அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் அலைந்து திரியும் நிலைக்கு வந்திருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

 

suresh 1தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தனது சொந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிட முடியாமல் உதயசூரியனா சைக்கிளா என அபயம் தேடி அலைந்து திரியும் அவல நிலைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளாகியிருக்கிறார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற முகத்துடன் மக்களிடம் செல்லும் துணிவு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்கு கிடையாது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்கு மட்டுமல்ல புளொட், ரெலோ போன்ற தமிழ் இயக்கங்களுக்கும் அதேநிலை தான். அவர்களால் தங்களின் சொந்த கட்சியில் போட்டியிடும் திராணி கிடையாது. தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடாத மக்களை படுகொலை செய்யாத கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டால் தான் ஏதோ பிழைத்துக் கொள்ள முடியும் என்ற பரிதாப நிலையில் தான் ஈ.பி, ரெலோ, புளொட் போன்ற இயக்கங்கள் இன்று உள்ளன.

பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆயுதப்போராட்ட இயக்கமாக இந்திய இராணுவத்துடன் சேர்ந்து அட்டகாசம் பண்ணி படுகொலைகளை புரிந்த இயக்கமாக தமிழ் மக்களிடம் அறிமுகமான அளவிற்கு அரசியல் கட்சியாக அறிமுகமாகவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து ஆயுதக்குழுக்களாக இயங்கிய தமிழ் இயக்கங்கள் தம்மை அரசியல் கட்சிகளாக பதிவு செய்து கொண்டன. அந்த வகையில் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் பூ ஆகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ் அரசியல் கட்சியாக பதிவு செய்து 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது.

வடமாகாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. தாக்கல் செய்யவில்லை என்று சொல்வதை விட வடகிழக்கில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை தவிர வேறு எந்த ஒரு தரப்பையும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை.
விடுதலைப்புலிகள் வடமாகாணசபையை நிராகரித்திருந்த நிலையில் அப்போது தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் அத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக்கொண்டது.

வடமாகாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை தவிர வேறு யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விடக் கூடாது என்பதில் இந்திய இராணுவம் கண்ணும் கருத்துமாக இருந்தது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல் இறுதி தினம் வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களுக்கு இந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கினர். மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈ.பி.ஆர்.எல்.எவ் தவிர வேறு யாரும் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்த முடியாத படி இந்திய இராணுவத்தினர் செயல்பட்டனர். மாவட்ட செயலகங்களுக்கு செல்பவர்களை சோதனை இட்டு 50ரூபாவுக்கு மேல் வைத்திருப்பவர்களை மாவட்ட செயலகத்திற்கு செல்லவிடாது திரும்பி அனுப்பி வைத்தினர்.

இதனால் வடமாகாணத்தில் வடகிழக்கு மாகாணசபைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டது. இப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவராக இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மாகாணசபை உறுப்பினராகவே அரசியலுக்குள் நுழைந்தார்.

கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தனது பூச்சின்னத்தில் போட்டியிட்டது. கிழக்கை பொறுத்தவரை தமிழ் கட்சிகள் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி மட்டும் தான் போட்டியிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ஐக்கிய தேசியக்கட்சி, ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன. சிறிலங்கா சுதந்திரக்கட்சி 1988ல் நடந்த மாகாணசபை தேர்தலை புறக்கணித்திருந்தது.

கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கும் இடையில் தான் போட்டி நிலவியது.

வடகிழக்கு மாகாணசபைக்கு நடந்த முதலாவது தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி ஆட்சி அமைத்து கொண்டது. ஒரு வருடகாலம் மட்டும் நீடித்த மாகாணசபை ஆட்சியின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி இந்தியாவின் உதவியுடன் தன்னை பலப்படுத்தி கொண்டது.

அதன் பின்னர் 1989ல் நடந்த பொதுத்தேர்தலின் போது இந்தியாவின் ஏற்பாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டணி போட்டியிட்டது. அது பலமான கூட்டணியாக இருக்கவில்லை. இந்தியாவின் வற்புறுத்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் இயக்கங்களுடன் போட்டியிட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்த நான்கு கட்சிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையிலான கட்சிகளுக்கு 9 ஆசனங்கள் கிடைத்தன. திருகோணமலையில் அக்கூட்டணிக்கு ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த 9ஆசனங்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளே பெற்றுக்கொண்டன. தேசியப்பட்டியல் மூலம் கிடைத்த ஒரு ஆசனத்தை மட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றுக்கொண்டது.

இந்திய அரசாங்கத்தின் ஏற்பட்டில் உருவாக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் கூட்டு 1989ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த உடனேயே முறிந்து விட்டது. சூடு கண்ட பூனையாக தமிழர் விடுதலைக் கூட்டணி அடுத்து வந்த தேர்தல்களில் தமிழ் இயக்கங்களுடன் கூட்டுச் சேர்வதை தவிர்த்து வந்தது.

1994ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் முதல்தடவையாக தனது கட்சி சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. அத்தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழ்.மாவட்டத்தில் 263 வாக்குகளையும், வன்னி மாவட்டத்தில் 3465 வாக்குகளையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4802 வாக்குகளையும், திருகோணமலை மாவட்டத்தில் 881 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது. அம்பாறை மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் போட்டியிடவில்லை. 1994ஆம் ஆண்டு தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தனது கட்சி சின்னத்தில் போட்டியிட்ட பொதுத்தேர்தல் அது மட்டும் தான். அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் தனது கட்சி சின்னத்தில் போட்டியிடவே இல்லை.

2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்ற போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுரேஷ் அணி, வரதர் அணி என இரண்டாக பிளவுபட்டிருந்தது. அக்கட்சி யாருக்கு சொந்தம் என நீதிமன்றில் வழக்கு நடைபெற்றதால் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியால் அக்கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாமல் போய்விட்டது. சில மாவட்டங்களில் ரெலோ மற்றும் புளொட் இயக்கங்களின் சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் ஒரு ஆசனத்தை கூட ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் பெற முடியவில்லை.

அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக கொழும்பில் நான்கு கட்சிகள் கைச்சாத்திட்ட போது ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி ஒரு கட்சியாக கையொப்பம் இட்டு இணைந்து கொண்டது.

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி நான்கு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு 1989ஆம் ஆண்டு இந்தியா உருவாக்கிய கூட்டு போல இருக்கவில்லை. இந்தியாவால் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் உருவாக்கப்பட்ட கூட்டு தேர்தல் முடிந்த மறு கணமே உடைந்து விட்டது.

ஆனால் 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நான்கு கட்சிகளின் கூட்டில் இடையில் சில கட்சிகள் பிரிந்து சென்றாலும் தமிழ் மக்கள் மத்தியில் பலமான ஒரு கட்சியாக திகழ்ந்து வந்தது.
2001, 2004, 2010, 2015 என கடந்த நான்கு பொதுத்தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே வடகிழக்கில் பலமான கட்சியாக மேலோங்கியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது நான்கு கட்சிகளில் ஒன்றாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி இப்போது அக்கூட்டில் இருந்து வெளியேறியிருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறுவதாக செய்திகள் வெளிவந்ததும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி மெகா கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். கொழும்பில் இதற்கான பேச்சுக்களும் இடம்பெற்றன.

ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மெகா கூட்டணியை அமைத்தால் தமக்கு அரசியல் எதிர்காலம் ஏற்படும் என ஆனந்தசங்கரி நம்பினார். ஆனால் கஜேந்திரகுமார் ஆனந்தசங்கரியுடன் இணைய முடியாது என மறுத்து விட்டார்.

கொள்கையளவில் ஆனந்தசங்கரியும் கஜேந்திரகுமாரும் எதிர்மாறானவர்கள். அவ்வாறு ஒரு அதிசயம் நடந்து ஆனந்தசங்கரியின் மெகா கூட்டணியில் இணைந்தாலும் தேர்தல் முடிந்த கையோடு அக்கூட்டணி உடைந்து விடும். இதனால் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆனந்தசங்கரியின் அழைப்புக்கு இணங்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது தலைமை தாங்கும் தமிழரசுக்கட்சியோடு இருக்கும் முரண்பாடு காரணமாகவே தாம் அதிலிருந்து வெளியேறுவதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நடந்த சமரச கூட்டமும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இனிமேல் இணைந்து செயல்படுவதாக இருந்தால் தமிழரசுகட்சியின் சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட கூடாது, பொதுச்சின்னம் ஒன்றிலேயே போட்டியிட வேண்டும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதவி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை சுரேஷ் பிரேமச்சந்திரன் விதித்திருந்தார்.
இந்த நிபந்தனைகளை தமிழரசுக்கட்சி மட்டுமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளான ரெலோ, மற்றும் புளொட் ஆகியனவும் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அக்கட்சிகள் தமிழரசுகட்சியின் வீட்டு சின்னத்திலேயே தேர்தலை சந்திக்க விரும்புகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியால் தனித்தும் போட்டியிட முடியாது. அக்கட்சியும் சின்னமும் மக்கள் மத்தியில் அறிமுகமில்லாத அல்லது பிரசித்தி இல்லாத நிலையிலேயே காணப்படுகிறது.

1988ஆம் ஆண்டு நடந்த மாகாணசபை தேர்தலில் வடகிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எவ் முதற்தடவையாக அறிமுகமானாலும் வடமாகாணத்தில் தேர்தல் நடைபெறாததால் அக்கட்சியின் சின்னம் பற்றி வடமாகாண மக்கள் அறிந்திருக்கவில்லை. அதை அடுத்து 1989ல் நடந்த பொதுத்தேர்தலிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் போட்டியிடவில்லை, 1994ஆம் ஆண்டிலேயே முதல் தடவையாக பொதுத்தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தனது சொந்த சின்னத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிட்டது.

அதன் பின்னர் இன்றுவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் தனது சின்னத்தில் தனித்து போட்டியிட்டது கிடையாது. எதிர்காலத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டுமல்ல ரெலோ, புளொட் போன்ற ஏனைய தமிழ் இயக்கங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள் என எதிர்பாரக்க முடியாது.

ஏதோ ஒரு கூட்டில் இணைந்து போட்டியிடுவதன் மூலமே வெற்றி பெற முடியும் என  இந்த முன்னாள் தமிழ் இயக்கங்கள் நம்புகின்றன. கடந்த காலத்தில் தமிழ் இயக்கங்கள் செய்த அராஜகங்கள் படுகொலைகளை மறக்க இன்னும் பல தசாப்தங்கள் செல்லலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்து போட்டியிடப்போவதாகவும், கடந்த இரு வருடங்களுக்கு முதல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை தமது புதிய கூட்டணிக்கு ஆதரவை வழங்கும் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்னர் அறிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை. ஏனெனில் சைக்கிள் சின்னம் 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரு பொதுத்தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் சிறிய அளவு ஆதரவு இருந்தாலும் வன்னியிலோ அல்லது கிழக்கிலோ அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு அறவே ஆதரவு கிடையாது.

தோல்வியடைந்த ஒரு கட்சியின் சின்னத்தில் எப்படி போட்டியிடுவது என்ற மிகப்பெரிய தயக்கம் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு.

இதனால் தான் கஜேந்திரகுமாரையும் அழைத்துக் கொண்டு ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் முயற்சிகளை எடுத்தார். ஆனால் சங்கரியுடன் இணைய முடியாது என கஜேந்திரகுமார் கூறிவிட்டதால் ஆனந்தசங்கரியே தஞ்சம் என்ற நிலைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் வந்திருக்கிறது.

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மாவட்ட தலைவராக இருக்கும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராசையா துரைரத்தினமும் நாயிலிருந்து உண்ணி கழன்றது போல சுரேஷ் அணியிலிருந்து விலகி விட்டதாகவும் ஒரு தகவல்.

அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் அலைந்து திரியும் நிலைக்கு வந்திருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

About Thinappuyal News