நில அளவையாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.!

அரச நில அளவையாளர்கள் சங்கம் (6) நள்ளிரவு முதல் இரண்டு நாள் உத்தியோகபூர்வ வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

நில அளவை செயற்பாடுகளில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை ஆட்சேபித்தே இப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக அச்சங்கத்தின் ஏற்பாட்டாளர் உடுகொட தெரிவித்தார்.

“நில அளவை செயற்பாடுகளில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்ய இலங்கை ரூபாவில் 3000 மில்லியனே போதும். ஆனால், இதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை மதிப்பில் 23,500 மில்லியன் ரூபாவை கடனாகப் பெற இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

“இக்கடன் தொகைக்கு 4 சதவீத வட்டியும் அறவிடப்படவுள்ளது. இவ்விரு அரசாங்கங்களும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமானது 5 வருடத்திற்கானது. ஆனால் வட்டியுடன் கடன் தொகையை மீள செலுத்துவதற்கு 15 வருடங்கள் செல்லும். எனவே இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

“நவீன தொழிநுட்பத்தின் மூலம் மனிதர்களின் கண்களை ஸ்கேன் செய்வதற்கான முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது நில அளவையாளர்களை மாத்திரமின்றி எந்தவொரு மனிதனையும் பாதிப்படையச் செய்யும். அதேவேளை இதன் மூலம் தேசிய ரீதியில் எமது தகவல்கள் வெளியாவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

“எம்மிடம் இது தொடர்பான எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் அரசாங்கம் நடத்தவில்லை. இது தொடர்பான எமது அதிருப்தியினை அரசாங்கத்திடம் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் எவ்விதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அரசாங்கம் இதனை நிறுத்தவில்லையெனில் திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாகப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Thinappuyal News