கடந்த ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மீது அதிருப்பதி அடைந்த மக்கள் மாற்று சக்தியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கமைவாக ஜனவரி எட்டு என பெயரிடப்பட்ட மக்கள் புரட்சியின் மூலம் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவது மற்றும் ஊழல் மோசடிகள் அற்ற நாடொன்றை கட்டியெழுப்புவதே ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அந்த சக்திகளின் பிரதான வாக்குறுதியாகும்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அதற்கான நிறுவனங்கள் சில உருவாக்கப்பட்ட போதும் கிட்டதட்ட இரண்டு வருடங்களை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனங்கள் மீது மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அரசியலில் நெருக்கமானவர்களை பாதுகாத்து தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அரசியல்வாதிகளுக்கு துன்பத்தை கொடுக்கும் நிறுவனமாக அந்த நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் எச்சரிக்கையை அரசியல் நன்மைகளுக்காக சிலரினால் மிகவும் தவறான முறையில் மக்கள் மத்தியில் செல்லப்பட்டுள்ளது.
நல்லாட்சி சமூகம் ஒன்றை உண்மையாக எதிர்பார்க்கும் மக்கள், குறித்த நிறுவனங்களில் செயற்பாடுகளுக்கு இணங்கவில்லை. தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அந்த கடிதத்தை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிக்கவுள்ளார்.
தற்போது ஜனாதிபதியிடம் இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று மக்களின் விருப்பத்திற்கமைய மக்களின் பணத்தை மோசடி செய்த ராஜபக்ச குடும்பம் மற்றும் குழுவினர் தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் நிறுவனங்களை கட்டியெழுப்புதல் அல்லது தற்போதைய நிறுவனங்களை வலுவடைய செய்வதாகும்.
இராண்டாவது இந்த அரசாங்கத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உட்பட மோசடி குழுவினருக்கு தண்டனை வழங்குவதாகும்.
சர்ச்சைக்குரிய விடயங்களாக மாறியுள்ள மோசடி விவகாரங்களுக்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளார்.
இதன்மூலம் மக்களின் மனங்களை வெற்றிக்கொண்டு ஜனநாயக ரீதியான ஜனாதிபதியாக அவர் முன்னோக்கி செல்ல முடியும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.