மறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமம் – வியாழேந்திரன்

308

2343434

ஒரு பிள்ளைக்கு சரியான கல்வியை வழங்காதது அந்தப் பிள்ளையை கொலை செய்வதற்கு சமமாகும். மறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமமாகும். உலகிலே மிகப்பெரிய ஆயுதம் கல்வியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கல்வியில் பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இலவச மேலதிக வகுப்புக்களை நடாத்தும் செயற்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் வழி நடத்தலின் கீழ் பாலர்சேனை பாடசாலையில் ஆரம்பமான போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

“நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. எந்த நிலையிலும் பிள்ளைகளின் கல்வியினை இடை நிறுத்தக் கூடாது. பிள்ளைகளை நாம் கற்பிக்க வேண்டும். மீண்டும் எமது தமிழ் சமூகம் முன்நிலையில் வர வேண்டும் என்பதே எமது நோக்கம். இதன் ஒரு முயற்சியே பாடசாலை முடிந்த பின்னர் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயல் திட்டம்.

இதற்கான நிதியுதவியினை புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற எமது தமிழ் உறவுகள் எமது தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்காக கரம் கொடுக்கின்றனர்.

ஆண்மையில் நான் கனடா சென்றிருந்த வேளையில் அங்குள்ள மனிதாபிமான அமைப்புக்களுடன் பேசிய போது நண்பர் செந்தில் குமரனின் “நிவாரணம்” சமூக அமைப்பின் ஊடாக இச் செயற்திட்டத்தினை இங்கு செயற்படுத்துவதற்கு முன் வந்தார்கள். செந்தில்குமரனின் சமூக அமைப்பு இச் செயற்திட்டத்திற்கான அனைத்து நிதியுதவியினையும் வழங்கி உள்ளது. இச்செயற் திட்டத்தில் 150 மாணவர்கள் பயனடைகிறார்கள். இச்செயற் திட்டத்திற்கு வருடத்திற்கு 8 இலட்சம் ரூபாய் செலவாகும்.

இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் செந்தில்குமரனுக்கும் அவரது சமூக அமைப்பிற்கும் எனது சார்பிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

SHARE