நடப்பு சாம்பியன் இந்தியா தோல்வி: இறுதிக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா

310

233 ரன்களில் சுருண்டது இந்தியா: இறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

சிட்னியில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 328 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 47-வது ஓவரின் கடைசி பந்தில் 233 ரன்களுக்குச் சுருண்டு 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

உலகக்கோப்பை அரையிறுதிகளில் தோற்காத தனது சாதனையை ஆஸ்திரேலியா தக்க வைத்தது.

இந்திய அணி அபாரமாகத் தொடங்கியது 76 ரன்களுக்கு விக்கெட் இல்லை. ஆனால் அதன் பிறகு தவன் அவுட் ஆக, விராட் கோலி தேவையில்லாமல், கவனமற்று ஒரு புல் ஷாட்டை தப்பும் தவறுமாக ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறவே, தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து 76/0 என்ற நிலையிலிருந்து 108/4 என்று ஆனது.

அதன் பிறகு ரஹானே, தோனி இணைந்து சற்றே நம்பிக்கை அளிக்கும் விதமாக 70 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் 178 ரன்களுக்குச் சென்றது. அப்போது ரஹானே அருமையான பந்தில் அவுட் ஆனார். 178/4 என்ற நிலையிலிருந்து ரஹானே விக்கெட்டையும் சேர்த்து இந்தியா அடுத்த 6 விக்கெட்டுகளை 55 ரன்களில் இழந்தது.

உலகசாம்பியன் என்ற தகுதியை இழந்ததோடு 11 போட்டிகள் தொடர் வெற்றி பெற்றதும் முடிவுக்கு வந்தது.

உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரேயொரு தோல்வி. அது அரையிறுதியாக அமைந்தது. ஏமாற்றமாக இருந்தாலும். இந்திய அணி வருந்துவதற்கு ஒன்றுமில்லை. இந்திய அணிக்கு இது ஒரு நல்ல உலகக்கோப்பை என்றே கருதப்பட வேண்டும்.

ஆஸ்திரேலிய தரப்பில் பாக்னர் 3 விக்கெட்டுகளையும், ஜான்சன், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சதம் கண்ட ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

46.5 ஓவர்களில் உலகக் கோப்பை அரையிறுதியில் 233 ரன்களுக்கு இந்தியா சுருண்டது. தோனி ஆட்டமிழந்த பிறகு 2 ரன்களில் இந்தியா மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

தோனி 65 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேற்றம்

ஸ்டார்க் வீசிய 45-வது ஓவர் சிறப்பாக அமைய ரன்கள் எடுப்பது மிகவும் கடினமானது. 65 ரன்கள் எடுத்த தோனி பந்தை அருகில் மேக்ஸ்வெல்லிடம் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார். ஆனால் மேக்ஸ்வெல் பந்தை எடுத்து நேராக ரன்னர் முனையில் ஸ்டம்பை பெயர்த்தார். தோனி அவுட். இந்தியாவின் வாய்ப்பும் முடிவுக்கு வந்தது.

43-வது ஓவரில் வாட்சனை 2 சிக்சர்கள் விளாசிய தோனி அரைசதம்

43-வது ஓவரை வாட்சன் வீச முதலில் தோனி, ஃபுல் லெந்த் பந்தை டீப் கவரில் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் அதே லெந்த் மீண்டும் லாங் ஆஃபில் ஒரு மிகப்பெரிய சிக்சரை தோனி விளாசினார். அந்த ஓவரில் 15 ரன்கள்.

தோனி தனது அரைசதத்தை எடுத்து 60 ரன்களில் தோனி உள்ளார்.

ஸ்மித்தின் அருமையான த்ரோ-வுக்கு ஜடேஜா ரன் அவுட்

42-வது ஓவரை ஜான்சன் வீச. தோனி பேக்வர்ட் பாயிண்டில் தட்டிவிட்டு நெருக்கமான சிங்கிளுக்கு ஜடேஜாவை அழைத்தார். ஜடேஜா ஓடி வந்தார் ஆனால் ஸ்மித் அருமையாக பந்தை எடுத்து ஸ்டம்பில் நேராக அடித்தார். ஜடேஜா 16 ரன்களில் அவுட்.

தப்பித்தார் தோனி: கேப்டனுக்கு கேப்டன் விட்ட கேட்ச்

41-வது ஓவரில் ஹேசில்வுட் வீச, ஷார்ட் பிட்ச் பந்தை தோனி புல் செய்தார். பந்து தூரம் செல்லவில்லை வட்டத்துக்குள் காற்றில் உயரே சென்றது கிளார்க் அதனை பிடிக்கச் சென்று நழுவ விட்டார்.

கேட்சை விட்டாரா? கோப்பையை விட்டாரா என்பது போகப்போகத் தெரியும். தோனி 42 ரன்களில் இருந்த போது கேட்ச் விடப்பட்டது.

இந்தியா வெற்றி பெற ஓவர் ஒன்றிற்கு 12.45 ரன்கள் தேவை. 

ஸ்டார்க்கிடம் வீழ்ந்த அஜிங்கிய ரஹானே

தோனியும், ரஹானேயும் இணைந்து 13.2 ஓவர்களில் 70 ரன்களைச் சேர்த்து நம்பிக்கை அளித்து வந்த நிலையில் ரஹானே 44 ரன்களில் ஸ்டார்க்கிடம் வீழ்ந்தார்.

அருமையான ஆஃப் ஸ்டம்ப் பந்து அது, அதனை தொட்டார் ரஹானே. மிகவும் மெல்தான எட்ஜ். தெரியவில்லை. ஆனால், கிளார்க் மிகவும் அருமையாக ரிவியூ கேட்டார்.

ரீப்ளேயில், ஸ்னிக்கோ மீட்டரில் பந்து ரஹானேயின் மட்டையைத் தடவிச் சென்றது தெரியவந்தது. ரஹானே அவுட். 68 பந்துகளில் சிறப்பாக 44 ரன்களை எடுத்து ஆடி வந்த ரஹானே வெளியேறினார். ஜடேஜா இறங்கியுள்ளார்.

பவர் பிளேயின் முதல் ஓவரை பாக்னர் வீச தோனி அருமையான கட் ஷாட்டில் பவுண்டரி ஒன்றை அடித்தார். 7 ரன்கள வந்தது.

35 ஓவர்களில் 170/4. இப்போது பவர் பிளே ஆரம்பம். தேவைப்படும் ரன் விகிதம் 10.60. 

ரஹானே, தோனி இடையே 5-வது விக்கெட்டுக்காக 11 ஓவர்களில் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப். 

34-வது ஓவரை வாட்சன் வீசுகிறார். முதல் பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் பவுண்டரிவிளாசினார் ரஹானே. தைரியமான ஒரு ஷாட்.

ரஹானேவுக்கு அதிர்ஷ்ட பவுண்டரி

33-வது ஓவரை ஜான்சன் வீச ரஹானே வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆடினார் மட்டையின் விளிம்பில் பட்டு சென்றது. ஸ்லிப் பீல்டர் டைவ் அடித்தார் பிடிக்க முடியவில்லை. பவுண்டரி சென்றது.

வெற்றிக்கு தேவையான ரன் விகிதம் தற்போது 10.07. 

முதல் 10 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்த இந்தியா அடுத்த 22 ஓவர்களில் 95 ரன்களை எடுத்து 4 விக்கெட்களை இழந்துள்ளது.

31-வது ஓவரை ஹேசில்வுட் வீச முதல் பந்தை மேலேறி வந்த் நேராக பவுண்டரி விளாசினார் தோனி, சக்தி வாய்ந்த ஒரு அடி அது. பிறகு கடைசி பந்தை தேர்ட் மேன் திசையில் தூக்கி அடித்து பவுண்டரி அடித்தார் தோனி. அந்த ஓவரில் 10 ரன்கள்.

30-வது ஓவரை ஷேன் வாட்சன் வீசுகிறார். 5 ரன்கள் வந்தது.

29வது ஓவரை ஹேசில்வுட் வீச வந்தார். முதல் பந்தை தோனி தூக்கி அடித்தார். பந்து காற்றில் எழும்பியது. நல்ல வேளையாக தேர்ட் மேன், பாயிண்ட் இடைவெளியில் வீரர்கள் இல்லை. இதனால் 2 ரன்கள். தோனி ரிஸ்க் எடுத்தார்.

76/0 என்று அருமையாகத் தொடங்கிய இந்திய அணி சரசர விக்கெட்டுகளை இழந்து அடுத்த 32 ரன்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

சிக்கல் அதிகரிப்பு: பாக்னர் பந்தில் ரெய்னா ஆட்டமிழந்தார்

ஆட்டத்தின் 23-வது ஓவரை பாக்னர் வீச 5-வது பந்தை அருமையாக பவுண்டரி அடித்த ரெய்னா, கடைசி பந்து சற்றே ஆஃப் ஸ்டம்பில் பவுன்ஸ் ஆக, அதனை கட் செய்ய போதிய இடமில்லை. பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஹேடினிடம் கேட்ச் ஆனது. தோனி களமிறங்கியுள்ளார். ரஹானே 13 ரன்களில் ஆடி வருகிறார். ஷாட்டை ஆட எந்த நிலையிலும் ரெய்னா இல்லை. தேர்ட் மேன் திசையில் தட்டி விட முயன்றார். வீழ்ந்தார்.

ஜான்சன் அசத்தல்: ரோஹித் சர்மா பவுல்டு ஆனார் 

ஆட்டத்தின் 18-வது ஓவரை வீசிய ஜான்சன் 5-வது பந்தை ஷாட் பிட்சாக வீச அருமையாக அதனை ரசிகர்கள் மத்தியில் மிட்விக்கெட்டில் சிக்சர் அடித்த ரோஹித் சர்மா, அடுத்த பந்து வேகமாக சற்றே உள்ளே வர ரோஹித் சர்மா சற்றே தாமதமாக மட்டையை கொண்டு வர பந்து மட்டையின் உள்விளிம்பில் லேசாகப் பட்டு ஸ்டம்புக்குள் பாய்ந்தது. சுரேஷ் ரெய்னா களமிறங்கியுள்ளார்.

ஜான்சன் பந்தில் ரோஹித் சர்மா பவுல்டு ஆனார். அவர் எடுத்த ரன்கள் 34. 48 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்.

இந்தியாவுக்கு சிக்கல்: விராட் கோலி 1 ரன்னில் அவுட்: ஜான்சன் பவுன்சரில் வீழ்ந்தார்

329 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் இந்திய அணி அருமையான தொடக்கத்துக்குப் பிறகு தவன், விராட் கோலி ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

13 பந்துகளில் 1 ரன் எடுத்த விராட் கோலி ஜான்சன் வீசிய பவுன்சரை ஹூக் செய்தார். பந்து டாப் எட்ஜ் எடுத்து உயரே எழும்பியது, தூரம் செல்லவில்லை. இதனால் பிராட் ஹேடினே அதனை சுலபமாக ஓடிச் சென்று பிடித்தார். விராட் கோலி ஏமாற்றமளித்தார்.

15-வது ஒவரை ஹேசில்வுட் கோலிக்கு மெய்டனாக வீசியுள்ளார்.

14 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியாவும் 77/1 இந்தியாவும் 77/1 என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்

329 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் இந்திய அணி சற்று முன் ஷிகர் தவன் விக்கெட்டை இழந்தது. 41 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சர் என்று அதிரடியாக ஆடி வந்த அவர் ஆட்டத்தின் 13-வது ஓவரில் ஹேசில்வுட் பந்தை மேலேறி வந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடித்தார். அங்கு கிளார்க், மேக்ஸ்வெல்லை நிறுத்தியிருந்தார் நேராக கேட்ச் ஆனது. ஷிகர் அவுட். விராட் கோலி களமிறங்கியுள்ளார்.
பாக்னரை அடித்து நொறுக்கும் ஷிகர் தவன்

பாக்னரை முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்த ஷ்கர் தவன், அவரது அடுத்த ஓவரில், ஆட்டத்தின் 12-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார். 12 ரன்கள் வந்தது. பாக்னர் 2 ஓவர்களில் 29 ரன்கள் விளாசப்பட்டார்.

10-வது ஓவர் ஜேம்ஸ் பாக்னர் வீசுகிறார். முதல் பந்து நோ-பால், ஒரு ஃப்ரீ ஹிட்: ரோஹித் 1 ரன்னையே எடுக்க முடிந்தது. ஷிகர் தவன் 2 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த பந்தை ஒதுங்கிக் கொண்டு ஸ்கொயர் லெக் மேல் சிக்ஸ் அடித்தார் தவன். 10 ஓவர்கள் பவர் பிளே முடிவில் இந்தியா 55 ரன்கள்.

மிட்செல் ஜான்சன் வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா பவுன்சரை அற்புதமாக சிக்ஸ் அடித்தார். அருமையான ஷாட்.

ஷிகர் தவனுக்கு கேட்சை விட்ட பிராட் ஹேடின்

ஆட்டத்தின் 4-வது ஓவரை ஹேசில்வுட் வீச 5 ரன்னில் இருந்த ஷிகர் தவன் இறங்கி வந்து ஒரு ஷாட்டை அடிக்க பந்து எட்ஜ் எடுத்து ஹேடினிடம் சென்றது. டைவ் அடித்துப் பார்த்தார் ஹேடின் இரண்டு கைகளையும் கொண்டு சென்றார் ஆனாலும் பிடிக்க முடியவில்லை. தப்பித்தார் ஷிகர் தவன்.

தரையில் பட்டு பிடித்த கேட்சிற்கு அவுட் கேட்ட ஷேன் வாட்சன்

சிட்னி மைதானம் என்றாலே 2008ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர் நமக்கு நினைவுக்கு வரும். நடுவர்கள் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய தவறுகள் இழைத்த டெஸ்ட் போட்டி அது. பெரிய சர்ச்சைக்குள்ளானது அந்த டெஸ்ட் போட்டி.

இன்று உலகக்கோப்பை அரையிறுதியில் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச 4-வது பந்தை ரோஹித் சர்மா டிரைவ் ஆட பந்து ஸ்லிப்பில் ஷேன் வாட்சனிடம் சென்றது. தெளிவாக தரையில் பட்டு கேட்ச் பிடித்துவிட்டு முறையீடு செய்தார்.

நடுவர் 3-வது நடுவரை அழைக்க, ரீப்ளேயில் பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. நிச்சயம் வாட்சனுக்கும் தெரிந்திருக்கும் தான் கேட்ச் பிடிக்கவில்லை என்று, இருந்தாலும் ஒரு அவுட் கேட்கின்றனர் ஆஸ்திரேலியர்கள்.

நல்ல வேளையாக நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உமர் அக்மல் பேட் செய்த போது பைல்களை தட்டி விட்டார் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின். ஹிட் அவுட் என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார் அப்போது.
இப்போது வாட்சன், தரையில் பட்ட பந்தைப் பிடித்து விட்டு கேட்ச் என்று முறையீடு செய்கிறார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் பதிவுகள்:

இறுதிக்குள் நுழைய இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 329

ரன்கள்!

உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்துள்ளது. பிராட் ஹேடின் 7 நாட் அவுட். மிட்செல் ஜான்சன் 27 நாட் அவுட்.

*

ஸ்மித் எழுச்சியால் வலுவான ஆஸி.யை இந்தியா வெல்வது சாத்தியமா? – முத்துக்குமார்

உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்களை குவித்துள்ளது. ஒரு நேரத்தில் ஸ்கோர் 350 ரன்கள் வரை செல்லலாம் என்ற நிலையிலிருந்து ஓரளவுக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவை மட்டுப்படுத்தியது என்றே கூற வேண்டும்.

முதல் 10 ஓவர்களில் 56 ரன்களுக்கு 1 விக்கெட். பிறகு 11-வது ஓவர் முதல் பவர் பிளேயிற்கு முதல் ஓவரான 32-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 167/1 என்று இருந்தது. அதாவது 22 ஓவர்களில் 111 ரன்களை இந்தியா விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டியது.

ஆனால் வழக்கமாக இந்த உலகக்கோப்பையில் நடு ஓவர்களில் இந்தியா விக்கெட்டுகளைக் கைப்பற்றும் ஆனால் இம்முறை முடியவில்லை.

பவர் பிளேயில் 5 ஓவர்களில் 64 ரன்கள் விளாசியது ஆஸ்திரேலியா. 37-வது ஓவர் முடிவில் 231/2 என்று இருந்த ஆஸ்திரேலியா அதன் பிறகு உமேஷ் யாதவ்வின் அருமையான பந்துவீச்சு மற்றும் அஸ்வினின் ஒரு விக்கெட் ஆகியவற்றால் ஆஸ்திரேலிஅயவை 234/4 என்று சரிவடையச் செய்தது.

ஆனால், அதன் பிறகு மீண்டும் ரன்களை கசிய விட்டது. மொகமது ஷமி சரியாக வீசவில்லை. ஜடேஜாவும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தாததே இந்திய அணியின் பின்னடவைக்கு காரணமாக அமைந்தது. ஆனால் யாதவ் அருமையான வேகம் மற்றும் துல்லியத்தில் பந்து வீசினார். ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை முக்கியக் கட்டத்தில் கைப்பற்றினார்.

மேக்ஸ்வெல் மிக அவசரமாக அதிரடி காட்டினார். கடைசியில் ஜான்சனுக்கு 27 ரன்கள் கொடுத்தது வேதனைதான். ஸ்மித் மீண்டும் இந்திய அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். இந்த தொடரில் அவர் இந்திய பந்துவீச்சை அதிகம் பார்த்துவிட்டார். அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஏற்கெனவே இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 360 ரன்களுக்கு மேலான இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றும் வாய்ப்புள்ளது. ஆஸி. பந்துவீச்சு, மற்றும் பீல்டிங் இந்தியாவுக்கு சவாலாக அமையும். கோலி நின்றால் சாதிக்கலாம்.

முந்தைய பதிவுகள்:

50-வது ஓவர்: மோஹித் சர்மா வீசுகிறார். ஹேடினுக்கு கேட்சை விட்டார் விராட் கோலி. லாங் ஆனில் முயற்சி செய்தார். முடியவில்லை. 4வது பந்து புல்டாஸ். ஜான்சன் மிட் ஆஃபில் தூக்கி அடித்து பவுண்டரி. 5-வது பந்து மெதுவான பந்து காத்திருந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார் ஜான்சன். கடைசி ஓவரில் 15 ரன்கள்.

49-வது ஓவரை வீசுகிறார் ஷமி. ஷமி ஓவரில் ஜான்சன் 3 பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசினார். மொகமது ஷமி 10 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எடுக்கவில்லை. 

ஆஸ்திரேலியா 300 ரன்களை எட்டியது. உலகக்கோப்பை அரையிறுதியில் முதல் முறையாக 300 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. 

ஷேன் வாட்சன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகளுக்குப் பிறகு மீண்டுமொரு ஸ்லோ பந்தை அடித்தார் வாட்சன், ஆனால் ஸ்கொயர் லெக்கில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது. மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

48-வது ஓவரை மோஹித் சர்மா வீசுகிறார். வாட்சன் ஒரு பவுண்டரி அடித்தார். கவர் திசையில் 4 ரன்கள். 3-வது பந்து ஷார்ட் பிட்ச் பந்து மீண்டும் ஒரு பவுண்டரி. இம்முறை மிட்விக்கெட்டில் அடித்தார் ஷேன் வாட்சன்.

ஜேம்ஸ் பாக்னர் 21 அவுட். 

பிராட் ஹேடின் களமிறங்கியுள்ளார்.

47-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசுகிறார். 2-வது பந்தை பாக்னர் மிட் ஆனில் பவுண்டரி அடித்தார் அடுத்த பந்தில் பாக்னர் பவுல்டு ஆனார். 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த பாக்னர் யாதவ் பந்தை சுழற்றினார் பந்து சிக்கவில்லை பவுல்டு ஆனார். ஆஸி. 6வது விக்கெட்டை இழந்தது. உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜடேஜா தன் 10 ஓவர்களில் 56 ரன்கள் விக்கெட்டுகள் இல்லை. ஜடேஜா வீசிய 46-வது ஓவரின் முதல் பந்து ஒரே சுழற்று பாக்னருக்கு 6 ரன்கள். ஜடேஜா 10-வது ஓவரை வீசி வருகிறார்.

ஷமி வீசிய 45-வது ஓவரில் 2 பவுண்டரிகள் வந்தது. மொத்தம் 13 ரன்களை கொடுத்தார் ஷமி அந்த ஓவரில்.

அஸ்வின் 10 ஓவர்களை முடித்துள்ளார் 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட். அரையிறுதியில் அருமையான பந்து வீச்சு. கடைசிபந்தை வாட்சன் மிகப்பெரிய சிக்சர் அடித்தார்.

10 ரன்களை ஒரு பவுண்டரி உதவியுடன் எடுத்த ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆட்டமிழந்தார். மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து விக்கெட்டை வீழ்த்தியது. மோஹித் சமா 43-வது ஓவரை வீசினார். முதல் பந்து சற்றே ஷார்ட் பிட்சாக விழ கிளார்க் அதனை புல் ஆடினார் ஆனால் அருகிலேயே மிட்விக்கெட்டில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆஸ்திரேலியா 248/5 என்று உள்ளது.

அதிரடி வீரர் ஜேம்ஸ் பாக்னர் களமிறங்கியுள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா 43-வது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. மைக்கேல் கிளார்க் 10 அவுட், ஷேன் வாட்சன் 4 பேட்டிங்.

ஜடேஜா வீசிய 42-வது ஓவரில் மைக்கேல் கிளார்க் ஸ்கொயர் லெக்கில் ஒரு அருமையான பவுண்டரி அடித்தார்.

32 ஓவர்கள் 167/1. 33-வது ஓவரில் பவர் பிளே எடுக்கப்பட்டது. பவர் பிளே முடிந்த பிறகு 37-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 231/2. பவர் பிளேயில் 64 ரன்கள் அதிரடி. அதன் பிறகு 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இந்திய அணி கைப்பற்றி போட்டிக்குள் வந்துள்ளது. தற்போது கிரீசில் இரண்டு புதிய பேட்ஸ்மென்கள்.

ஸ்மித் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். ரஹானே கேட்ச் பிடித்தார்.

நல்ல கள வியூகம். ஸ்வீப் ஆடினார் நேராக டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனது. டாப் எட்ஜ் எடுத்தது. வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பிளைட் செய்தார் அஸ்வின், அருமையான பந்துவீச்சு, அருமையான பீல்டிங் செட்-அப்.

அடுத்த ஓவரில் உமேஷ் யாதவ் பந்தில் ஏரோன் ஃபிஞ்ச் 81 ரன்கள் எடுத்து ஷிகர் தவன் கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள். ஆஸ்திரேலியா 38.2 ஓவர்களில் 233/4

93 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து அபாயகரமாகச் சென்று கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்தினார்.

உமேஷ் யாதவ்வின் பவுன்சர் தலை உயரத்துக்கு வர ஹூக் ஷாட்டை ஸ்மித்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.பந்து உயரே எழும்பியது. டீப் ஸ்கொயர் லெக்கில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள். ஃபிஞ்ச் 80 பேட்டிங், மேக்ஸ்வெல் 23 பேட்டிங்.

மொகமது ஷமி வீசிய 33-வது ஓவரில் புல்டாஸை லெக் திசையில் பவுண்டரி அடித்த ஸ்டீவ் ஸ்மித் 90 ரன்களுக்கு வந்தார். பிறகு ஒரு லெந்த் பந்தை அபாரமாக மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார்.

பிறகு அடுத்த பந்து ஒரு பவுண்டரி அடித்து சதம் கண்டார் ஸ்டீவ் ஸ்மித். 89 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் ஸ்மித் 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

இந்த தொடரில் இந்தியப் பந்துவீச்சை ஸ்மித் காய்ச்சுவது இப்போது தொடர்ந்துள்ளது.

பிஞ்ச், ஸ்மித் இணைந்து 28.4 ஓவர்களில் 152 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர். அஸ்வின் ஓவரிலும் ஒரு எல்.பி. அப்பீல் ஆனால் நாட் அவுட் என்கிறார் நடுவர் தர்மசேனா.

ஃபிஞ்ச், மோஹித் சர்மா பந்தை கால்காப்பில் வாங்கினார் மிகப்பெரிய அப்பீல். ஆனால் பந்து மேலே செல்வதாக ரீப்ளேயில் காட்டப்பட்டது. நாட் அவுட். 31 ஓவர்கள் முடிந்துள்ளது.

அஸ்வின் 7 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டி யுள்ளார். மோஹித் 5 ஓவர்களில் 25 ரன்கள் .கொடுத்துள்ளார்.

ஏரோன் பின்ச் அரைசதம்

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பின்ச் சற்று முன் அரைசதம் எடுத்தார். 82 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அவர் 50 ரன்கள் எடுத்துள்ளார். தொடக்கத்தில் ஷமி, யாதவ் பந்துகளில் தடவு தடவென்று தடவிய ஏரோன் பின்ச் இப்போது அரைசதம் எடுத்துள்ளார்.

பின்ச், ஸ்மித் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக இதுவரை 120 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

ஆட்டத்தின் 25-வது ஓவரை ஜடேஜா வீச 4-வது பந்தை ஸ்மித் அருமையாக சிக்ஸ் அடித்தார். கிரீசை நன்றாக பயன்படுத்தி பின்னால் சென்று மிட்விக்கெட்டில் தூக்கி அடித்தார். அருமையான ஷாட்.

22.4-வது ஓவரில் ஃபிஞ்ச்சுக்கு பந்துவீசினார் ஜடேஜா. எல்பிடபிள்யூ அப்பீல் செய்தார். கள நடுவர் மறுத்துவிட்டார். அதன்பின், ஜடேஜா அளித்த நம்பிக்கையின் பேரில் ரிவியூ கோரினார் தோனி. ஆனால், அது அவுட் இல்லை. இந்திய அணிக்கு ஏமாற்றம்.

ஸ்மித் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியா ரன் குவிப்பு வேகத்தை கூட்டி வருகிறது. தமது அணிக்கு அழுத்தத்தை ஸ்மித் குறைத்துள்ள நிலையில், அவருக்கு பக்க பலமாக திகழ்கிறார் ஃபிஞ்ச்.

12-வது ஓவரை கோலியை வீச வைத்தார் தோனி. கோலி அந்த ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார். 13-வது ஓவரை மோஹித் சர்மாவும், 14-வது ஓவரை ரவீந்திர ஜடேஜாவும் வீசினர்.

5.1. ஓவரில் உமேஷ் பந்தை எதிர்கொண்டார் ஸ்மித். உமேஷ் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தார். கச்சிதமாக கவனித்த கள நடுவர் அவுட் தரவில்லை.

3.1-வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய அட்டகாசமான பவுன்சரை எதிர்கொண்ட வார்னர், கோலியிடம் எளிதான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தார்.

துவக்க இணையைப் பிரிக்கப்பட்டது, ஆஸ்திரேலிய பேட்டிங்குக்கு சற்றே அடுத்தத்தையும், இந்தியப் பந்துவீச்சுக்கு ஊக்கத்தையும் தந்துள்ளது.

சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து களமிறங்கியது.

போட்டிக்கு முன் சில பின்னணி தகவல்கள்:

ஆஸ்திரேலியா இதுவரை அரையிறுதியில் தோற்றதே கிடையாது. அதனால் அந்த அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறலாம் என ஆஸ்திரேலியர்கள் நம்புகின்றனர்.

அதேநேரத்தில் 1992 முதல் உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்கு ஆசியக் கண்டத்தை சேர்ந்த அணிகள் முன்னேறி வருவதால் இந்தியா வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இரு அணிகளுமே ஒன்றுக் கொன்று சளைத்தவை இல்லை என்பதால் இந்த ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்-5

* இவ்விரு அணிகளும் முதல்முறையாக அரையிறுதியில் மோதுகின்றன. அதேநேரத்தில் நாக் அவுட் சுற்றில் இருமுறை மோதியுள்ளன. அதில் 2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவும், 2011 உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன.

* சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 12 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது ஆஸ்திரேலியா.

* இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்சுக்கு 6 முறை எல்பிடபிள்யூ அவுட் கேட்கப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே அவர் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

* இந்த உலகக் கோப்பையில் அதிக டாட் பால் (ரன் அடிக்கப்படாத பந்து) வீசியவர்கள் வரிசையில் (குறைந்த பட்சம் 50 பந்துகள் வீசியவர்கள்) இந்தியாவின் முகமது சமி (69%) முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (68%) 2-வது இடத்திலும் உள்ளனர்.

* சிட்னியில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 அரைசதங்களை விளாசியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன்.

SHARE