ஆசிய கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அபுதாபியில் நேற்று நடந்த ஆசிய கிண்ண தொடரின் சூப்பர்-4 ஆட்டத்தில் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி துடுப்பாட்டத்தை துவங்கியது. தொடக்க வீரர் லிடான் தாஸ் நிதானமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த மிதுன், நஸ்முல், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ரஹிம் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது, வங்கதேசம் 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தத்தளித்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் கைகோர்த்த கேயாஸ் மற்றும் மக்மதுல்லா இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் வங்கதேசம் சரிவில் இருந்து மீண்டது. மக்மதுல்லா 81 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் எடுத்தார்.
வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ஓட்டங்கள் எடுத்தது. கேயாஸ் 89 பந்துகளில் 72 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அஃப்தாப் அலாம் 3 விக்கெட்டுகளும், ரஷித்கான் மற்றும் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இஷனுல்லா ஜனத் 8 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த ரஹ்மத் ஷா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க வீரர் ஷஷாத் 53 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் ஹஸ்மதுல்லா-ஆப்கன் இருவரும் கைகோர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் ஆப்கன் 39 ஓட்டங்களில் மோர்தசா பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பின்னர் அரைசதம் கடந்த ஹஸ்மதுல்லா 99 பந்துகளில் 71 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
எனினும் நபி ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அணியின் ஸ்கோர் 238 ஆக உயர்ந்தபோது அவரும் 38 ஓட்டங்களில் அவுட் ஆக, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை முஸ்தாபிசுர் ரகுமான் துல்லியமாக வீசினார். இதனால் ஆப்கானிஸ்தானால் வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இறுதியில் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்ததால், வங்கதேச அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வங்கதேச தரப்பில் மோர்தசா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

