மே.தீவுகளை புரட்டிப்போட்ட சுழல்! அதிரிபுதிரி வெற்றி

128

 

அதிரடியான ஆட்டத்தினால் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்
அபாரமான சுழற்பந்து வீசினால் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய மிட்செல் சான்ட்னர்
ஜமைக்காவில் நடந்த டி20 போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது நியூசிலாந்து.

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கிங்ஸ்டனின் சபினா பார்க் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் குவித்தது.

கப்தில் 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கான்வே அதிரடியாக 43 ஓட்டங்களும், வில்லியம்சன் 47 ஓட்டங்களும் விளாசினர். கடைசி கட்டத்தில் நீஷம் 15 பந்துகளில் 33 ஓட்டங்கள் அடித்து நொறுக்கினார்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர் மற்றும் மெக்காய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் மேயர்ஸ் ஒரு ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் பூரான் 15 ஓட்டங்களில் சான்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆனார். டிவோன் தாமஸ் மற்றும் ஹெட்மையர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 42 ஓட்டங்கள் எடுத்திருந்த ப்ரூக்ஸை தனது சுழலில் சான்ட்னர் வீழ்த்தினார். ஹோல்டர் 25 ஓட்டங்களும், பாவெல் 18 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷெப்பர்ட் 16 பந்துகளில் 31 ஓட்டங்களும், ஓடியன் ஸ்மித் 12 பந்துகளில் 27 ஓட்டங்களும் எடுத்தனர். ஆனாலும் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், சௌதி, பெர்குசன் மற்றும் சோதி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

 

SHARE