நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக கருதப்படும் போதே இங்குள்ள அனைத்து சொத்துகளையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதை பார்த்தே சிங்கப்பூரின் அன்றைய தலைவர் லீ கூவாங் யூ அந்த நாட்டில் அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக பிரகடனப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தொழில்நுட்ப தொழில் தகைமை சான்றிதழ் கற்கையை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், சமூக விஞ்ஞான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, குறித்த நிகழ்வின் போது மாணவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.