ஆஸ்திரேலிய அணியினருக்கு ஹியூக்ஸ் மரணத்திலிருந்து விடுபட ஆலோசனை

122

சிட்னி,நவ.29 (டி.என்.எஸ்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்சின் இழப்பு கிரிக்கெட் உலகினரை பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்துக்கும் உள்ளாக்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும், நிர்வாகிகளும், ரசிகர்களும் ஹியூக்ஸ் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அஞ்சலி கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

ஹியூக்ஸ் மடிந்த சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்தின் வாயில் முன்பு ரசிகர்கள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஹியூக்சின் மறைவால் ஆஸ்திரேலிய அணி வீரர்களும், அவருடைய குடும்பத்தினரும் பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். மைதானத்தில் பந்து தாக்கி விழுந்த சம்பவத்தையும், அவருடன் பழகிய கடந்த காலங்களையும் நினைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் கனத்த இதயத்துடன் கண் கலங்கி போய் இருக்கிறார்கள்.

மேலும் ஹியூக்சின் மரண அதிர்ச்சியில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டாக்டர் பீட்டர் புருக்னெர், மனோதத்துவ நிபுணர் மைக்கேல் லாய்ட் ஆகியோர் வீரர்களுக்கு மன வேதனையில் இருந்து மீளுவதற்கான ஆலோசனைகள் வழங்கினார்கள்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஹியூக்ஸ் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இரங்கல் கூட்டம் நடைபெறும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

SHARE