மர்ம விலங்கு கடித்துக் கொன்ற 15 ஆட்டுக்குட்டிகள்

137

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மூங்கில் கூண்டில் அடைத்து வைத்திருந்த 15 ஆட்டுக்குட்டிகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை அடுத்த குண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லன் (வயது 41). கோவில் பூசாரியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இவர் தனக்கு சொந்தமான 150 ஆடுகளை ஊர் ஊராக சென்று மேய்த்து வருவது வழக்கம். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாய நிலங்கள், குளங்கள், குட்டைகள், ஏரிகள் போன்றவற்றில் அதிக அளவில் புற்கள் முளைத்துள்ளன.

வளர்ந்துள்ள புற்களை மேய்ப்பதற்காக கடந்த வாரம் பூசாரி மல்லன் வீட்டின் அருகே உள்ள ஆட்டுக் கொட்டாயில் கட்டியிருந்த ஆடுகளை அவிழ்த்துக் கொண்டு போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் பகுதிக்கு சென்றார்.

அங்குள்ள விவசாயி ராமலிங்கம் என்பவரின் தென்னந்தோப்பில் கொட்டாய் அமைத்து அதில் அவர் தங்கியிருந்து ஆடுகளை மேய்த்து வந்தார்.

150 ஆடுகளையும் தென்னந்தோப்பில் மூங்கில் பட்டி அமைத்து அதில் கட்டியிருந்தார். பிறந்து 1 மாதமான 15 ஆட்டுக்குட்டிகளை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ஒரு மூங்கில் கூண்டு அமைத்து அதில் அடைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியிலும், ஆட்டுக்குட்டிகளை மூங்கில் கூண்டுலிலும் அடைத்து விட்டு தூங்கச் சென்றார்.

நள்ளிரவில் மர்ம விலங்கு தென்னந்தோப்புக்குள் புகுந்தது. அந்த விலங்கு ஒரு மாதமான ஆட்டுக்குட்டிகளை அடைத்து வைத்திருந்த மூங்கில் கூண்டின் அருகில் சென்றது. மூங்கில் கூண்டை பிரித்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த 15 ஆட்டுக் குட்டிகளையும் கடித்து குதறியது.

முதலில் ஆட்டுக்குட்டியின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்ததால் அவற்றால் சத்தம் போட முடியவில்லை. மேலும் உடல் பகுதியிலும் கடித்து குதறியது. இதில் 15 ஆடுகளும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தன.

இன்று காலையில் மல்லன் எழுந்து சென்று மூங்கில் கூண்டில் பார்த்தார். கூண்டில் அடைத்து வைத்திருந்த 15 ஆட்டுக்குட்டிகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் பாரூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷிடம் புகார் கொடுத்தார். உடனே வி.ஏ.ஓ. ரமேஷ் மற்றும் பாரூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம விலங்கு கடித்து கொன்ற 15 ஆட்டுக்குட்டிகளையும் பார்வையிட்டனர்.

ஆடுகளை இழந்த பூசாரி மல்லன் கவலையுடன் இருந்தார். இதுபற்றி பாரூர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

ஆட்டுக்குட்டிகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு முரட்டுதனமான பெரிய விலங்காகத்தான் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனவே அவற்றை பிடிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது.

SHARE