மஹிந்தவும் மைத்திரியும் சாடிக்கேற்ற மூடிகள்-சிங்கள பிராந்தியத்தில் தமது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன-இரணியன்

135

 

tna-tamil-eelam

சிங்கள பிராந்தியத்தில் தமது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் உங்கள் நண்பன், சொந்தக்காரன், நீங்கள் என்னை நம்பலாம் என்று கூறிக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவும் தற்பொழுது இனவாதத்தினை கக்கிவிட்டிருக்கின்றார். ஏற்கனவே தமிழ் மக்களுக்கு இனவழிப்பினை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ அதனை மூடிமறைக்க பல்வேறுவிதமான உதவிகளை தமிழ் மக்களுக்கு செய்துள்ளார். அடித்தவனுக்கு இரக்கம் இருக்கும் என்கின்றதான நிலைப்பாட்டில் அதனைச் செய்தாரோ புரியவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பாகவோ அல்லது வடபகுதியில் இருந்து இராணுவங்களை மீளப்பெறுதல் தொடர்பாகவோ எந்தவொரு தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேன. இராணுவத்தை ஒருபோதும் வடபகுதியில் இருந்து பெறமாட்டேன் என்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்திற்கு வெளிக்கொணர மாட்டேன் என சரமாரியான பொய்க்குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி போன்றன தமிழினத்திற்கு இனப்படுகொலையினையே செய்தனர். இதனை யாராலும் மறுத்துவிடமுடியாது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மௌனம் காப்பதன் நோக்கம், இதன் அவசியம் ஏன் என்று தமிழ் மக்களாகிய நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

tna-tamil-eelam maithripala-sirisena11

அரசாங்கத்துடன் ஒட்டுண்ணிகளாகச் செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் தற்பொழுது கட்சி தாவியிருப்பது ஒருபக்கம் வரவேற்கப்பட்டாலும், மறுபுறத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும்.
இவ்வாறுதான் கடந்த காலங்களில் தமிழீழப்போராட்டத்தினை காட்டிக்கொடுத்ததன் விளைவினாலேயே யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சிங்கள தேசத்தினை பொறுத்தவரையிலும் முஸ்லீம்களின் பிளவு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தப்போவதில்லை. இன்று சர்வதேச ரீதியாக உற்றுநோக்கும் பொழுது, இலங்கையில் இரண்டாவது இனமாக தமிழினமே காணப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டம் இன்று சர்வதேச ரீதியில் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

இதனூடாகவே தமிழ்மக்களின் பலம் உயர்ந்து காணப்படுகின்றது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இரண்டையும் தமிழ்மக்களுக்கு அரசு வழங்கப்போவதில்லை. இது தமிழ் மக்களுடைய ஆயுதப்போராட்டத்தினால் மாத்திரமே முடியும் என்பதை பிரபாகரன் நிரூபித்துக்காட்டியுள்ளார். சிங்கள தேசத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றபொழுது தமிழ்;, முஸ்லீம் மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு இவ்விரு கட்சிகளும் செயற்படுகின்றதே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இவ் ஜனாதிபதித் தேர்தல் அமையவில்லை. இன்று அரசிற்கு வக்காளத்து வாங்கும் தமிழ்க்கட்சிகள் ஒன்றினைப் புரிந்துகொள்ளவேண்டும். சமாதானத்தினை பெற்றுத்தந்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்று கூறிக்கொண்டு அவர் பின்னே எவ்வளவு காலம் செல்லப்போகின்றீர்கள்? இனவிடுதலைக்காகவே ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்பன புறப்பட்டன. இறுதியாக இவ்வியக்கங்கள் அனைத்தும் தமிழினத்தினையே காட்டிக்கொடுத்ததன் விளைவாக ஒரேயொரு இலட்சியத்திற்காக போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

பின்னர் அரசியல் ரீதியான நிலைப்பாட்டிற்குள் விடுதலைப்புலிகள் இவ்வியக்கங்களுக்கு அரைகூவல் விடுத்ததன் விளைவாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்போன்ற இயக்கங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கீழ் ஒன்றுசேர்ந்தன. இவர்கள் கட்சியில் இருந்தவாறு; வௌ;வேறான கருத்துக்களை தெரிவிப்பது நிறுத்தப்படவேண்டும். தேசியப்பட்டியலில் வந்தவர்கள் கூட இன்று மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் கருத்துக்களைக் கூறுவது அநாகரிகமானது. காலத்தின் தேவை கருதி ஆட்சிமாற்றம் ஒன்று தமிழ்மக்களிடையே தேவைதான். அதற்காக நாம் தன்மானத்தை விட்டுக்கொடுக்க இயலாது. யார் ஜனாதிபதியாக வருகிறார்களோ அவர்களுடன் பேச்சுக்களை நடாத்தி அடுத்தகட்ட நகர்வுகளை ஆரம்பிக்கலாம்.

திம்பு பேச்சுவார்த்தை முதல் டோக்கியோ வரை கிட்டத்தட்ட 35 சர்வதேச பேச்சுகள் என நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் நாம் ஒன்றையும் காணவில்லை. தொடர்ந்தும் பேசிக்கொண்டேயிருக்கின்றோம். இனியும் பேசுவோம். அதற்காக எமது நோக்கங்களையும் இலக்கினையும் விட்டு கீழ் இறங்கிப்போகக்கூடாது. இதனைவிட்டு செல்வோம் என மஹிந்தவும் மைத்திரியும் தமிழ் மக்களிடத்தில் எதிர்பார்க்கின்றனர். இதில் முஸ்லீம் மக்கள் விதிவிலக்கல்ல. முஸ்லீம் மக்களை ஒரு பொருட்டாக சிங்கள தேசம் எண்ணிப்பார்க்கவில்லை. ஆனால் தமிழினத்தினையும், தமிழினத்திற்காக போராடிய பிரபாகரனையும் சிங்கள தேசம் இன்றுவரை உச்சரித்துக்கொண்டிருக்கின்றது.

அதேநேரம் மஹிந்த, சந்திக்கா, ஜே.ஆர், பிரேமதாஸா, சிறிமாவோ, டட்லி போன்ற அரசுகளை மக்கள் மறப்பதாகவில்லை. அனைவரும் தமிழ் மக்களுக்கு துரோகம் விளைவித்து இனப்படுகொலையினை மேற்கொண்டவர்களே. தமிழ் மக்களாகிய நாமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் ஒற்றுமையாக இருப்பதை சிங்கள தேசம் ஒருபோதும் விரும்பவில்லை. தமிழ் மக்களின் ஒற்றுமையே இன்று பலமாகவிருக்கின்றது. இதனை சீர்குலைப்பதற்காக மஹிந்தவும், மைத்திரியும்; மாறி மாறி கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மைத்திரி வந்தாலும் மீண்டும் தமிழின சுத்திகரிப்பு ஏற்படலாம். தமிழினம் ஆயுதமேந்திப் போராடலாம். அல்லாது போனால் மைத்திரி அரசுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வுகளை பெறலாம். அடுத்த தலைமுறையாவது தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக போராடும் என்பதில் சந்தேகமில்லை. மஹிந்த வந்தாலும், மைத்திரி வந்தாலும்; ஒன்றுதான்.

SHARE