தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

108
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்சின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி கண்டது. அம்லாவின் சதம் வீண் ஆனது.

ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் (20 ஓவர்) சேர்த்து வலுவான தொடக்கம் அமைத்து தந்தனர். டேவிட் வார்னர் 53 ரன்களில் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய ஷேன் வாட்சன் தனது பங்குக்கு 40 ரன்கள் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். இதைத் தொடர்ந்து களம் புகுந்த ஸ்டீவன் சுமித்தின் துணையுடன் ஆரோன் பிஞ்ச் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்கோர் 242 ரன்களை எட்டிய போது, ஆரோன் பிஞ்ச் 109 ரன்களில் ( 127 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார்.

சில வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய ஸ்டீவன் சுமித் (73 ரன், 55 பந்து, 8 பவுண்டரி) இறுதி வரை களத்தில் நின்று அணி 300 ரன்களை கடக்க வித்திட்டார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. முந்தைய ஆட்டத்தில் 21 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை அள்ளிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இந்த மோதலில் 2 விக்கெட்டுகள் எடுத்த போதிலும் 84 ரன்களை வாரி வழங்கினார்.

அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியிலும் தொடக்க வீரர்கள் குயின்டான் டி காக்கும், ஹஷிம் அம்லாவும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் (18.2 ஓவரில் 108 ரன்) திரட்டினர். டி காக் 47 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் அம்லா நிலைத்து நின்று விளையாட, அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் கேப்டன் டிவில்லியர்ஸ் தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. டிவில்லியர்ஸ் 52 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதற்கிடையே தனது 17-வது சதத்தை நிறைவு செய்த அம்லா 102 ரன்களில் (115 பந்து, 9 பவுண்டரி) வெளியேற, தென்ஆப்பிரிக்காவின் நம்பிக்கை முழுமையாக பட்டு போனது.

கடைசி 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை தாரைவார்த்த தென்ஆப்பிரிக்க அணி 44.3 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் குவித்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ஒரு போதும் தோற்றதில்லை. அந்த பெருமையை இப்போதும் (இது 27-வது முறை) தக்க வைத்து கொண்டது.

ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், ஹாஸ்லேவுட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அம்லாவின் சதத்திற்கு பலன் கிடைக்காவிட்டாலும், இந்த ஆண்டில் அதிக சதங்கள் (5) அடித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். விராட் கோலி, ஆரோன் பிஞ்ச் தலா 4 சதங்களுடன் இந்த வகையில் அடுத்த இடத்தில் இருக்கிறார்கள். அத்துடன் அம்லா இன்னும் 90 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி, விவியன் ரிச்சர்ட்சிடம் இருந்து தட்டிப்பறித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது.

SHARE