குற்றவாளிகளான தேவா, கருணா, கே.பி, தயா மாஸ்ரர் போன்றோரை செல்லப் பிள்ளைகளாக வைத்திருக்கும் அரசு மீது தமிழருக்கு நம்பிக்கை இல்லை!”

152

 

”அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா எனப்படும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் போன்றவர்கள் பயங்கரவாதிகளாக இருந்து குற்றவாளிகளாக வந்தவர்கள்.இவர்கள் அரசினால் செல்லப் பிள்ளைகளாக நடத்தப்படுகின்றார்கள். ஆகவேதான் அரசை பற்றி நல்ல அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் ஏற்படவில்லை.”

இவ்வாறு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து உள்ளார் அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் பணிப்பாளரும், பொருளாதார அறிஞரும், தமிழ் புத்திஜீவிகளில் ஒருவருமான கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்.

இவர் போருக்கு பிந்திய இலங்கையில் தமிழ் மக்களின் நிலை குறித்து கருத்துக் கூறியபோதே மேற்கண்டவாறு கூறி உள்ளார்.

இவர் இப்பேட்டியில் தொடர்ந்து முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறு:-
”மனித உயிர்களை துச்சமாக மதித்தமை, சிறுவர்களை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்த்தமை, யுத்தத்தின் இறுதி நாட்களில் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை ……என்று புலிகள் இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவ்வியக்கம் மீது மக்களில் பெரும்பாலானோரை வெறுப்பு அடைய வைத்தன.

ஆனால் அவ்வெறுப்பு அரசின் மீது நல்லபிப்பிராயத்தையோ, விருப்பத்தையோ ஏற்படுத்தி விடவில்லை. காரணம் பயங்கரவாதிகளாக இருந்து குற்றவாளிகளாக வந்திருப்பவர்கள் என்று நான் மேற்சொன்ன நபர்களை போன்றவர்கள் அரசின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்றமைதான்.

தயா மாஸ்ரர் தற்போது டான் ரீ.விக்காக செய்தி ஆசிரியராக கடமை ஆற்றுகின்றார். 05 மில்லியன் ரூபாய் செலவில் ஆடம்பர வீடு ஒன்றை பருத்தித்துறையில் சொந்த ஊரான தம்பசிட்டியில் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.

இவருக்கு இதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இவரது கிராமவாசிகளால் எழுப்பப்படுகின்ற கேள்வி இது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களிடம் இருந்து வன்னியில் அறவிடப்பட்ட நிதியில் ஒரு பகுதியாகதான் இப்பணம் பெரும்பாலும் இருக்கும். தயா மாஸ்ரரின் மனைவி ஒரு பட்டதாரி ஆசிரியை.

சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கின்றார். அப்பாடசாலையின் அதிபராகின்றமைக்கு முயற்சிக்கின்றார். திறமையினால் அல்ல, கணவனுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச உயர்மட்டத்தினர் ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் இப்பதவியை முயல்கின்றார்.

அகதிகள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அவஸ்தைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றபோது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் சுக போகங்களுடன் ஆடம்பரமாக வாழ்கின்றமையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இது என்ன நீதி? இவ்வாறான காரணங்களால் அரசை குறித்து தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையீனமும், விசுவாசக் குறைவும் காணப்படுகின்றது.

போருக்கு பின்னர் நாட்டில் படிப்படியாக இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றது. மூடப்பட்டு இருந்து ஏராளமான வீதிகள் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.

வட மாகாணத்திலும், நாட்டின் ஏனைய இடங்களிலும் சோதனைச் சாவடிகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் சுருங்கி இருக்கின்றன. படையினரின் மட்டுப்பாடுகள் உதாரணமாக மீன்பிடித் தடை போன்றவை நீக்கப்பட்டு இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும், ஏனைய நகரங்களுக்கும் செல்கின்றமைக்கு முன்பு நடைமுறையில் இருந்திருக்கின்ற மட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன. பொலிஸில் ஆட்களின் பெயர்களைப் பதிவு செய்யும் முறை கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் கொழும்பில் இல்லாமல் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் மேற்சொன்ன ஆரோக்கியமான விடயங்கள் ஒரு புறம் இருக்க, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலத்துக்கே உரித்தான விரும்பத் தகாத விடயங்களும் வட மாகாணத்தில் நின்று நிலவுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இடத்தை அமைச்சர் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்கிற துணை ஆயுதக் குழு நிரப்புகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போலவே சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

கப்பம் கோரல், கப்பத்துக்காக ஆட்களை கடத்துதல், இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை கையில் எடுத்து கோயில்களின் நிதியை கையாடுதல், கட்டிட நிர்மாணங்களுக்கு தேவையான மணலை விநியோகிக்கும் சேவைகளை ஏகபோக உரிமையாக வைத்திருத்தல் போன்றன அவற்றுள் சில. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரின் மகேஸ்வரி நிதியம் என்கிற அமைப்பு குடா நாட்டில் மணலை விநியோகிக்கும் ஏக போக உரிமையை கைப்பற்றி வைத்திருக்கின்றது.

கேபிள் ரீ.வி சேவை வழங்குனர்களிடம் இருந்து குடா நாட்டில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சட்டவிரோதமாக வரி வசூலிக்கின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் நாட்களின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் என்று நம்பப்படுகின்றவர்களால் சில சிறுவர்கள் கடத்தப்பட்டு இருக்கின்றனர்.

ஈரோஸ் இயக்கத்தை சேர்ந்த அருளர் அருள்பிரகாசம் மற்றும் இளையதம்பி இரத்தின சபாபதி ஆகியோரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அன்ரன் பாலசிங்கமும் தனித் தமிழ் நாடு கிடைக்கும் என்று சொல்லி வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்களை, புலம்பெயர் தமிழர்களை பிழையாக வழி நடத்தி விட்டார்கள்.

ஆனால் புலம்பெயர் தமிழ் சமூகம் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனை அவரது மரணம் வரை பிழையாக வழி நடத்தி விட்டது. ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவோ அல்லது வேறு மார்க்கமாகவோ சர்வதேச சமூகம் தலையிட்டு அவரையும், புலிகளையும் காப்பாற்றும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை பிரபாகரனுக்கு ஏற்படுத்தி இருந்தது.” நன்றி /தமிழ் சி .என் .என்

SHARE