ஊழியரை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இன்போசிஸ் நன்றி

134
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மார்ட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் துப்பாக்கி முனையில் புகுந்த தீவிரவாதி ஒருவன் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.

இந்தியாவை சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் பணியாளரான விஸ்வகாந்த் அகி ரெட்டியும் தீவிரவாதியிடம் பிணைக்கைதியாக சிக்கியிருந்தார். இது குறித்து அந்நிறுவனமும், அவரது பெற்றோரும் கவலையடைந்த நிலையில், சாதுர்யமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய போலீசார் விஸ்வகாந்த்தின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

இதற்கு இன்போசிஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

பிணைக்கைதிகளாக சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க பொறுமையை கையாண்டு உரிய முயற்சி எடுத்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் காவல் அதிகாரிகளுக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே போல் இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்காணித்து, மிகுந்த ஈடுபாடு காட்டிய சிட்னி இந்திய தூதரகத்திற்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்துக்கும் உளப்பூர்வமாக நன்றி கூறுகிறோம் என்று இன்போசிஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

SHARE