பாகிஸ்தானில் தீவிரவாதிகள்: 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி, 500க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிப்பு!

89

 

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலை ஒன்றைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் தீவிரவாதிகளால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் இன்று  தலிபான் துப்பாக்கிதாரிகள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்தனர்.

இவர்களை மீட்க பாகிஸ்தான் இராணுவத்தினர் தயாரானபோது பணயகைதிகள் மீது துப்பாக்கி தாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற இராணுவ பாடசாலையில் ஆயுதம் தாங்கிய 06 பேர் உள்நுழைந்து மேற்கொண்ட தாக்குதலிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து அல்லது ஆறு ஆயுததாரிகள் ராணுவ உடையில் பள்ளிச் சுவரின்  மீது ஏறி துப்பாக்கியால் சுட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர்.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இந்த கட்டிடத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சப்தங்களும், வெடிச்சத்தங்களும் தொடர்ந்தும் கேட்டவண்ணம் இருக்கின்றன.

இன்னும் உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்கின்றது.

சேதவிவரங்கள் முழுமைப்படுத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் தரப்பு அறிவித்துள்ளது.

 

SHARE