கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல்! பொதுமக்கள் ஆறு பேர் விளக்கமறியலில்…

216

download

மன்னார், முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை சிப்பாய்கள் இருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சந்தேக நபர்கள் என அதே கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை சிலாபத்துறை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீடு ஒன்றினுள் செல்ல முற்பட்ட சந்தேக நபரை துரத்திப்பிடித்த கிராம மக்கள் குறித்த சந்தேக நபர் தாக்கியுள்ளனர்.

குறித்த நபர் கடற்படை சிப்பாய் என தெரிய வந்துள்ள நிலையில் கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

முத்தரிப்புத்துறை கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட கடற்படை சிப்பாயினை காப்பாற்ற சிவில் உடையில் சென்ற மற்றுமொரு கடற்படை சிப்பாயும் மக்களினால் தாக்கப்பட்டார்.

தாக்குதல்களுக்கு உள்ளான இரு கடற்படை சிப்பாய்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் என முத்தரிப்புத்துறை கடற்படையினரினால் சிலாபத்துறை பொலிஸாருக்கு பெயர் விபரங்கள் வழங்கிய நிலையில் சிலாபத்துறை பொலிஸார் அக்கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை அழைத்து வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும்,அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் மன்னார் நீதிமன்றத்திற்கு சிலாபத்துறை பெரிஸாரினால் அழைத்து வரப்பட்ட போது அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மன்னார் நீதிமன்றத்தை சூழ்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE