்ப்பை காட்டவே செய்யும்.

இவ்வாறான எதிர்ப்பைத் தடுப்பது என்பது நடந்த சம்பவம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் அதன் மீதான நம்பிக்கைகளுமாகவே இருக்கும்.

ஆகையால் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்றதும் நம்பகத்தன்மைமிக்கதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதைவிடுத்து மாணவர்களின் மரணத்தின் எதிரொலிப்பை தணிக்கை செய்வதாக நினைத்து பயங்கரமான காரியங்களைச் செய்ய எத்தனிப்பது திரும்பத் திரும்ப பிழைகள் நடப்பதற்கு வழிவகுக்கும்.

ஆகையால் ஒரு பிழையை, குற்றத்தை ஏற்றுக் கொண்டு அதற்குப் பரிகாரம் தேடப் பழகிக்கொள்வதே நல்லதும் நன்மை தரக்கூடியதுமாகும்.

இதைவிடுத்து திசை திருப்புதல் என்ற பேரில் மீண்டும் மீண்டும் பிழைகளை, குற்றங்களைச் செய்வது பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும்.

இது ஒருபுறம் இருக்க, நேற்றைய தினம் சுன்னாகப் பகுதியில் சிவில் உடையில் நின்ற இரண்டு பொலிஸாரை இனந்தெரியாதவர்கள் வாளால் வெட்டியதான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தச் சம்பவம் கண்டனத்துக்குரியது.

அதேவேளை இந்தச் சம்பவம் குறித்த உண்மை நிலையை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

ஏனெனில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்,அதில் ஒரு மாணவன் சுன்னாகம் கந்தரோடையைச் சொந்த இடமாகக் கொண்டவர்.

அவரின் இறு திக்கிரியை இன்று நடைபெற இருக்கின்ற வேளையில்,நேற்றைய தினம் சுன்னாகத்தில் வைத்து இரண்டு பொலிஸார் வாளால் வெட்டப்பட்டனர் என்பது ஒரு பெரும் சதி நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது.

பொதுவில் மக்கள் சமூகம் குழப்பமடையக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றால், அதனைத் திசைதிருப்பும் நோக்கில் சில திட்டங்கள் தீட்டப்படுவது வழமை.

அதற்காக தீட்டப்படும் திட்டம் ஒரு இனத்துக்குப் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைக்கப் படுமாக இருந்தால் அது பயங்கரமானது.

ஆக, சுன்னாகத்தில் இரண்டு பொலிஸார் மீது வாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நிலைமையை விளக்கி குழப்பங்களைத் தடுப்பது பொலிஸ் தலைமையின் கடமையாகும்.

பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தும் அளவில் யாழ்ப்பாணத்தில் ஏதோவொரு சக்தி இருப்பது போல மேற்கொள்ளும் காட்டாப்புக்கள் இந்த மண்ணில் மீண்டும் இராணுவ ரோந்துகள், சோதனைகள், கைதுகள், விசாரணைகள் என்ற துன்பியலை தொடங்குவதற்கான பூர்வாங்கமாகவே கருத முடியும்.

ஆகையால் உண்மை நிலையை உடன் வெளிப்படுத்தி பிழைகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

SHARE