வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு 2 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்

188
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
.
.
அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இதனால் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான தீரா பகை ஏற்பட்டது.
இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து பேச தயார் என டிரம்ப் முன் வந்தார்.  இதற்கு கிம்மும் சம்மதம் தெரிவித்த நிலையில், இரு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்து பேசுவது என முடிவானது.
அதன்படி, கடந்த 12ந்தேதி டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகிய இரு தலைவர்களும் சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில், அணு ஆயுத பரிசோதனைகளை முழுவதும் கைவிடுவது என வடகொரியா உறுதி அளித்துள்ளது.  இதற்கு பதிலாக வடகொரியாவுக்கு மண்டல பாதுகாப்பு அளிப்பது என அமெரிக்காவும் உத்தரவாதம் அளித்திருந்தது.
அதன்பின் கிம் வடகொரியா புறப்பட்டு சென்றார்.  அவர் செல்லும் வழியில், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுவார் என கூறப்பட்டது.  ஆனால் நேராக வடகொரியா சென்ற கிம்முக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கிம் ஜாங் அன் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் சீனாவுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறார்.  இந்த தகவலை தென்கொரியாவில் உள்ள யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
SHARE