
வடக்கில் பல கிராம சேவையாளர் பிரிவுகளில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், வேறு பிரிவுகளில் கடமையாற்றுகின்ற கிராம சேவையாளர்களே இப் பிரிவுகளில் பதில் கடமையாற்ற வேண்டிய நிலை இருந்து வருகிறது. சில கிராம சேவையாளர்கள் இரண்டிற்கு மேற்பட்ட பிரிவுகளில் கடமையாற்ற வேண்டிய நிலைமைகளும் காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்படாத நிலையும் காணப்படுவதால், மக்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மேற்படி வெற்றிடங்களை இனங்கண்டு, அவற்றை நிரப்புவதற்கு நாம் போதிய முயற்சிகளை எடுத்திருந்தோம். எனவே, கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை வடக்கில் ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா, இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.