மஹிந்த வந்தாலும் மைத்திரி வந்தாலும் சிங்கள மயமாக்கலே தோற்றுவிக்கப்படும். தமிழ் மக்களுக்கான உரிமைகளை அஹிம்சை வழியிலேயே வென்றெடுக்கவேண்டும். – தினப்புயல் இணையத்தளத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கருத்து.

104

 

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடைபெறுகின்ற தேர்தல்களில் ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டுவந்தாலும் கூட, சிங்கள பௌத்த ஆதிக்கங்கள் மாற்றமடையாமல் தமிழர்களிடத்திலும், தமிழர்களின் அடையாளங்களிலும் திணிக்கப்பட்டுவருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். தமிழர்களின் பூர்வீக குடியேற்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுதல், தமிழர் நிலங்களை சிங்கள மயப்படுத்துதல் போன்ற திட்டங்கள் 1948ம் ஆண்டிலிருந்தே நடைபெறுவதனையும் அனைவரும் அறிந்ததே.

ஒருபக்கம் சிங்கள பௌத்த மயமாக்கல் என்று ஆட்சியாளர்கள் தேர்தல்கள் மூலம் மாறிமாறி வந்தாலும் இந்த பௌத்த ஆதிக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே ஆட்சியாளர்களினால் வேரூன்றியே வந்துகொண்டிருக்கின்றது. உதாரணமாக பண்டா – தந்தை செல்வா ஒப்பந்தங்கள் போன்றவற்றை எமது தலைவர்கள் தமிழர்களின் அடையாளங்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் மேற்கொண்டபோதும் கூட இதுவரை தமிழ்மக்களுக்கான தீர்வினை சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே வழங்கவில்லை. காலங்காலமாக ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதும் பின்னர் அவற்றினைக் கிழித்தெறிவதும் வரலாறாகிப்போனதொரு விடயம். இதனை யாவரும் அறிவர்.

ஆரம்பங்களிலிருந்தே தமிழ் இனத்தின் அடையாளங்களைச் சிதைத்துக்கொண்டும், தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதும், பௌத்த சின்னங்களை உருவாக்கியதையும் நான் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். நான் நேரடியாகவே அந்தந்த இடங்களிற்குசென்று அது பற்றி அறியத்தந்திருக்கின்றேன். இவ்வாறாக காலங்காலமாக சிங்கள மயமாக்கும் நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. உதாரணமாக இன்று தமிழர்களின் அடையாளமாகிய மணலாறு என்ற இடம் தற்போது வெளிஓயா என்ற சிங்கள அடையாளமாக மாற்றப்பட்டிருக்கின்றது.

image5அநுராதபுரம் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களின் சிறிய பகுதிகள் உட்பட வெளிஓயா என்ற பிரதேசத்தினை உருவாக்கி எங்களுடைய மக்களுடன் சிங்கள இனம் திணிக்கப்படுவதனை யாவரும் அறிவர். 2012.06.30 அன்று தமிழர்களின் இடமாகிய மணலாற்றுப்பகுதியில் 8477 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். இன்றுவரை 06 சிங்களப் பாடசாலைகள் அங்கு இயங்கக்கூடியளவிற்கு அந்த இடம் சிங்களக் குடியேற்றங்களால் மாற்றப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் யார் ஆட்சிக்குவந்தாலும் எங்களுக்கான தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை.

இம்முறை ஜனாதிபதித்தேர்தலைப்போல 1948ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவந்த தேர்தல்களிலும் கூட சிங்கள பௌத்த ஆதிக்கம் செலுத்துபவர்களே வெற்றிபெற்றுக்கொண்டிருக்க, அதில் தோற்பது தமழிர்களின் கனவுகளும், எதிர்பார்ப்புக்களுமே ஆகும். இங்கு யார் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தமிழர்களின் உரிமைகள் வெற்றிபெறவேண்டுமாயின் நாம் ஒற்றுமையாக போராட வேண்டும். எங்களது அஹிம்சை வழியிலான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து எங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவேண்டுமே தவிர, இத் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலோ தோற்றாலோ என்னைப் பொறுத்தளவில் எங்களுக்கான தீர்வுகள் பெற்றுத்தரப்படும் என்பது நம்பிக்கையில்லாததொரு விடயமாகவே இருக்கின்றது.

2014-11-27-14.14.04தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே எங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். தமிழர்கள் ஒவ்வொரு தடவையும் ஏமாற்றப்பட்டே வருகின்றார்கள். எங்களுக்கான போராட்டங்களின் ஊடாக அதாவது ஏற்கனவே ஆயுதப்போராட்டம் மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றது. எனவே அஹிம்சைப் போராட்டத்தின் ஊடாக தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற விடயங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்றால் தான் சுதந்திரம் கிடைத்தமைக்கு சமனாகும். அது எங்களுக்கு இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. மேலைத்தேய நாடுகளும் எங்களை ஏமாற்றிவந்தன என்று தான் நான் கூறுவேன்.

ஆனால் இன்று சர்வதேச நாடுகள் எங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர முன்வந்திருக்கும் இந்நிலையில் ஒருவரும் முழுமையான தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்கின்ற நம்பிக்கையில் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தான் தீர்வுகள் கிடைக்கப்பெறுமே தவிர இவ் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் கிடைக்கப்பெறாது என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். நிறைவேற்றதிகார முறை imagesஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் இருந்த காலப்பகுதியிலேயே கொண்டுவரப்பட்டது.

அதற்கு முதல் நிறைவேற்றதிகாரம் இருக்கவில்லை. அப்போது எமக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றதா? அக்காலத்தில் தான் பண்டா – செல்வா ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டது. செல்வநாயகம் ஐயா அவர்கள் இருந்தபொழுது கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற வசனத்தினை ஏன் கூறவேண்டிய நிலை வந்தது. நிறைவேற்றதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்கள் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கப்போவதில்லை என்பதே உண்மையான விடயம். இதில் சர்வதேசம் தலையிட வேண்டும் அல்லது எங்களுடைய போராட்டத்தில் தான் தங்கியிருக்கின்றது.
தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. நான் பிறப்பதற்கு முதலே இலங்கை சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் இன்றைய நாட்கள் வரையில் தமிழர்களுக்கான சுதந்திரம் கிடைக்கப்பெறவில்லை. ஒரு சந்திப்பினைக் கூட ஒழுங்குசெய்ய முடியவில்லை. பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றதே தவிர, எங்களது நிலங்கள் சிறுகச் சிறுக அபகரிக்கப்பட்டு பௌத்த மயமாக்கப்படுகின்றது. ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தான் எல்லைகள் வரை என மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆதலால் இவர்களினால் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்பதை நம்பிக்கொண்டிருக்கமுடியாது. இதேநேரம் சர்வதேசம் தலையிடவேண்டும். அதேபோல தமிழ் மக்களாகிய நாமும் ஒற்றுமையாக இருந்து எங்களுக்கான தீர்வுகளை அஹிம்சைவழியில் போராடி பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்.

TPN NEWS

SHARE