தமிழர் போராட்டத்தை பலவீனப்படுத்தியது மஹிந்தவின் வன்னிப்படுகொலையா? பிரபாகரனின் சகோதரப்படுகொலையா?

159

 

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப்படுகொலையினை முள்ளிவாய்க்கால் வரை கட்டவீழ்த்துவிட்டதாக விடுதலைப்புலிகளின் ஊடகங்கள் மற்றும் பல இணையத்தளங்கள் சர்வதேச அளவில் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதங்களுக்கிடையில் இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அரச படையினரால் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு மறுப்பு தெரிவித்துவரும் அதேநேரம், வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாளர்களான பலரும் மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இதனைப்பார்க்கிறது. இலங்கை சிங்கள அரசுத் தலைமைகளும் மறுபக்கத்தில் அதையே கூறிவருகின்றனர்.
Untitled-1இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கடைசி இரு வாரங்களில் 7000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாடுகள் சபையின் கிளையமைப்புக்களால் கூறப்பட்டது. சுமார் 25000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் ஊடகங்களினால் கூறப்பட்டது. அப்போதும் கூறப்பட்டது இப்போதும் கூறப்பட்டுவருகின்றது. இவை எல்லாவற்றிற்கும் அப்பால் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளனர். கொல்லப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் குறித்து கவலைகாட்டுவதும் அதனை வைத்து அரசியல் செய்யும் ஆர்வமுமே இங்கு அதிகமாக இருப்பதனைக் காணலாம்.
அரசியல் நிலைமைகள் பற்றியே சிந்திக்காத ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இருபகுதியினருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு இறந்துபோனார்கள். நூற்றுக்கணக்கானோர் உடல் அங்கங்களை இழந்தும் இருக்கின்றனர். இவர்களுக்கு மறுவாழ்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். எஞ்சியவர்களுக்கும் நல்லதொரு கௌரவமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதனைக்காட்டிலும் இந்த மக்களின் அவலங்களில் அரசியல் காய்நகர்த்த பலர் முற்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தமிழ்தலைவர்கள் அரசியல் பிழைப்புக்காக ஈழத்தமிழ் பெண்களின் பால், களங்கம் கற்பிக்கிறார்கள். முகாம்களிலிருந்த தமிழ்ப்பெண்கள் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்றும் அவர்களின் கருக்களை அழிப்பதற்கு சிங்களப் படையினரால் தடைவிதிக்கப்படுவதாகவும் தமிழ்நாட்டில் ஒரு சிலரின் பிரச்சாரங்கள் இப்படி அமையப்பெற்றுள்ளன. இதேசமயம் இலங்கையில் இனக்கலப்பு செய்யப்படுவதன் ஊடாக தமிழ் இனம் அழிவதாக இந்திய எழுத்தாளர் சாரு நிவேதிதா சுட்டிக் காட்டுகிறார்.
எதையும் ஆராய்ந்து கருத்துக்களைக் கூறும் எழுத்தாளர்கள் கூட நம்புமளவிற்கு வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோரின் பிரச்சாரங்கள் தமிழகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. ஈழத்தமிழினம் ஒடுக்கப்படுகின்றது, கெடுக்கப்படுகின்றது என்பதைக் காட்டுவதற்கு இவ்வாறான ஈழத் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தியா பிரச்சாரம் செய்யவேண்டும்? புலிகளின் தலைவரும் அந்த அமைப்புகளுடன் ஏற்கனவே நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார். விடுதலைப்புலிகள் சகோதர இனப்படுகொலைகளை மேற்கொண்டு தமிழ்த் தரப்பினை பலவீனப்படுத்தி இருந்தார்கள். தற்பொழுது அவர்களின் பெயரை சொல்லியவாறு ஒரு கூட்டம் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தி வருகின்றது. எமக்கு ஆதரவாகத்தானே குரல் கொடுக்கின்றார்கள். ஆகையினால் எதையும் கூறட்டுமே, என்று ஈழத்தமிழ் அனுதாபிகள் நினைத்து கொள்ளக்கூடும். இவர்கள் இப்படியாக கோமாளித்தனமாக பேசுவதினால் தமிழகத்தில் இருந்து உண்மையாகக் கொடுக்கப்படும் குரல்களும் கோமாளிக் குரல்களாகத் தோன்றக்கூடிய நிலை ஏற்படும். என்பதினை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். மஹிந்த அரசு இனப்படுகொலைகளைச் செய்வதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தே சகோதரப்படுகொலைகளை புலிகளின் ஊக்குவிப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இனப்படுகொலையும் சகோதரப் படுகொலையும்
இலங்கையில் நடத்தப்படுவது இனப்படுகொலையா? அல்லது இனச்சுத்திகரிப்பா என்கின்ற ஆய்வினைச் செய்வது அல்ல இந்த கட்டுரையின் நோக்கம். பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட சகோதரப்படுகொலைகள் எவ்வண்ணம் சிங்கள இனவாதிகளுக்கு பெரிதும் உதவியது என்பதனைப் பார்க்கவேண்டும். பிறிதொரு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதின் மூலம் தமிழ்த்தேசிய போராட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்று பிரபாகரனும் அவருடன் சேர்ந்தவர்களும் எப்படி விளங்கிக்கொண்டார்களோ அவ்வாறே தமிழர்களை அடக்கி ஆளுவதன் மூலமும் அவர்களை எந்த பகுதியிலும் பெரும்பான்மையாக இல்லாதவர்களாக ஆக்குவதின் மூலமும் தமிழர்களின் அரசியல் அங்கீகாரம் என்ற கோசத்தினை ஒழித்துவிட முடியும் என்று பேரினவாத தலைவர்கள் நம்புகின்றார்கள். இந்தத் தலைமைகளை மகுடம் தரிக்க வைத்த பிரபாகரன் தனது இராட்சியத்தினை பறிகொடுத்ததோடு தனது வம்சத்தையே இழந்தார். இவர் மட்டும் சகோதரப் படுகொலைகளை மேற்கொள்ளாது அந்த அமைப்புக்களோடு உறவுகளை பேணி வந்திருந்தால் இவருக்கு இந்த முடிவு சிலவேளை ஏற்படாது இருந்திருக்கக் கூடும்.
யுhர் தூண்டுதலில் புலிகள் அமிர்தலிங்கத்தினைக் கொன்றார்கள். இந்திய புலனாய்வு துறையினரின் தூண்டுதலினால் முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தருமலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோரை ரெலோ அமைப்பினர் கொலை செய்ததாக தமிழ்வின் இணையத்தளத்தில் ஆய்வாளர் ஒருவர் அண்மையில் எழுதியிருந்தார். இதன் மூலம் புலிகளின் இயக்கம் எவரினதும் தூண்டுதலுக்கு துணை போகவில்லை என்பதினை அவர் கூறுவதற்கு முயற்சித்து இருந்தார்.
பிரபாகரன் தமிழ்த் தலைவர்கள்; பலரையும் சகோதர இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோரையும் கொலை செய்தமை அவருக்கு இருந்த தலைமை வெறியே காரணம் என்பதினைக் கூறுவதற்கு ஆராய்ச்சி தேவையில்லை. சமாதான காலகட்டத்திலும் கூட சகோதர இயக்க உறுப்பினர்கள் பலர் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
கொலைப்பிரிவில் பிரபாகரனுக்கு இருந்த ஈடுபாடு இக்கொலைகளை அவதானிக்கும் போது தெளிவாகத் தென்படுகிறது. தனது ஆளுமை குறித்த அவநம்பிக்கை எப்போதும் பிரபாகரனுக்கு அதிகமாகவே இருந்தது. மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் பொறுமையும் அவரிடம் இல்லாமையினால் சம்பந்தப்பட்ட அவர்களைக் கொலை செய்வதுதான் தன்னை தக்கவைத்துக்கொள்ளும் ஒரே வழி என்று அவர் நம்பியிருந்தார். இதன் மூலம் எதிரிகளற்ற சாம்ராஜ்ஜியத்தினை உருவாக்க அவர் முயற்சித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு செயலரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஆகியோரைக் கொலை செய்வதற்கு கரும்புலிகளை அனுப்பித் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு இறுதி நேரத்தில் அவர்களிடமே பிரபாகரன் சரணடைந்திருந்தார். அரச படைகளிடம் சரண் அடையுங்கள். நாங்கள் எல்லாம் பேசிவிட்டோம் என்று சமரசம் பேசிய ஐரோப்பிய அமைச்சர் ஒருவர் சுயாதீன அமைப்புக்கள் சிலவும் கூறியபோது அதனை நம்பி சரணடையும் அளவிற்கு பிரபாகரன் இருந்திருப்பாரா? என்று புலிகளின் கல்விமான்கள் சிந்திக்கின்றவேளை அவர்களையும் கொலை செய்வதற்கு பிரபாகரன் கரும்புலிகளை அனுப்பியுமிருந்தார். அவர்கள் என்னைச் சும்மா விடுவார்களா என்று பிரபாகரன் சிந்தித்தாரா? வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்களுக்கு இணங்கி செயற்படுபவராகவே அவர் எப்போதும் இருந்து வந்துள்ளார்.
ரெலோ இயக்கம் அன்னிய புலனாய்வு துறையினரின் தூண்டுதலில் வி.தருமலிங்கம் அவர்களையும் கொலை செய்தது என்றால் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் பத்மநாபா ஆகியோரை யாரின் தூண்டுதல் மூலம் பிரபாகரன் கொலைசெய்து இருந்தார் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
உங்களுடைய மக்களை சிங்கள அரசு கொல்கின்றது என்றால் அவர்களுடைய மக்களை கவனிக்கலாம் தானே என்று ஒரு புலனாய்வு துறை அமைத்து அமைப்புக்களுக்கும் கூறியபோது புலிகள் மட்டும் அதனை செவிமடுத்து கொக்கிளாய், நாயாறு, கிராமங்களுக்குள் புகுந்து சிங்கள அப்பாவி மக்களை கொன்றார்களே அன்றே தமிழ் ஈழ போராளிகள் அப்பாவி மக்களையும், குழந்தைகளையும் கொலை செய்யும் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தினால் முத்திரை குத்தப்பட்டார்கள். இதுவே சிங்கள அரசிற்கு கிடைத்த முதல் சர்வதேச ஆதரவாக இருந்தது.
சுpறிசபாரத்தினத்தையும், ரெலோ இயக்க உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோரையும் புலிகள் கொலை செய்துவிட்டு தங்களிடம் இருந்த வாகனங்கள், பொருட்கள் எல்லாவற்றையும் வீதியில் அடுக்கி வைத்து இவர்கள் மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்து வந்ததால் நாம் இதனை செய்தோம் என்று கூறியிருந்தார்கள். 1980ஆம் ஆண்டளவில் யாழ்.குரும்பசிட்டியில் வன்னியசிங்கம் என்பவரின் நகைக்கடைக்கு சென்ற பிரபாகரன் துப்பாக்கி முனையில் அங்கிருந்த நகைகளை கொள்ளை அடித்தார். அந்தக் காலத்தில் இயக்கங்கள் அரச வங்கிகளை மட்டுமே கொள்ளையடித்து வந்தன. தனியார்களின் சொத்துக்களைத் தொடுவதில்லை. ஆகையினால் கொள்ளை அடிக்க வந்தவர்கள் தனிநபர் கொள்ளையர்கள் என்று நினைத்த சுருட்டுத் தொழிலாளர்கள் பிரபாகரன் குழுவினரை சுற்றிவளைத்து இருந்தார்கள். அப்போது பிரபாகரன் தனது கையால் சுருட்டுத் தொழிலாளி ஒருவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு நகைகளுடன் தப்பி சென்றிருந்தார். இவரின் இயக்கம் ரெலோவைக் கள்ளர்கள் என்று குற்றஞ்சாட்டியது குயிலை பார்த்து காகம் கறுப்பு என்று கூறிய கதை போலவே இருக்கிறது.
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக புலிகள் இந்திய படையினருடன் மோதலில் இடம்பெற்றவேளை அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா புலிகளுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கியிருந்தார். மேலும் அண்ணன் தம்பிகளுக்கு இடையில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் தாம் அதனைப் பேசித் தீர்த்துக்கொள்வோம். ஆனால் அந்நியன் இடையில் தேவையில்லை என்றும் கூறியிருந்தார். அத்துடன் இந்தியப் படையினை வெளியேறுமாறும் கூறியிருந்தார். இதேவேளை வடகிழக்கு இணைந்த மாகாண ஆட்சியை நடத்துவதற்கு எதிராக புலிகளுடன் இணைந்து தடை ஏற்படுத்தி வந்தார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ்காந்தி ஏற்படுத்திய ஒப்பந்தத்திற்கு மாறாக பிரேமதாசா புலிகளுடன் இணைந்து செயற்பட்டமை இந்திய அரசிற்கு ஆத்திரமூட்டியிருந்த அந்த வேளையில் இந்திய அரசு அமிர்தலிங்கம் அவர்களை என்ன என்பதற்கான விடைகாணப்பட வேண்டும்.
புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்க வேண்டியவை
அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்டும் சமூக அடிப்படையில் குழப்பநிலையிலுள்ள எமது தாயகத்தை மீளக்கட்டியெழுப்பவேண்டிய தார்மீகக் கடமை புலம்பெயர் மக்களிடமே பெரியளவில் தங்கியுள்ளது. யூத இனத்தின் வரலாறு எமக்கு வழிகாட்டலையும், நம்பிக்கையையும் தந்திருக்கின்றது. ஆனால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக விடுதலையை நோக்கிய செயற்பாடுகள் வேகமிழந்துள்ளதுடன் சோர்வுத்தன்மைத் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவற்றிலிருந்து விடுபட்டு நாம் பலம் பொருந்திய இனமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று சரியாக செயற்படவேண்டும்.
அரசியல் ரீதியாக பலம் பெறுதல் : சர்வதேச நாடுகள் எங்கும் பரந்தும் தமிழினம் அந்தந்த நாட்டு அரசியலில் பங்கு பெறுவதன் மூலம் எமக்கான இடத்தையும், பங்கையும் ஓரளவிற்காவது பெற்றுக்கொள்ளலாம். கால அடிப்படையில் நிச்சயம் எமக்கான பலமாக அது அமையும்.
பொருளாதார ரீதியாக பலம் பெறுதல் : பல்வேறு மட்டத்திலான முதலீடுகளும் மூலதனத்திட்டங்களும் எங்களுக்கான பலத்தை அதிகரிக்கும். சிறிலங்கா அரசின் காணிப்பறிப்புக்களும் குடியேற்றங்களைத் தடுப்பதற்கும் எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் எமது பொருளாதார பலம் தான் அடிப்படை.
இலங்கையை பலவீனப்படுத்தல் : பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இலங்கையை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்கப்படவேண்டும். ஏனெனில் பிராந்தியப் போட்டிகளைச் சாதனமாக்கி தெளிவாக நகரும் சிங்களத்திற்கு தற்போது இருக்கும் ஒரே பிரச்சினை. புலம்பெயர் பிரதேசத்தில் எடுக்கப்படும் முன்னெடுப்புக்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம். அல்லது சீர்குழைக்கலாம் என்பதுதான்.
தாயகத்தை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் : தாயகத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைச் சீர்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடமே உள்ளது. அரசின் பொறிமுறைக்குள் சிக்காமல் குறிப்பாக அரசின் நிழல்களில் உலாவும் நிறுவனங்களின் பிடிக்குள் சிக்காமல் தனிநபராகவே அன்றி சிறு அமைப்புக்களாகவோ இணைந்து செயற்படவேண்டும். மேலான வாழ்வாதாரம் என்ற எல்லைக்கு அப்பால் தாயகத்தின் பொருண்மிய மேம்பாடு என்ற இலக்கில் செயற்பாடுகளை முன்நகர்த்த வேண்டும்.
தாயகத்தில் ஈழ விடுதலையின் கனதியையும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டையும் சிங்களத்தின் செயற்பாடுகளே கொதிநிலையில் எப்போதும் வைத்துக்கொண்டிருக்கும். அந்நேரத்தில் பேரவலத்தின் பின் அந்தச் சமூகத்தை அரசியல் பொருளாதார ரீதியாக தக்கவைக்கும் செயற்பாடுகளைச் செய்யவேண்டிய பெரும் பொறுப்பு தாயகத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்போரிடம் தங்கியுள்ளது. தாயகத்துச் சமூகம் பொருளாதாரத்தில் வலுப்பெற்று நிலைபெறவேண்டும். போரின் விளைவால் அனைத்தையும் இழந்து எதிலிகளாக நிற்கும் தமிழ் மக்களின் வாழ்வை வலுப்பெற வைப்பதே இருப்பிற்கான அடிப்படை. விடுதலைக்காகப் போராடும் நிலையை உருவாக்காமல் அரசிடம் கையேந்தாமல் பார்க்கவேண்டிய முக்கிய பொறுப்பு தாயகத்து அரசியல் தலைமைகளிற்கு உண்டு. கைகொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு புலம்பெயர் சமூகத்திற்கு உண்டு.
அதேவேளை முஸ்லீம் சமூகத்துடன் சரியான இணக்கப்பாட்டையும் வளர்க்கவேண்டும். சிங்கள பெருந்தேசிய வாதம் தமிழ் சமூகத்தை மட்டுமல்ல முஸ்லீம் சமூகத்தையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்கின்றது என்பது முஸ்லீம் சமூகத்திற்கு தெரியாமலில்லை. எனவே தமிழ்பேசும் மக்கள் தாயகத்தில் வலுப்பெறவேண்டும்.
யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர்முறை எனவே அரசியல் தலைமைகள் கனவான் போக்கை விடுத்து தமக்கான போரை சரிவர நடாத்திச் செல்லவேண்டும். செயற்பாடு இடைவெளிக் குறைவு என்பது புரிதலுக்குரியது. அதற்கான இடைவெளிகள் ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக முயற்சிக்கவேண்டும். இது இலகுவான பணியல்ல. இந்தக் கடுமையான பணியை நிறைவேற்றும் போதுதான் தமக்கான இருப்பு இலங்கைத்தீவில் தக்கவைக்கப்படும் என்பதைக் கருத்திற்கொள்ளும் போது கடினங்கள் பெரிதாக தெரியாது.
சுருக்கமாக முள்ளிவாய்க்கால் பின்னடைவிலிருந்து புதிய பரிமாணங்களில் கட்டியெழுப்ப வேண்டிய விடுதலைப்பயணத்தின் முக்கிய பணியாக புலம்பெயர் தேசத்தில் அங்கீகாரத்திற்கும் நிலைப்படுத்தலுக்குமான நடவடிக்கைகளும் அதேவேளை தாயகத்தில் எம்மை சகல வழிகளிலும் தக்கவைக்கும் நடவடிக்கைகளும் முஸ்லீம் சமூகத்துடனான இணக்கப்பாட்டை பேணும் நடவடிக்கைகளும் ஏககாலத்தில் முன்னெடுக்கப்படவேண்டும். இவற்றினூடாகவே இலங்கைத்தீவில் இருக்கும் தமிழ்பேசும் மக்களின் இருப்பு பூமிபந்தில் பேணப்படும்.
தற்போதைய நவீன உலக ஒழுங்கில் எமக்கான அரசியல் விடுதலைக்கான உத்தியை வகுத்து சர்வதேச ஜனநாயக மரபுகளைப் பேணி அனைத்துலக ஆதரவைப் பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளைச் செய்யும் அதேவேளை ஈழத்தமிழர்களிற்கான தனித்துவமான பலத்தையும் கட்டியெழுப்பவேண்டும். போரில் கொல்லப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களையும் நினைவில் நிறுத்தி எமக்கான விடுதலையை வென்றெடுக்கத் தொடர்ந்து நம்பிக்கையுடன் பாடுபடுவோம்.

நெற்றிப்பொறியன்

SHARE