இலங்கை தோல்வி: முடிவுக்கு தான் பொறுப்பேற்பதாக கூறுகிறார் ஜெயசூர்ய

98

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியதையடுத்து, இந்த முடிவுக்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழுவின் தலைவரும் விளையாட்டுத்துறை துணை அமைச்சருமான ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

சனத் ஜெயசூர்ய
சனத் ஜெயசூர்ய

“அமைச்சர் எங்களை நியமித்திருப்பது சுயாதீனமாக முடிவுகளை எடுப்பதற்காகத்தான். இந்த மாதிரியான போட்டிகளில் கலந்துகொள்ளும்போது வெற்றியும் வரலாம் தோல்வியும் வரலாம். தேர்வுக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவுடனான தொடர் சம்பந்தமாக விளையாட்டுத்துறை அமைச்சர் மீது யாரும் குறை கூறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த முடிவை தேர்வுக்குழுவும், அணித்தலைவரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக அமைப்பும் சேர்ந்துதான் எடுத்தோம்.”

நாடாளுமன்றத்தில், இலங்கை விளையாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமான விவாதத்தின்போது ஜெயசூர்ய இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவில் இலங்கை அணி மோசமாக தோற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் அதுபற்றிப் பேசுவதென்பது இதுவே முதல்முறை.

உலகக் கோப்பை போட்டிகளுக்காக ஆயத்தமாகிவந்த இலங்கை அணியை, அவசரமாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த இந்தியத் தொடருக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பு எடுத்திருந்த முடிவை ஆரம்பம் முதற்கொண்டே இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE