அரசியல் தேவைகளைக் கருத்திற் கொண்டு பொலிஸ் திணைக்களம் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

281

பொலிஸ் திணைக்களத்தில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  சட்டம் ஒழுங்கு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பொலிஸ் திணைக்களத்தை கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் முழு பொலிஸ் திணைக்களமும் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் தேவைகளைக் கருத்திற் கொண்டு பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முழுவதுமாக மாற்றியமைக்க இந்த உயர் அதிகாரி முயற்சிக்கின்றார்.

பொலிஸ் மா அதிபரினால் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள், விலை மனுக்கோரல்கள், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கருமங்களை இந்த உயர் அதிகாரியே மேற்கொண்டு வருகின்றார்.

உயர் அதிகாரியின் நடவடிக்கையினால் அதிருப்திக்கு உள்ளான பெரும் எண்ணிக்கையிலான நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

தகுதி அடிப்படையில் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை நியமித்திருந்தார்.

எனினும் இந்த அதிகாரி அரசியல் தேவைகளுக்காக இந்த பொறுப்பதிகாரிகளை அகற்றி தமக்கு தேவையானவர்களை பொறுப்பதிகாரிகளாக நியமித்துள்ளாh.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்ட பலர் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவருகிறது.

பொலிஸ் திணைக்கள உபகரணக் கொள்வனவிற்கான விலை மனுக் கோரல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்த அதிகாரி தலையீடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை நீடித்தால் நாட்டின் பொலிஸ திணைக்களம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் திணைக்களம் இபோலா தொற்றுக்கு இலக்காகி உள்ளது என சில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கீழ் காணப்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக அண்மையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நியமிக்கப்பட்டார்.

மஹிந்த பாலசூரியவின் நியமனத்தின் பின்னரே இவ்வாறான குழப்ப நிலைமைகள் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE