இரு அமைச்சுகளுக்கு எதிராக முறைப்பாடு..!!

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் ​அமைச்சுகள் இரண்டின் அதிகாரிகள் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளனரென, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

உயர் கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு எதிராகவே, மாலபே மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கம், ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றைச் செய்து, கடிதமொன்றையும் கையளித்துள்ளது.

“இவர்கள் மேற்கொண்ட ஊழல் காரணமாக 80 ஆயிரம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் எனவும், 800 பேர் கல்வி வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெறாதும் உள்ளனர்” எனவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அக்கடிதத்தின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

“சைட்டம் கல்வி நிறுவனத்தை நீக்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ள போதிலும், அதில் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக் குறித்து, இதுவரை எந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவிலை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சைட்டம் கல்வி நிலையத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்கள், மீண்டும் அதில் இணைத்துக்கொள்ளப்பட்டமையானது, உயர் கல்வியமைச்சால் வழங்கப்பட்ட பாதுகாப்பு உறுதிமொழிக்கமைவானது” என அவர் குறிப்பிட்டார்.

“சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில், உயர் கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு ஊழியர்கள் மேற்கொண்ட மோசடிகளைச் சாட்சியங்களுடன் நிரூபிக்க முடியும்” எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

About Thinappuyal News