தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை

உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாத நிலைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஸ்ரீகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், தமிழரசுக் கட்சி விடாப்பிடியான, விட்டுக் கொடுப்பற்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், இதனால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு நாம் (ரெலோ) தள்ளப்பட்டுள்ளோம்.

அதேவேளை, இன்று (06.12/2017) மாலை யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோதராதலிங்கம் கருத்து வெளியிடுகையில், தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இடப்பங்கீடுகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ரெலோ தனது அதிருப்தி நிலையை வெளிப்படுத்தியது.

தமிழரசுக் கட்சியின் விடாப்பிட்டியான செயற்பாடு அதனுடன் இணைந்து நாம் செயற்பட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. அதனால் எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் நாம் தொடர்ந்து இது தொடர்பில் பேசவுள்ளோம். அதன் பின்னரே எவ்வாறு போட்டியிடுவது என்ற முடிவு எட்டப்படும். இன்றைய தினம் தமிழரசுக் கட்சிக்கு எமது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணிதொடக்கம் அதிகாலை 1.30 வரை நிகழ்ந்த தலைமைக் குழுக் கூட்டத்தின் பின் மேற்குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.