மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டக் கூட்டத்தில் தமிழர்களுக்குக் கதவடைப்பா?

 

மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின்

அம்பாறை மாவட்டக் கூட்டத்தில் தமிழர்களுக்குக் கதவடைப்பா?

மாகாண சபைத் தேர்தலுக்கான தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவால் அம்பாறை நிர்வாக மாவட்டத்துக்கான எல்லை நிர்ணயம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தறியும் கூட்டத்துக்கு தமிழர்கள் பங்கேற்க முடியாத வகையில் சதி திட்டம் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக வலுவாக சந்தேகிக்கப்படுகின்றது.

இக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நவம்பர் 11 ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இடம்பெற உள்ளதாக மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் எழுத்துமூல அறிவித்தல் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த அறிவித்தல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. இதன்படி பிரதேச செயலகங்களின் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலகத்திலும் இவ்வறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த நிலையிலும், இதில் பங்கேற்பது நல்லது என்று காரைதீவு பிரதேச செயலாளரால் அறிவுறுத்தப்பட்ட நிலைமையிலும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா தலைமையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க தலைவர் எஸ். லோகநாதன், தமிழர் மகா சபை காரைதீவு கிளையின் முன்னாள் தலைவர் எஸ். தில்லையம்பலம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபைக்கான முன்னாள் வேட்பாளர் ஆ. பூபாலரத்தினம், காரைதீவு ஆலயங்களின் அறங்காவல் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் எஸ். விஜயரத்தினம் போன்றவர்களை கொண்ட தமிழ் உணர்வாளர்கள் குழு தனியான வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு மாலை 7.30 மணி அளவில் சென்றிருந்தது.

ஆயினும் அங்கு கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் எவையும் இவர்களின் கண்களில் படவில்லை. கூட்டத்துக்கு ஆட்கள் வருவதாகவும் தெரியவில்லை. இந்நிலையில் செயலக முன்றலில் காவல் கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிஸாரை விசாரித்தபோது அப்படி ஒரு கூட்டம் கிடையாது என்று தெரிவித்தார்கள். காலையில்தான் கூட்டம் ஒன்று நடந்தது என்றும் கூறினார்கள்.

இந்நிலையில் காரைதீவு பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம உத்தியோகத்தர் எஸ். புவனேசராசாவை தொடர்பு கொண்டு கேட்டபோது கூட்டம் இரவு 8.30 மணி முதல் 12. 00 மணி வரைதான் இடம்பெறுவதாக அறிவித்தல் வந்து உள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவோ, ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவோ மறுஅறிவித்தல் வந்திருக்கவில்லை என்றும் கூறினார். பல மணி நேரங்கள் செயலக வாசலில் காத்திருந்து விட்டு செல்லையா இராசையா குழுவினர் திரும்பி வந்து விட்டனர்.

ஆனால் இக்கூட்டம் அதே நாளில் காலை 8.00 மணி முதல் இடம்பெற்று உள்ளதுடன் இதில் கணிசமான அளவில் சகோதர இனங்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றும் உள்ளனர். நாம் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் சட்டத்தரணி எம். எம். பஹீஜை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இக்கூட்டத்தில் பங்கேற்றதை உறுதிப்படுத்தினார். இக்கூட்டம் காலை 8.30 மணி முதல்தான் இடம்பெறுகின்றது என்கிற மிக துல்லியமான தகவல் இவரை போன்றவர்களுக்கு எவ்விதம் தெரிய வந்திருந்தது? என்பது மர்மமாகவே உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் கருத்துக்களை செவிமடுக்காமல் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள உயர் மட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஐயுறவு கொள்வதாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா நேற்று திங்கட்கிழமை அவருடைய காரைதீவு இல்லத்தில் விசேட ஊடகவியலாளர் மாநாடு வைத்து அறிவித்ததுடன் உடனடியாக இன்னொரு கூட்டத்தை நடத்தி தமிழர்களின் கருத்துக்களை செவிமடுக்க உரிய நடவடிக்கைகளை ஆணைக் குழு எடுக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு அவ்வாறு செய்ய தவறுகின்ற பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

மேற்படி கூட்டம் தொடர்பாக தமிழர்களுக்கு பிழையான நேர அட்டவணை வழங்கப்பட்டதற்கு பின்னால் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கரங்கள் இருக்க வேண்டும் என்று நம்புவதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்து உள்ளார்.

About Thinappuyal News