பாலசந்திரன் என்ற சிறுவனை சுட்டுக் கொன்றவர்கள் சிறுவர் உரிமை பற்றி பேசுவதா? பா.அரியநேத்திரன் கேள்வி

174

இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயதான மகன் பாலச்சந்திரன் எனும் சிறுவனுக்கு, இடக்கையால் பிஸ்க்கட்டை காட்டி வலது கையால்

இராணுவத்தினர் சுட்டுக் கொன்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

 

நேற்று பாராளுமன்றத்தில் சிறுவர், பெண்கள் தொடர்பான பாராளுமன்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

20141012_124922

 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.

 

எமது பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் நினைவு நாள் நேற்று மூன்று வருடங்களில் மூன்று தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதனடிப்படையில் எமது கட்சி பாராளுமன்றஉறுப்பினர்களான யோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன்ஆகியோரே படுகொலை செய்யப்பட்வர்களாவர்.

 

2014.3.15ஆம் திகதி வன்னியிலே தங்களுடைய அண்ணாவை தாருங்கள் என்று கேட்டதற்காக, விபூசிக்காவையும்அவரது தாயாரையும் இராணுவத்தினர் கைது செய்து இன்று வரை விடுதலை செய்யாமல், தாயை பூசாமுகாமிலும், பிள்ளையை அனாதை இல்லத்திலும் வைத்திருக்கின்றார்கள். இதுதான் இவர்கள் கூறும் சிறுவர்உரிமை.

 

ஒரு தாயும் மகளும் இணைந்து வாழ்ந்த ஒரு குடும்பத்தில் தாயை வேறாகவும் குழந்தையை வேறாகவும் பிரித்துவைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்.

 

இந்த நிலமை இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாகவோ, பாராளுமன்றஉறுப்பினர்களாகவோ இருப்பவர்களுக்கு ஏற்பட்டால் அவர்களது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதனை ஒருகனம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

 

இங்கு உரையாற்றும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமைவழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எம்மைப்பொருத்த வரையில் வட, கிழக்கில் உள்ள பெண்களுக்குசிறைச்சாலைகளைத் தான் வழங்கியிருக்கின்றார்கள்.

 

போரினால் பாதிக்கப்பட்டு வட,கிழக்கு பகுதியில் 89000 ஆயிரம் விதவைகள் இன்றும் எந்த அடிப்படைவசதிகளும் இன்றி தங்களது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். எந்த சுயதொழிலும் செய்ய முடியாதஅளவிற்கு அவர்கள் மிகுந்த கஷ்ரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

 

அது மாத்திரமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக வட,கிழக்குப் பகுதியில் 40000 ஆயிரம் பேர்இருக்கின்றார்கள். அதில் கணிசமானோருக்கு குழந்தைகள் இருப்பதும் அவர்களை பராமரிப்பதற்குக்கூடஇவர்களால் முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 12770அங்கவீனர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

இவர்களை இந்த நாட்டு ஜனாதிபதி உட்பட ஏனைய அமைச்சர்கள் எவரும் இதுவரை கண்டு கொள்ளவும்இல்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தில் இவர்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.

 

இலங்கை அரசாங்கம் கூறும் சமாதானகாலப் பகுதியில் அதிகளவான சிறுவர் துஸ்பிரயோகங்கள்இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 546 சிறுவர்துஸ்பிரயோகங்கள் நடைபெற்றிருப்பதுடன் ஒழுக்க சீர்கேடுகளும் அதிகரித்தே காணப்பட்டிருக்கின்றது. ஆனால்யுத்தம் நடைபெற்றகாலத்தில் இவ்வாறான சிறுவர் துஸ்பிரயோகங்கள் குறைவாகவே இருந்தது.

 

1925ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஒரு நாட்டில் போர்இடம்பெறுமாக இருந்தால் போருக்கு பிற்பட்ட காலத்தில் போர்க்கைதிகளும் போர் செய்த பிரதேசங்களையும்மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என்று இத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

 

ஆனால் இலங்கை இத்தீர்மானத்தினை முழுமையாக உதாசீனம் செய்திருக்கின்றது. இவ்வாறான விடயங்களைதெளிவுபடுத்துவதற்காக தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றம் சென்று எமது மக்களின்பிரச்சனைகளை எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது எனவும் கூறினார்.

 

(தில்லை)

SHARE