கேப்டன் பதவியில் இருந்த போது கும்பளே, ஹர்பஜன் தேர்வு கடினமாக இருந்தது: கங்குலி

117

இந்திய கிரிக்கெட்டின் வெற்றி கேப்டன்களில் ஒருவர் கங்குலி. அவரது தலைமையில் இந்திய அணி 49 டெஸ்டில் 21–ல் வெற்றி பெற்றது. 13 டெஸ்டில் தோற்றது. 15 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

கங்குலி தலைமையில் 146 ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆடி இருக்கிறது. இதில் 76–ல் வெற்றி கிடைத்தது. 65–ல் தோல்வி ஏற்பட்டது. 5 ஆட்டம் முடிவு இல்லை.

இந்த நிலையில் தனது கேப்டன் பதவியில் கும்பளே, ஹர்பஜன்சிங் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வதில் மிகவும் கடினமாக இருந்தது என்று கங்குலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

கேப்டன் பதவி என்பது மிகவும் எளிதானது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அணியில் சிறந்த வீரர்கள் இருக்கும் போது யாரை தேர்வு செய்வது என்பதில் கேப்டன் பதவியில் கடும் சிரமம் இருக்கும்.

நான் கேப்டனாக இருந்த போது தான் கும்ப்ளே, ஹர்பஜன்சிங் இருந்தார்கள். இருவரும் தலை சிறந்த சுழற்பந்து வீரர்கள். வெளிநாட்டு மைதானங்களில் ஒரே ஒரு சுழற்பந்து வீரரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது எனக்கு மிகவும் சவாலாகவும், கடினமாகவும் இருந்தது. ஒவ்வொரு வெளிநாட்டு பயணமும் இதே மாதிரி எனக்கு கடினமாகவே இருந்தது.

பிரிஸ்பேன் டெஸ்டின் போது கும்ப்ளேயை நீக்குவது என்று முடிவு செய்தோம். இந்த போட்டி முடிந்த பிறகு கும்பளே என்னிடம் வந்து நாடு திரும்பி ஓய்வு பெற இருப்பதாக கூறினார்.

நான் அவரை சமாதானம் செய்தேன். நீங்கள் அணிக்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். இதனால் தொடர்ந்து விளையாடுங்கள் இதற்காக வருத்தப்பட வேண்டாம் என்று கூறினேன்.

இதேபோல ஆசிஷ் நெக்ராவை தேர்வு செய்ய முடியாதபோது மிகவும் கவலைப்பட்டேன். இதனால் கேப்டன் பதவி என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்

SHARE