393 டெஸ்ட் விக்கெட்டுக்கள் வீழ்த்தி தென்ஆப்பிரிக்க வீரர்களில் 2-வது இடத்தைப் பிடித்தார் ஸ்டெயின்

115
தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 393 விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தியுள்ளார். இதனால் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பரிக்கா வீரர்கள் பட்டியலில் நிட்னியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஸ்டெயின் 146 இன்னிங்சில் 393 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது அவரது சிறப்பாகும். நிட்னி 190 இன்னிங்சில் 390 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது நிட்னியின் இன்னிங்ஸ் சிறப்பாகும்.

பொல்லாக் 202 இன்னிங்சில் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது அவரது இன்னிங்ஸ் சிறப்பம்சமாகும்.

சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் வார்னே 708 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் கும்ப்ளே 619 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 6-வது இடத்திலும் உள்ளார்

SHARE