பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக நீண்ட காலமாக அடைய முடியாமல் போன பொருளாதார வாய்ப்புகளை வெற்றிகொண்டு நாட்டின் முழுமையான பொருளாதார ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பலமான தேசமாக இலங்கை எழுந்து நிற்கிறது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்தியாவின் கோவா நகரில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற பிறிக்ஸ் – பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய உலகின் பொருளாதார பலமிக்க நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட்டு உலகுடன் இணைந்து செல்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திரத்தின் ஒரு மூலோபாய புள்ளியில் இலங்கை அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த அமைவிடத்தைப்பயன்படுத்தி உலகுடன் இணைந்துசெல்ல இலங்கை எடுத்து வரும் முயற்சிகளில் முழுமையாக வெற்றிபெற முடியும் என தாம் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த முயற்சியில் ஒரு கூட்டு முன்னேற்றத்தை அடைவதுடன் ஏனைய நாடுகளுடனான ஒத்துழைப்பின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளிலிருந்து அதிகபட்ச பயன் மூலம் அபிவிருத்தியை அடைவதும் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுக்கும் அந்த நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இலங்கையின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
பொருளாதார முன்னேற்றத்திற்கு பிராந்திய சமாதானமும் ஸ்திரத்தன்மையும் அடிப்படைத் தேவைகளாகும் என்பதால் பூகோள பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான எந்தவொரு கூட்டு முயற்சிக்கும் இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சமாதானத்தையும் முன்னேற்றத்தையும் அடைந்துகொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளின் வெற்றிக்கு பிறிக்ஸ் – பிம்ஸ்டெக் பிராந்திய அரசாங்கங்களின் முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறினார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், வரி ஏய்ப்பு, அரச வளங்களை கொள்ளையடித்தல் மற்றும் ஊழலுக்கு எதிராக பிராந்திய ரீதியான கூட்டு முயற்சிகள் அவசியம் எனத் தெரிவித்தார்.
சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின், பிறிக்ஸ் – பிம்ஸ்டெக் நாடுகள் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி சிங் பிங், உலக சனத்தொகையில் 50 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிறிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு 2008 பொருளாதார நெருக்கடியுடன் மந்தகதியை அடைந்தபோதும், எதிர்காலத்தில் இந்த பிராந்திய சக்தி உலகின் எதிர்காலப் போக்கை தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டார்.
பிறிக்ஸ் – பிம்ஸ்டெக் பிராந்திய நாடுகளின் அபிவிருத்தியில் புதிய உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முக்கிய இடம் உள்ளதாகக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி, இதற்காக அறிவுப் பரிமாற்றம் மற்றும் உற்பத்திக்கான முதலீடு என்பவை அவசியம் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.10.17