வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு எனும் BIMSTEC, பிராந்தியத்துக்குள் வர்த்தகத் துறையினை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான தொழில்நுட்பத்தினை பரிமாறிக் கொள்ளுதல் கட்டாயத் தேவையாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கேந்திரமாக இலங்கையினை மாற்ற தயாராக இருப்பதாகவும் அதற்கென ஒரு பிரத்தியேக நிறுவனத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இன்று (16) இந்தியாவின் கோவா நகரத்தில் ஆரம்பமான BIMSTEC அரச தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
BRICS மாநாட்டுக்கு சமாந்தரமாக நடைபபெற்ற இம்மாநாட்டில் இலங்கை, தாய்லாந்து. பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம் பங்களாதேஸ் ஆகிய BIMSTEC பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்த அனைத்து அரச தலைவர்களையும் வரவேற்றார்.
இம்மாநாட்டில் விசேட உரையாறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், BIMSTEC நாடுகளின் அபிவிருத்தியை மேம்படுத்திக்கொள்ள இவ்வாறான ஒத்துழைப்பு மாநாடுகள் மிக முக்கியமானதாகும் எனத் தெரிவித்தார்.
சார்க் மற்றும் ஆசிய பிராந்தியத்திற்கிடையே பொருளாதார மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பினை மேலும் வளர்ச்சிபெறச் செய்வதற்கு இம்மாநாடு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையினை வெளிப்படுத்திய ஜனாதிபதி அவர்கள், இக்குறிக்கோளை அடைய மனித வளங்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும் எனவும் ஆகையால் சகலவித பயங்கரவாத செயற்பாடுகளையும் ஒடுக்குவதற்கு பிராந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இலங்கையின் இலக்கு அறிவை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு சமூகச் சந்தை முறையிலான பொருளாதாரமே ஆகுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்குத் தேவையான அனைத்துத் வேலைத்திட்டங்களும் தற்போது இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களிடமிருந்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு விசேட வரவேற்பு கிடைக்கப் பெற்றதுடன் அத்தலைவர்கள், தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியிடம், தத்தமது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
16.10.2016