
உரிமைக்காகப் போராடிய ஒரு இனத்தை ஆயுதமுனையில் அடிமைப்படுத்தி அவர்களின் உயிர், உடைமை ஆகியவற்றிற்கும் அழிவுகளை ஏற்படுத்திவிட்டு சர்வதேச சமூகம் வழங்கும் நிவாரணங்களையும் தட்டிப்பறிக்கும் முயற்சியில் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது.
புதிதாக அமைக்கவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவித்த போதே, மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எமது உரிமைக்கும் தற்காப்பிற்குமான ஆயுதபோராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் 2009இல் சர்வதேச ஒத்துழைப்புடன் ஆயுதமுனையில் மௌனிக்கப்பட்டது. யுத்தம் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினை தீரவில்லை என்பதை உணர்ந்துகொண்ட சர்வதேச சமூகம் தமது தவறுகளை மூடிமறைக்க மனிதாபிமான உதவிகள், நிவாரணங்கள் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தது.
இதன் முதற்கட்டமாக இந்தியா வடக்கு,கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகளைக் கட்டித்தருவதற்கு முன்வந்தது. ஆனால் கடந்த அரசு அதனை தனது இராஜதந்திர அணுகுமுறையினூடாக நாட்டின் சகல பகுதியினருக்கும் என்று மாற்றியமைத்தது. யுத்தம் முடிவடைந்த கையுடன் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறையினால் இன்னமும்கூட முற்றுப்பெறாமல் இழுபறிபடுகிறது.
இந்திய அரசாங்கம் அறிவித்ததைப் போன்று 50,000 வீடுகளையும் வடக்கு,கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கினால் சேதத்தின் விபரம் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே முன்னைய அரசாங்கம் தனது இராஜதந்திர நடவடிக்கையினூடாக அத்தகைய நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியது.
தற்போது 21 இலட்சம் பெறுமதியான 65,000 உருக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கு வெளிநாட்டுக்கடன் உதவியுடன் அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அத்திட்டத்திலும் பயனாளிகளைத் தெரிவு செய்யும் படிவத்தில் கேட்கப்படுகின்ற கேள்விகளையும் உற்றுநோக்கும்போது கடந்த அரசாங்கத்தின் அணுகுமுறை இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்ள தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்கின்றதா? என்ற சந்தேகம் மிகவும் வலுவாக எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளின் தரம் ஒருபுறம் குழப்பத்தை ஏற்படுத்துகையில், பயனாளிகள் தெரிவு எமது மக்களை மேலும் குழப்பியுள்ளது. அதேநேரம் தற்போதும் இடம்பெயர்ந்த முகாமில் இருக்கின்றீர்களா என்றவொரு வினா கேட்கப்பட்டுள்ளதே தவிர பொதுமக்களின் இழப்பீடு தொடர்பாக எவ்விதமான தரவுகளையும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படவில்லை.மேலும் இவ்வாறானதொரு கேள்வியால் முகாமில் இல்லாத இழப்பைச் சந்தித்தவர்கள் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத நிலையும் உள்ளது.
போரில் பல்வேறு உள்ளக இடப்பெயர்வுகளைச் சந்தித்து வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி எதிர்காலத்திற்காகச் சேமித்திருந்த அனைத்தையும் இழந்து ஒதுங்குவதற்கு கொட்டில்கூட இல்லாத நிலையில் எமது மக்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக மிகவும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். உறவினர்களையும் தமது அன்பிற்குரியவர்களையும் கணவரையும் மனைவியையும் பிள்ளைகளையும் தாய்
தந்தையரையும் இழந்து இருந்த சொத்துக்களையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உரிய நிவாரணத்தை அவர்களின் இருப்பிடம் தேடிச்சென்று வழங்க வேண்டியது பொறுப்பு மிக்க அரசாங்கத்தின் கடமை.
ஆனால் குளறுபடிகள் நிறைந்த விண்ணப்பத்தை எங்கு பெற்றுக்கொள்வது என்று தெரிவிக்காமல், யாரிடம் கையளிப்பது என்பதை அறிவிக்காமல் எமது மக்களை மீண்டும் மீண்டும் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவதுதான் நல்லாட்சியா?
அதுவொருபுறமிருக்கையில் பொதுமக்களை தமது சொந்தக்காணிகளில் மீளவும் குடியேற்றி அதிலேயே அவர்களுக்கான நிரந்தர வீடுகள் வழங்கப்பட வேண்டும். தற்போது ஒருவிட்டுக்கு செலவிடப்படும் 21 இலட்சத்தில் நிரந்தமான கல்வீடுகள் இரண்டு கட்டமுடியும். அது பரம்பரை ரீதியாகவும் மக்களுக்கு பயன்தரவல்லது. அவ்வாறான செயற்பாட்டை தவிர்க்கும் இந்த அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தை
ஏற்படுத்தப்போகிறது?
வன்னி மாவட்டத்திற்கு மட்டும் ஏறக்குறைய 40ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது. நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் வாழ்வதற்கான வீட்டினை நேர்மையாக வழங்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
பொதுமக்களின் இழப்பீடு குறித்த உண்மையான தொகை தெரிந்துவிட்டால் தாம் சர்வதேசரீதியில் மீண்டும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சத்தில் பயனாளிகளைக் குறைத்துக் காட்டுவது எந்தவிதத்திலும் நன்மை பயக்காது.
உண்மையான புள்ளிவிபரங்கள் அனைத்து உதவி வழங்கும் நாடுகளிடமும் இருக்கின்றன. ஆகவே அரசாங்கம் தயக்கமின்றி உள்ளது உள்ளபடி பயனாளிகளைத் தெரிவு செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு அத்தியாவசிய தேவையான வீட்டை எமது சூழலுக்கேற்ப, எமது பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு அமைய கட்டிக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும். அல்லாவிடில் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்களுடன் வீதியில் இறங்கி போராடநேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.