தாமதமாகும் ஐ வெளியீடு

93

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஐ. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். அதன் பின் போகப் போக அந்தப் பேச்சு மறைந்து கொண்டே வந்தது. தற்போது, படம் தீபாவளிக்கு வெளிவருவதற்கு வாய்ப்பேயில்லை, நவம்பர் மாதம் எப்படியும் வந்துவிடும் என்கிறார்கள். ஆனால், அதுவும் உறுதியான தகவலா என்றும் தெரியவில்லை. தற்போது படத்தின் தெலுங்கு, ஹிந்தி டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே, படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏன் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்திற்கும், வினியோகஸ்தர்களுக்கும் முந்தைய படங்களின் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்சனைகள் இருக்கிறதாம். அவற்றை ஐ படத்தில் தீர்த்துக் கொண்டால்தான் முடியும் என வினியோகஸ்தர்கள் எதிர்பார்க்கிறார்களாம். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே அவர்கள் தயாரிக்கும் படங்களை மிகவும் காலதாமதத்துடனேயே ரிலீஸ் செய்கிறார்கள். வல்லினம், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்கள் முடிந்த பிறகும் அவற்றை மிகவும் தாமதமாகவே ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் தயாரித்துள்ள மற்றொரு படமான ஜெயம் ரவி, த்ரிஷா நடித்துள்ள பூலோகம் படம் முடிந்து பல மாதங்களாகியும் எப்போது வெளிவரும் என்பதும் தெரியவில்லை. கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் 2 படத்தையும் அதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. தயாரிப்பாளருக்கும் கமல்ஹாசனுக்கும் பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வருகிறது.
இப்போது ஐ படம் எப்போது வரும் என்பது சரியாகத் தெரியவில்லை. ஹிந்தித் திரையுலகில் மிகப் பெரிய படங்கள் எப்போது வெளிவரும் என்பதை படம் ஆரம்பிக்கும் போதே சரியாக அறிவித்து விட்டு, அதை தவறாமல் பின்பற்றவும் செய்வார்கள். அந்த நிலை தமிழ்ப் படங்களுக்கு எப்போது வரும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாகவும் உள்ளது.

 

SHARE