“இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கொடூர ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்‌ஷ- மைத்திரிபால சிறிசேன.

107

 

“இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கொடூர ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனவரி 8இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்போம்.” – இவ்வாறு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சூளுரைத்தார் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. “நான் ஜனாதிபதியானதும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவேன்” என்றும் அவர் கூறினார்.

obama-vs-mahinda

‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்’ என்ற கோஷத்துடன் கொழும்பு, மருதானை பூக்கர் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொது எதிரணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகம் விரும்பும் ஜனநாயகம் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் அறவே இல்லை. குடும்ப ஆட்சி காரணமாக நாடு இன்று பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த அரசில் அதிருப்தியடைந்து நான் மட்டுமல்ல இன்னும் பலர் வெளியேறி பொது எதிரணியில் இணைவார்கள். நாம் எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம். எமது உயிரை அர்ப்பணித்து கொடூர ஆட்சியிலிருந்து நாட்டைப் பாதுகாப்போம். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், அவர் தலைமையிலான அரசுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் தக்க பாடம் புகட்டவேண்டும். நான் ஜனாதிபதியானதும் உடனே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி அரசமைப்பை சீர்திருத்தி நல்லாட்சியை ஏற்படுத்துவேன். இது உறுதி. எனவே, நாட்டு மக்கள் பொது எதிரணி மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்து ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களிக்கவேண்டும்.

என்னை அமோக வெற்றியடைய வைக்கவேண்டும்” – என்றார். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, விஜயதாஸ ராஜபக்ஷ, ஹர்ஷ டி சில்வா, ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் மற்றும் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர்.

SHARE