முஸ்லிம் அநாதை நிலையத்திற்குச் சென்ற பிக்குகள்: பதற்ற நிலை-அப்பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

144

கம்பஹா மாவட்டத்தில் மல்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் அநாதைகள் நிலையத்திற்கு இன்று பிக்குகள் திடீரென சென்றதால் அங்கு பதற்றம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் குர்பான் இற்கு மாடு பலியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து, மல்வானை உலஹிடிவேல பிரதேசத்தில் அமைந்துள்ள மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு சென்ற பிக்குகள், அநாதை நிலையத்தை பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் அங்கு பதற்றநிலை நிலவி வருவதாகவும் அப்பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 20 பிக்குமார் இன்று மாலை மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்தில் சட்டத்திற்கு புறம்பாக மாடுகள் பலியிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அதன்காரணமாக அநாதை நிலையத்தை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அங்கு சென்ற பிக்குகள் அநாதை நிலைய நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறான சம்பவங்களும் நடைபெறவில்லை என அநாதை நிலைய நிர்வாகம் தெரிவித்த போதும், பிக்குமார் குறித்த இடத்தை விட்டு வெளியேறாததால் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வருகைதந்த பொலிஸ் அதிகாரிகள் அநாதை நிலையத்தை தாம் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும், சட்டத்துக்கு எதிரான வகையில் சம்பவங்கள் நடைபெற்றிருந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்த பின்னர் பிக்குமார் உட்பட பிரதேச வாசிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலைய வளாகத்தில் இருந்த சுமார் 70 ஆடுகளை பொலிஸார் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது குறித்த பிரதேசத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

SHARE