பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்

309

 

 

callum-macrae-channel4பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்-காணொளி இணைப்பு-

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே.

இலங்கை அரசு தனது எதிரியாகப் பிரகடனப்படுத்திய கலம் மக்ரே அதே ஆவணப்படத்தைச் சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார். காலனியத்திற்குப் பின்னான இலங்கையின் அரசியல் தலைமைகள் செய்யது துணியாத செயல் இது. ஊடகவியலாளர் என்ற தனது எல்லைக் கோடுகளுக்கு அப்பால், உலக சமூகத்தின் மீது பற்றுக்கொண்ட கலம் மக்ரே சாமானியச் சிங்கள மக்களுக்குத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து சொல்லப்படாமல் இதுவரை தடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

ஒற்றைப் பரிமாணச் சிந்தனைக்குள் மூடிவைக்கப்பட்டுள்ள சிங்கள சமூகத்தை ஏமாற்றிச் சுரண்டுவதற்காக சிங்கள அதிகாரவர்க்கம் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை அவர்கள் மத்தியில் வளர்க்கிறது. இன்றைய மைத்திரிபால சிரிசேன அரசு உட்பட இலங்கையின் அனைத்து அரசுகளுமே பேரினவாதத்தை ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. இனவெறிக்கு அப்பால் சிங்கள மக்களிடம் உண்மையை சொல்ல விரும்பும் யாரும் இலங்கை அதிகாரவர்க்கத்தால் அனுமதிக்கப்படுவதில்லை.

கொழும்பில் மேடை போட்டு தமிழீழம் வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசுவதற்கு அனுமதிக்கும் சிங்களப் பேரினவாத அரசு, தமிழர்களின் பிரச்சனைகளைச் சிங்கள மக்களுக்குச் சொல்ல முற்பட்ட ரவிராஜ் போன்றவர்களை படுகொலை செய்திருக்கிறது.

சிங்கள ஊடகங்களிடன் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளைச் சொல்ல முற்படும் போராட்டங்களும் ஆவணங்களும் இருட்டடிப்புச் செய்யப்படும் அதே வேளை, தமிழ் நாட்டிலிருந்தும் புலம் பெயர் நாடுகளிலிருந்தும் ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ என்று கொடிகளோடு நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன..

சாமானியச் சிங்கள மக்களுக்கு மறைக்கப்படும் தமிழினப் படுகொலை தொடர்பான உண்மைகள் அவர்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். கலம் மக்ரே இன் சிங்கள ஆவணப்படம் அதற்கான முதல் முயற்சியாகக் கருதப்படலாம்.

பிழைப்புவாதத் தமிழ் அரசியல் தலைமைகள் நிராகரித்த அரசியல் பக்கம் கலம் மக்ரே என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள ஆவணப்படம் குறித்தான உரையாடலை கலம் மக்ரேயிடம் ஆரம்பித்த போது அது பல்வேறு அரசியல் விடையங்களூடாக விரிந்து சென்றது.

‘No Fire Zone’ ஆவணப்படம் தயாரித்தமைக்கான காரணத்தைக் கலம் மக்ரேயிடம் கேட்ட போது, வன்னிப் படுகொலைகள் தொடர்பான ஆவணம் மட்டுமல்ல ஈராக்கில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் உட்படப் பல்வேறு ஆவணங்களை இயக்கியதாகக் கூறும் மக்ரே அந்த அடிப்படையிலேயே தன்னை சனல் 4 தொடர்பு கொண்டதாகக் கூறுகிறார்.

ஆவணப்படத்தின் முதலாவது பகுதியை வெளியிட்ட பின்னர் இலங்கை அரசு தன்னை புலிகளிடம் பணம் வாங்கியதாகக் குற்றம் சுமத்திய போது மேலும் ஆதாரங்களை வெளியிடவேண்டிய தேவை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும் புலிகளது போர்க்குற்றங்களையும் வெளிப்படுத்திய போதும் இலங்கை அரசு தன்னைப் புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டது என்கிறார்.

ஊடகவியலாளர் என்ற எல்லைக்குள் தான் அரசியல் கருத்து ஒன்றை முன்வைக்க முடியாது என்று கூறிய கலம் மக்ரே சில முக்கியமான கருத்துக்களை வெளியிட்டார்.

சுயநிர்ணைய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என ஐக்கிய நாடுகள் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. சுய நிர்ணைய உரிமையை வழங்கக் கோரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக தமிழீழத்திற்கான போராட்டத்தை நடத்தியமை இயக்கங்களின் தவறாயினும், சுய நிர்ணைய உரிமைக்காக தொடர்ந்தும் தமிழ்ப் பேசும் மக்கள் போராடுவதில் தவறானதா என்ற கேள்விக்கு தான் ஒரு உலகக் குடிமகன் என்ற அடிப்படையில் பதிலளிப்பதாகக் குறிப்பிட்டார்.

ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் தமிழர்கள் சுய நிர்ணைய உரிமைக்கு உரித்துடையவர்களே என்று வெளிப்படையாகக் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வாழ்கிறாரா என்று கேட்ட போது தான் அப்படி எண்ணவில்லை என்றார்.

ltte_prabaharanபோர்க்குற்ற ஆதாரங்கள் கிடைக்கும் ஒவ்வொரு தடவையும் அவை எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து என்ற தகவல்களுக்கு அப்பால் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே தமது அணுகுமுறையாக இருந்தது என்கிறார். தடைய அறிவியல் முறைமையைப் பயன்படுத்தி விசாரணை நடத்தியே முடிவிற்கு வந்தாகக் குறிப்பிடுகிறார்.

பிரபாகரன் போர்க்களத்தில் கொல்லப்பட்டாரா எனக் கேட்ட போது ஆதாரங்கள் அப்படி அமைந்திருக்கவில்லை என்றார்.

சில ஆதாரங்களின் அடிப்படையில், அவரது சூட்டுக் காயங்களின் தன்மையை ஆராயும் போது, குறிப்பாக தடயவியல் விசாரணையின் அடிப்படையில் மிக அருகிலிருந்து அவருடைய தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. அவர் அருகிலிருந்தே சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. ஆதாரங்களின் அடிப்படையில் அவர் அருகிலிருந்தே சுட்டுக்கொல்லப்பட்டார் எனறு கூறப்படலாமாயினும் அது நிறுவப்படவில்லை என்றார்.
உலகத்தின் பல்வேறு நாடுகள் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கஷ்மீரில் மக்கள் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுகிறார்கள்,

இந்தியாவில் மாவோயிஸ்டுக்கள் போராடுகிறார்கள், பிலிப்பைன்சில் கம்யூனிஸ்டுக்கள் நாட்டின் ஒரு பகுதியையே கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கையில் மட்டும் இந்த அழிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் தொடர்பாகக் கேட்டகப்பட்டது.

முதலாவதாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை முதலாவது காரணமாகக் குறிப்பிட்டார். தவிர, ஊழல் மலிந்த சர்வாதிகார அரசை வைத்துக் இலகுவாக படுகொலைகளை நடத்த முடிந்தது என்றார். புலிகளின் தமது தவறுகளால் உலகத்தின் மத்தியிலிருந்து அன்னியப் பட்டிருந்தனர். அதன் காரணமாக உலகம் முழுவதும், யாராக இருந்தாலும் புலிகளை அழிப்பதிற்கு ஆதரவு வழங்கும் நிலையிலேயே இருந்தனர். இவை அனைத்தும் இணைந்த காரணங்களே புலிகளின் அழிப்பிற்குக் காரணம் என்றார்.

இலங்கை அரசு தமிழ் அடையாளத்தை அழிப்பதிலேயே குறியாக இருந்தது என்று மக்ரே தனது நேர்காணலில் பல பகுதிகளில் குறிப்பிடுகிறார். ஐ.நா விசாரணை தொடர்ந்தும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். மேற்கு நாடுகள் மட்டுமல்ல, சீனா, ஈரான் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் கூட யுத்தத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கின என்றார்.

SHARE