தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விட்டு நான் ஒருபோதும் விலக மாட்டேன்-ஈ.சரவணபவன்

370
த தே கூ பாராளுமன்ற உறுப்பினர் இரா .சரவணபவன் அவர்களின் எழுத்துமூல அறிக்கை இணைப்பு
எமது இணையதளத்தில்  வெளியாகியுள்ள செய்தி பொய்யானது எனதமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் உரிமையாளருமான இரா .சரவணபவன்  மறுப்பு தெரிவித்துள்ளார் .
எமது இணையதளத்துடன் தொடர்பு கொண்ட இரா .சரவணபவன் அவர்கள் இச் செய்தி பொய்யானது என்று எது தொடர்பில் எழுத்துமூலம் அறிக்கை  எமது இணையதளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்

 

அறிக்கை இணைப்பு

 

ஈ.சரவணபவன்
நாடாளுமன்ற உறுப்பினர்
யாழ்ப்பாண மாவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
03.12.2014

ஊடகச் செய்திக் குறிப்பு

கனம்
பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் செய்தி முகாமையாளர்ஃ இணையப் பதிப்புப் பொறுப்பாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நான் ஆளும் கட்சியில் இணைவுள்ளேன் என்று ஒரு கட்டுக்கதை [ வதந்தி ] வேண்டும் என்றே கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது; திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ள விசமத்தனமான செயல் என்று திட்டவட்டமாக அடித்துக் கூறுகின்றேன்.
தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விட்டு நான் ஒருபோதும் விலக மாட்டேன் என்பதை தமிழ் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படும் வகையில் நான் ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டேன்.
அரச தரப்புக்கு வருமாறு எனக்கு அழைப்போ அல்லது வெறும் சமிக்ஞையோகூட விடுக்கப்படாத நிலையில் இவ்வாறான ஒரு பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் கொழும்பு அரசினதும் அதன் புலனாய்வாளர்களினதும் கைங்கரியம் மட்டுமே உள்ளது. எந்தவொரு செய்தியாயினும் அதனைத் தீர விசாரித்து உறுதிப்படுத்தி அனைத்துப் பக்கங்களினதும் கருத்துக்களையும் பெற்று வெளியிடுவதே ஊடக அறம் என்பதை இணைய ஊடகங்களும் கவனத்தில் கொள்ளவேண்டும். கூட்டமைப்பினுள் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய முயற்சிக்கும் அரச சக்திகளினதும் கூட்டமைப்புக்குள்ளேயே இருந்திருக்கக்கூடிய சில சுயலாப அரசியல் சக்திகளினதும் தவறான வழிகாட்டலுக்குள் இணையத் தளங்கள் தவறி வீழ்ந்திருக்கக்கூடும். எனினும் தமிழர்களின் தனித்த அரசியல் பிரதிநிதியான கூட்டமைப்பை பலவீனபடுத்துவதற்கான எதிரிகளின் வலைகளுக்கு வீழ்ந்துவிடாமல் இருப்பதில் இணையத்தளங்கள் அதிகம் கவனத்துடன் செயற்படவேண்டியது அவசியம்.
இந்த வதந்தியில் மேலும் ஒரு வேடிக்கையான தகவலும் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக்கும் எனது உதயன் பத்திரிகைக்கும் எதிராகத் தொடுத்த வழக்குகளில் இருந்து விடுவிக்க 2 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் கூறுகின்றது.
அது அப்பட்டமான பொய். டக்ளஸ் தேவானந்தா வைத்த வழக்கு 03/12/2014 அன்றுகூட யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பவர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைப் பிரதியிலிருந்து அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொரு வழக்குகளையும் பல லட்சம் ரூபா செலவில் நான் நடத்தி வருகின்றேன். அப்படியிருக்கையில் அந்த வழக்குகளில் இருந்து டக்ளஸ் எப்படி என்னை விடுவிப்பது.
இவ்வாறான வதந்திகளைப் பரப்புவதன் மூலம் மலினமான அரசியல் லாபம் யாருக்குக் கிடைக்கும் என்பது எமது மக்களுக்குப் புரியாததல்ல. நான் கடந்த 30 வருடங்களாக யாழ்ப்பாண மண்ணில் இருந்து தினசரிப் பத்திரிகை ஒன்றை வெளியிடுபவன். எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் வந்தபோதும் மக்களின் கருத்தறியும் உரிமையை நிலைநிறுத்துவதற்காக பாடுபடத் துணிந்தவன். அதன் விளைவாக பல மில்லியன் கணக்கான சொத்துக்களையும் விலைமதிக்க முடியாத உயிர்களையும் இழந்தவன். அப்போதெல்லாம் அரசு பக்கம் போகாமல் அரசின் உதவிகளைப் பெறாமல் சுயமாக தேசிய சிந்தனையோடு நின்ற நான் அற்பக் காசு 2 கோடி ரூபாவுக்காக அரசுப் பக்கம் தாவினேன் என்று கூறுவதை நம்புவதற்குத் தமிழர்கள் தயாராக இருப்பார்கள் என்று நினைக்கவில்லை.
இந்தத் தேர்தல் காலத்தில் நேரடியாகத் தமிழர்களிடம் சென்று வாக்குக் கேட்பதற்கு வக்கில்லாதவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சிலரைத் தங்கள் பக்கம் திருடிவிட்டதாகக் காட்டி மக்கள் வாக்குகளையும் திருடப்பார்க்கிறார்கள். அவர்களின் நயவஞ்சக போக்கு மக்களுக்குப் புரியாததல்ல. அவர்கள் அதனை நம்பப் போவதுமில்லை.
தமிழ் மக்களுக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ நான் ஒருபோதும் துரோகமிழைக்கப்போவதில்லை என்பதை மக்கள் முன் ஆணித்தரமாகக் கூறிக்கொண்டு முதுகுக்குப் பின்னால் மோதும் இத்தகைய போக்கை அரசும் அதன் அடிவருடித் தமிழ்க் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கைவிட்டு நேரடியாக முகத்துக்கு நேரே கருத்து மோதல்களில் ஈடுபடமுன்ரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

SHARE