உக்ரைனுக்குள் ரஷ்ய துருப்புகள்

111
உக்ரைனின் கிளர்ச்சியாளர் பகுதிக்கு ரஷ்யா புதிதாக துருப்புகள், பீரங்கிகள் மற்றும் இராணுவ தளபாடங்களை அனுப்பியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை நேட்டோ முன் வைத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியுள்ளது.

உக்ரைனில் கடந்த இரு மாதங்களாக ஒரு பல வீனமான யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் நடவடிக்கை மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்று நேட்டோ குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கை பிரச்சினைக்கே வழிவகுக்கும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமன்தா பொவர் பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

“நாம் கூறுவது தெரிந்ததே என்றாலும் அதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. நிலைமை சுமுகமாக இருந்த போதும், பிரச்சினைக்கான வழி அப்படியே இருக்கிறது. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் உக்ரைனின் இறைமையை ரஷ்யா மீறுகிறது” என்று அவர் குற்றம்சாட்டினார்.

உக்ரைன் விவகாரத்தை ஐ.நா. பிரதிநிதிகள் கத்திமுனை பிரச்சினை என்று வர்ணித்துள்ளனர்.

ஐரோப்பாவுக்கான நேட்டோ தளபதி ஜெனரல் பிலிப் பிரீட்லொக் வெளியிட்ட அறிவிப்பை அடுத்தே பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடியது. அதில் ரஷ்ய இராணுவ உபகரணங்கள் உக்ரைனுக்குள் நுழைந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

“கடந்த இரண்டு தினங்களாக ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு ஒரே செய்தியைத்தான் வெளியிட்டு வருகிறது. பாரிய அளவில் ரஷ்ய உபகரணங்கள், பீரங்கிகள், வான் பாதுகாப்பு கட்டமைப்புகள், ரஷ்ய துருப்புகள் உக்ரைனுக்குள் நுழைவதை நாம் பார்த்து வருகிறோம்” என்று ஜெனரல் பிரீட்லொக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த தகவல் ஆதாரமற்றது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

கிழக்கு உக்ரைன் யுத்தத்தில் பங்களிப்புச் செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை கடந்த ஏப்ரல் தொடக்கம் ரஷ்யா மறுத்து வருகிறது.

எனினும் ரஷ்யா மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா மற்றொரு யுத்தத்திற்கு தயாராகி வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்ய எல்லையில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் இரு பிராந்தியங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து உக்ரைன் கடந்த ஏப்ரலில் அங்கு இராணுவத்தை அனுப்பியது.

இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 4,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மாதத்திற்கு முன்னர் இரு தரப்புக்கும் இடையில் பலவீனமான யுத்த நிறுத்தம் ஒன்று கடைப் பிடிக்கப்பட்டு வருகின்ற போதும், குறித்த காலத்திலும் மோதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

SHARE