நாங்கள் இருக்கும் ஃபார்மிற்கு இந்தியா மட்டுமல்ல, எந்த அணியும் நிகரில்லை! பாகிஸ்தான் முன்னாள் வீரர்

127

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது வலுவாக இருப்பதால், எந்த அணியையும் அதனுடன் ஒப்பிட முடியாது என முன்னாள் வீரர் லத்தீப் கூறியுள்ளார்.

டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி 3வது இடத்திலும் உள்ளன. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 3வது இடத்தில் உள்ள நிலையில், இந்திய அணி 4வது இடத்தில் உள்ளது.

இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பை பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதேபோல் டி20 உலகக் கோப்பை தொடரில் மோத உள்ளன. பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. இதன்மூலம் வீரர்களின் தரவரிசை பட்டியலில், அந்த அணி வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். எனவே, எதிர்வரும் தொடர்களில் பாகிஸ்தான் அணி மற்ற அணிகளுக்கு கடுமையாக நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியுடன் எந்த அணியையும் ஒப்பிட முடியாது என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ராஷித் லத்தீப் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்திய அணி சிறந்த அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியுடன் எந்த அணியையும் ஒப்பிட முடியாது.

பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அப்ரிடி, பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை சிறந்த வீரர்கள் என ஐசிசி அங்கீகரித்துள்ளது. இந்த ஆண்டு நடக்கும் ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும் என நம்புகிறேன். இந்திய அணியை கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. எனவே, பாகிஸ்தானின் நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE