காங்கோ எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் பலி..!!

காங்கோ ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். காங்கோ அதிக அளவிலான கச்சா கனிம வளங்கள் கொண்ட நாடாகும்.

காங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு நேற்று ஒரு சரக்கு ரெயில் 13 பெட்டிகளில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. இந்த சரக்கு ரெயிலில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர். அந்த ரெயில் லுபுடி என்னுமிடத்தில் சரிவில் ஏறியபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டது.

தடம்புரண்ட அந்த ரெயில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து, தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த ரெயிலில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அங்கு செயல்பட்டுவரும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அது சரக்கு ரெயில் என்பதால் அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவர் என மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஒரு சரக்கு ரெயில் தடம்புரண்ட விபத்தில் 74 பேர் உயிரிழந்ததோடு 174 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News