சுற்றாடலில் சேரும் உக்காத கழிவுகளினால் சுற்றாடல் கடுமையாக மாசுபடுவதன் காரணமாக அவற்றினை அகற்றுவதற்கான தேவை எழுந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் த.உதயராஜன் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு அருகில் இலத்திரனியல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் சூழலில் தங்குவதன் காரணமாக சூழலுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதுடன் நோய் தாக்கங்களையும் எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வீடுகளிலும் வீடுகளின் சுற்றாடலிலும் உள்ள பிளாஸ்டிக், இலத்திரனியல், மின்சாதனங்களை கையளிக்கும் நிகழ்வு மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் த.உதயராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள இலத்திரனியல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.