மாடுகளை கடத்திய வாகனம் இளைஞர்களால் மடக்கிபிடிப்பு.!

கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கொண்டுசென்ற வாகனத்தை, நேற்றிரவு (06) 7.45 மணியளவில் மடக்கிப் பிடித்த இளைஞர்கள் குழுவொன்று, பொலிஸில் ஒப்படைப்படைத்துள்ளனர்.

குறித்த வாகனத்திலிருந்து ஏழு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதெனவும், அவ்வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதியும், கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும், கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்துக்கிடமான முறையில் இரவுவேளையில் மணற்பிட்டி பகுதியிலிருந்து வாகனமொன்று வருவததை அவதானித்த கொக்கட்டிச்சோலைப் பகுதி இளைஞர்கள், அவ்வாகனத்தை நிறுத்தி அவதானித்தபோது, குறித்த வாகனத்துக்குள் ஏழு மாடுகள் இருந்துள்ளது.

இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியமையால் பதற்ற நிலையும் ஏற்பட்டது.

உடனடியாக அவ்விடத்துக்கு வருகைதந்த பொலிஸார், வாகனத்தையும் சந்தேகநபரையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல முற்பட்ட போது, உரிய நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, மக்கள் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி, இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், உரிய நடவடிக்கையை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு மாடுகள் கொண்டு செல்லப்பட்டன.

இங்கு கூடிய மக்கள் கருத்து கூறிய போது, தமது பிரதேசத்தில், இரவுவேளையில் மாடுகள் எவ்வித அனுமதியும் இன்றி கொண்டு செல்கின்ற சம்பவம் அதிகளவில் இடம்பெறுவதாகவும் அதேபோன்று, மாடுகள் பலவும் களவாடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

தமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டுசெல்லப்படுகின்ற நிலை தொடருமாகவிருந்தால் தமது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் எனவும் மக்கள் குறிப்பிட்டனர்.

About Thinappuyal News