மாமல்லபுரம் சிற்பங்களுக்கு தேசிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது..!

தமிழகத்தை சேர்ந்த மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய அரசின் தேசிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

1999-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் புவிசார் குறியீட்டு சட்டம் இயற்றப்பட்டது. உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா அதில் உள்ள ஒப்பந்தப்படி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் வர்த்தகம் தொடர்பான தாவாக்களைத் தவிர்க்கவும், காப்புரிமை சட்டத்தையும், புவிசார் குறியீட்டையும் அளிக்கிறது.

காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன்ஸ், சேலம் மாம்பழம் உள்ளிட்ட 193 பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இதனால், வேறு பகுதியில் மேற்கண்ட உணவுப் பொருட்களை அதே பெயரில் பிரபலப்படுத்த முடியாது.

குறிப்பிட்ட பொருளுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கும் போது அப்பொருள் அந்த இடத்தில் உருவானதற்கான வரலாற்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களின் நம்பகத்தன்மைக்கேற்ப புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு தேசிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மாமல்லபுரத்தில் உள்ள கற்பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்கு தேசிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு 2013-ல் விண்ணப்பம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News