ஆளணி தெரிவு தொடர்பில் ரெலோ, புளொட் அமைப்புக்கள் அதிருப்தி.!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் ஆளணி தெரிவுகள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை (05) இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில், வட, கிழக்கு மாகாண ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஆளணிகள் அமைப்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அத்துடன், ஆளணிகள் தொடர்பில் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழரசு கட்சியின் தலைவரினால் திருப்தியாக பதில்கள் அளிக்கப்படாத காரணத்தினால், தாம் அதிருப்பதியுடன் செல்வதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நா.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

அத்துடன், கலந்துரையாடலின் இறுதியில் தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் வித்தியாசமான கள நிலமைகளை உருவாக்கியுள்ளது. இந்த அடிப்படையில், ஒவ்வொரு வட்டாரத்தின் இயல்புகளை கருத்திற் கொண்டு வேட்பாளர்களை தெரிவு செய்வது என்பது தொடர்பாக பரிசீலணை செய்யப்பட்டது.

அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடி அந்தந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ளவர்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றவகையில் களம் அமைக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றித்து பிரச்சாரங்களை செய்து தேர்தலை வெற்றி கொள்வது எவ்வாறு என்று ஆராயப்பட்டது.

அத்துடன், புதன்கிழமை (06) வியாழக்கிழமையும் (07) தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்கப்பாட்டின் இறுதி முடிவினை பொது மக்களுக்கு அறிவிப்போம் என்றார்.

இருந்தும், ஆளணி தெரிவுகள் தொடர்பில் தமிழரசு தான் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக உள்ளது. தமிழரசு கட்சியினரே மாற வேண்டுமென ரெலோவின் செயலாளர் நா.ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.

About Thinappuyal News