அது அதுதான், ஆனா வேற! 

88
தங்க நகையில் போலி உண்டு. வாங்குகிற பொருட்களில் போலி உண்டு. சினிமாவில் போலி  உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? சினிமாவிலும் போலி உண்டு என்பதுதான் கசப்பான உண்மை. அதென்ன போலி என்று யோசிக்கலாம். போலி என்பது என்ன? ஒரு மூலப்பொருளைப் போல இன்னொரு பொருளை உருவாக்கி மூலப்பொருள் போல காட்டுவதுதான் போலி. அப்படி சினிமாவில் ஒரு விஷயம் உண்டு.

சில திரைப்படங்கள் புதிய படங்களின் வடிவில் வரும். ஆனால் அவை புதிய படங்களாக இருக்காது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தெலுங்கிலோ, கன்னடத்திலோ, மலையாளத்திலோ வந்த படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். அதில் வரும் செய்தித்தாள்கள், கடை போர்டுகள் போன்றவற்றை தமிழாக மாற்றுவார்கள். சும்மானாச்சும் சென்டிரல் ஸ்டேஷனையும், நேப்பியர் பாலத்தையும், மெரீனா பீச்சையும் இடையில் சொருகுவார்கள். பின்னர் அப்படியே தமிழில் டப் செய்து புதிய படம் போன்று தணிக்கைக் குழுவுக்கு அனுப்புவார்கள்.

தணிக்கைக் குழுவினர் தயாரிப்பாளரின் ‘அன்பு’க்கு கட்டுப்பட்டு படத்தைப் பார்த்து நேரடி படம் போன்று சான்றிதழ் தருவார்கள். அதை வைத்துக் கொண்டு புதுப்படம் போல  ரிலீஸ் பண்ணி காசு பார்த்துவிடுவார்கள். பின்னர் தயாரிப்பாளர் என்ற ஹோதாவில் கோடம்பாக்கத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்; சங்கத் தேர்தலில் நின்று பொறுப்புக்குக்கூட வந்து சினிமாவைக் காக்கப் போராடுவார்கள்.

போலி படங்களில் இன்னொரு வகை இருக்கிறது. அது ஒரு படத்தையே பல பெயர்களில் வெளியிடுவது. நம்ம ஊரு சிங்காரி, தக்காளி தங்கம்மா என்ற பெயரில் ஒரு கில்மா படத்தை எடுப்பார்கள். முதல் ரவுண்டாக பெரிய தியேட்டர்களில் வெளியிடுவார்கள். தங்கம்மாவும், சிங்காரியும் கொஞ்சம் அழகாகவும் நிறைய கவர்ச்சியும் காட்டியிருந்தால் காதும் காதும் வைத்த மாதிரி தியேட்டர் கல்லாவும், தயாரிப்பாளர் கல்லாவும் நிரம்பி விடும். இல்லாவிட்டால் பெட்டி அடுத்த பஸ் பிடித்து மீரான் சாகிப் ஸ்ட்ரீட்டுக்கு வந்து விடும்.

அதற்காக சிங்காரிக்கும், தங் கம்மாளுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடுமா? சில மாதங்களுக்குப் பின்பு நம்ம ஊரு சிங்காரி, வேலிதாண்டிய வேலம்மாள் என்றும், தக்காளி தங்கம்மா, தாலி தாண்டிய செல்லம்மாவாகவும் பெயர் மாறுவார்கள். மீண்டும் திரைக்கு வருவார்கள். இப்படியே நான்கைந்து முறை பெயர் மாறும் படங்களும் உண்டு. ஒவ்வொரு முறை பெயர் மாறும்போதும் கூடுதல் போனசாக கூடுதல் காட்சிகளும் சேர்க்கப்படும். ஆனால் ரசிகனுக்கு போலி, ஒரிஜினல் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. அவனுக்குத் தேவையானது இருந்தால் கவுன் டரில் டிக்கெட் எடுப்பான்

 

SHARE