சரிதா தேவிக்கு ஆயுட்கால தடைவிதிக்க வாய்ப்பு

93
அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதக்கத்தை கழுத்தில் அணிவிக்க மறுப்பு தெரிவித்தார்.அத்துடன் தன்னை வீழ்த்திய தென் கொரிய வீராங்கனையின் கழுத்தில் பதக்கத்தை அணிவித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பிறகு சரிதாதேவி மற்றும் 3 பயிற்சியாளர்கள், இந்திய அணியின் தலைமை அதிகாரி சுமரிவாலா ஆகியோருக்கு,  சர்வதேச குத்துச்சண்டை சங்க ஒழுங்கு நடவடிக்கை குழு தற்காலிக தடை விதித்தது.

இந்த நிலையில் நடந்த சம்பவத்துக்கு சரிதாதேவி மீண்டும் வருத்தம் தெரிவித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், ‘எனது குத்துச்சண்டை வாழ்க்கையில் நான் ஒருபோதும் தவறாக நடந்து கொண்டதில்லை. எனது மன்னிப்பை ஏற்று என் மீதான தடையை நீக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் சரிதா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் குழு தனது முடிவை விரைவில் அறிவிக்க உள்ளதாக சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைவர் சி.கே.வூ, தெரிவித்துள்ளார்.

சரிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் சரிதாவின் செயலை பூஜ்யம் அளவுக்கு கூட ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.

அநேகமாக சரிதா தேவிக்கு ஆயுட்கால தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

SHARE